Published : 16 May 2015 01:09 PM
Last Updated : 16 May 2015 01:09 PM
அறிவியல் வளர்ச்சிக்குப் பிறகு நம் வாழ்க்கை முறை பல மாற்றங்களைச் சந்திருக்கிறது. நம் அன்றாட நாளின் தேவையை நிறைவேற்றும் விதமாகப் பல கண்டுபிடிப்புகளை அறிவியல் நமக்குத் தந்துள்ளது. உதாரணமாக கிரைண்டர், மிக்ஸி, டோஸ்டர், ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், ஹீட்டர், காபி மேக்கர் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இது இல்லாமல் பொழுபோக்கவும் டிவி, மியூஸிக் சிஸ்டம் என இன்னும் பல உள்ளன.
இந்தக் கண்டுபிடிப்புகள் எல்லாம் சரிதான். பரபரப்பாக ஆகிவிட்ட நம் வாழ்க்கைக்கு இவை தேவை. ஆனால் அவை வெளியேற்றும் வெப்பம் நாம் வாழும் பூமியை வெப்பமடையச் செய்துகொண்டிருக்கிறது என்பதையும் நாம் உணர வேண்டும்.
கழிப்பறையின் வாசலில் தேவையில்லாமல் எரியும் ஒரு சிறிய குண்டு பல்பின் வெளிச்சம்கூட இந்தப் பூமியை வெப்பமடையச் செய்வதில் சிறு பங்களிப்பை அளிக்கும் என்பதுதான் உண்மை. எங்கள் ஒரு வீட்டின் வெப்பத்தால் பூமி வெப்பமடையுமா என்ன எனக் கேட்பது சரிதான். ஆனால் ஒவ்வொருவரும் இப்படி நினைத்துப் பொறுப்பின்றிச் செயற்பட்டால்?
அதுதான் நடந்துவருகிறது. சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் கடந்த மாத ஆய்வு அறிக்கை இதை உறுதிசெய்கிறது. தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் பசுமைக்குடில் வாயுக்களைவிட அதிக அளவில் சுற்றுச்சூழலைப் பாதிப்பது வீட்டிலிருந்து வெளிவரும் பசுமைக்குடில் வாயுக்களே என்று உறுதிப்படுத்தினர். இதில் நமது சென்னை முக்கிய இடம் வகிக்கிறது. பூமியை வெப்பமடையச் செய்வதில் இந்தப் பசுமைக்குடில் வாயுக்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
வெப்பமைடையச் செய்வதில் மின்சாரச் சாதனப் பொருள்கள்தான் முக்கிய இடம் வகிக்கின்றன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருள்கள் எல்லாம் மின்சாரத்தில் இயங்கக்கூடியவை. இவை அல்லாமல் சமையல் எரிவாயு அடுப்பும் இந்தப் பசுமைக்குடில் வாயு உருவாகக் காரணமாக உள்ளது.
இந்தப் பொருள்களை நம்மால் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. ஏனெனில் வீட்டு உபயோகப் பொருள்களின் துணையுடனே நாம் ஒரு நாளைக் கடக்க வேண்டியிருக்கிறது. இந்தச் சூழலில் எப்படிப் பசுமைக்குடில் வாயு உருவாவதைத் தவிர்க்க முடியும்?
இந்தக் கேள்வி வீட்டின் கட்டிட அமைப்பில் இருந்தே தொடங்குகிறது என்கிறார்கள் தேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர்கள். அதாவது வெளிச்சம் வராதபடி நெருக்கி, இடுக்கி கட்டப்பட்ட கட்டிடத்தை வீடு என நினைத்து விடுகிறோம். சென்னை போன்ற நெருக்கடி மிகுந்த நகரங்களில் இம்மாதிரியான வீடுகளைப் பார்க்க முடியும். மின்விளக்கு இல்லாமல் புழங்கவே முடியாது. ஜன்னல்கள் இருக்காது. அதனால் உள்ளே எந்நேரம் ஏசி, ஃபேன் இயக்க வேண்டியிருக்கும். உள்ளிருக்கும் வெப்பமான காற்று வெளியேறவும் வழி இருக்காது.
மேலும் பசுமைக் கட்டிடப் பாணியில் கட்டிடம் கட்டும்போது இந்தப் பசுமைக்குடில் வாயு உருவாவது குறைய வாய்ப்புள்ளது. இந்தப் பசுமைக் கட்டிட முறைப்படி வீடு கட்டினால் செலவு சிறிதுதான் அதிகமாகும். ஆனால் பலன் மிக அதிகம். நாம் தற்காலிகச் செலவைக் கருத்தில் கொண்டு பசுமைக் கட்டிடப் பாணியைத் தேர்ந்தெடுக்கத் தயங்கிறோம்.
சரி, நாம்தான் ஏற்கனவே வீடு கட்டியாகிவிட்டதே இனி என்ன செய்ய என நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. தகுந்த பசுமைக் கட்டிட ஆலோசகரைக் கொண்டு வீட்டின் வடிவமைப்பை மாற்றியமைக்கலாம். பசுமைக் கட்டிடப் பாணியின் முக்கிய அம்சமே அது இயற்கை ஒளியை, காற்றைப் பயன்படுத்தும் வகையில் அமைப்பதுதான். அதனால் மின்சாரப் பயன்பாடு குறையும் வாய்ப்புள்ளது.
காற்று வருவதற்குத் தெற்கு மற்றும் கிழக்கு திசைகளில் இடம் ஒதுக்கப்பட வேண்டும். இவ்விரு திசைகளில் இருந்துதான் அதிகபடியான குளிர் காற்று வீசுகிறது. மாடித் தோட்டம், பால்கனித் தோட்டம் அமைக்கலாம். பசுமைக் குடில் வாயுவைக் குறைப்பதும் நம் பரபரப்பான வாழ்க்கையின் ஒரு கடமையாகக் கொள்ள வேண்டும். அதில்தான் பூமியின் ஆரோக்கியமும் நம் ஆரோக்கியமும் அடங்கியிருக்கிறது .
தொகுப்பு: ஐஸ்வர்யா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT