Published : 30 May 2015 11:18 AM
Last Updated : 30 May 2015 11:18 AM
வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தைப் பண்ணிப் பார் என்பது சாதாரணமான வாசகமாகத் தெரிந்தால்கூட, குடும்பத் தலைவனுக்கு அது ஒரு சவாலான கேள்வியாகவே இருக்கிறது.
என்னை மீறி வீடு கட்டிவிடுவாயா? எனும் காலத்தின் கேள்வி நம் கண்முன்னே காட்சி தருகிறது.
எனக்குப் பல விதங்களில் சவாலாக இருந்தால்கூட அது பல படிப்பினைகளைத் தந்தது. மத்திய அரசுத் துறையில் பணிபுரிவதால் எங்கு மாறுதலில் சென்றாலும் அரசுக் குடியிருப்பு கிடைத்து விடும். 1980-ல் வேலைக்குச் சேர்ந்த நான் 2000 வரையிலும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலேயே ஊர் ஊருக்குக் குடிமாறிக் கொண்டிருந்தேன். வீடு கட்டும் தீர்மானம் 2000-ம் ஆண்டு மார்ச் மாதத்தில்தான் முடிவானது.
வாங்கிப் போட்டிருந்த நிலத்தில் முதலில் ஆழ்துளை கிணறு அமைக்கலாம் என முடிவானது. 250 அடி ஆழத்தில் கிணறு அமைத்து 6 மாதங்கள் அப்படியே விட்டுவிட்டோம். பஞ்சாயத்து அலுவலகத்தில் ப்ளான் அப்ரூவல் வாங்கி நிர்வாகத்திலும் அனுமதி வாங்கி வேலையை ஆரம்பித்தோம். போர் போட்டு 6 மாதங்கள் ஆனதால் 200 அடிக்கு மட்டுமே குழாய் இறக்க முடிந்தது. 1000 சதுர அடி, 6 லட்சம் செலவாகும். பணிபுரிந்த துறையில் கடன் உடனே வந்துவிடும் என்றார்கள். நம்பி வேலையை ஆரம்பித்தேன். கையில் இருந்தது 60 ஆயிரம் மட்டுமே.
கை கொடுத்த உறவு
வேலை பார்த்தது அறந்தாங்கியில். வீடு கட்டியது ஆண்டிப்பட்டியில். 15 நாள் விடுப்பு. 15 நாள் வேலை. நான் இல்லாத சமயம் எல்லா வேலையும் பார்த்துக் கொள்ள பாண்டி என்னும் தம்பியை ஏற்பாடு செய்தேன். வீட்டை அவன்தான் கட்டினான் என்றே சொல்லலாம். அவ்வளவு நேர்மை, நாணயம் உள்ளவன். சித்தாளுக்கு வெளியில் ஏன் அலைய வேண்டும்? உறவினர்களில் கொத்தனார்கள் இருந்தார்கள். அவர்களையே வீட்டை முடித்துக் கொடுக்கச் சொன்னேன். முதலில் தயங்கினார்கள். நான்தான் தைரியம் சொன்னேன்.
என் வீடு அவர்களின் தொழிலுக்குப் பயிற்சிக் களமாக மாறியது. கருங்கல்லில் அடித்தளம் உருவானது. லோன் கிடைத்துவிடும் என்று சொல்லியே சிமெண்ட், கம்பி மற்றும் மரச்சாமான்கள் வாங்கும் கடை எல்லாவற்றிலும் கடன் சொல்ல ஆரம்பித்தேன். ஆதரவு கொடுத்தார்கள். கொத்தனார், சித்தாள்களிடமும் கடன் வாங்க ஆரம்பித்தேன். கேட்ட இடத்தில் எல்லாம் கடன் கிடைத்தது. கட்டிடம் உயர்ந்ததோ இல்லையோ நன்றிக்கடன் அதிகமானது.
மாடிப்படி கட்டுவதில் சில மாறுதல்கள் செய்ய வேண்டி வந்தது. ஜன்னல்களை உள் பக்கம் திறக்கும்படி செய்திருந்தார்கள். அதை மாற்றி ஜன்னல் கதவுகள், வெளிப்பக்கம் திறக்கும்படியாக மாற்றியமைக்க நேர்ந்தது.
தென்மேற்கு மூலையில் மேல்நிலைத் தண்ணீர்த் தொட்டியை மிக உயரமாக வைத்துக் கட்டி விட்டார்கள். எங்கே இருந்து பார்த்தாலும் அது மட்டும் எனக்குச் சிறிது வருத்தம்தான். தண்ணீர்த் தொட்டிக்கு இவ்வளவு உயரம் தேவையா?
மனைவியின் யோசனை
வீடெல்லாம் கட்டி முடித்தவுடன் வாஸ்து பார்க்கும் ஒரு நண்பர் சொன்னார், நீங்கள் தண்ணீர்த் தொட்டி கட்டியிருந்த அளவைப் பார்த்து, இந்த வீடு கண்டிப்பாக மாடி வீடாகத்தான் முடியும் என நான் தீர்மானம் செய்து பல பேரிடமும் சொல்லி இருக்கிறேன். அது போலவே அமைந்தது என்றார். உண்மையிலேயே அந்தப் பெருமை கொத்தனாருக்குத்தான் சேரும். அவர்தான் பலரும் சொன்னதையும் மீறி உயரமாகக் கட்டியவர். மாடியாகவும் மாற்றியவர்.
அலுவலகத்தில் இருந்து முதல் தவணையாக வந்த 2 லட்ச ரூபாயில் 75 சதவீதம் வேலை முடிந்துவிட்டது. என்ன கொடுமை என்றால் சிமெண்ட் மூட்டை ரூ.110க்கு விற்றபோது கையில் பணம் இல்லை. 2 மாதங்கள் வேலை நடக்கவில்லை. கையில் பணம் வந்தபோது சிமென்ட் விலை 200 ரூபாய்க்குப் போய்விட்டது.
கம்பி கட்டும் வேலைக்கு போஸ் என்னும் புண்ணியவானை அறிமுகப்படுத்தினார்கள். அவர் மூலம் பல வீடுகளையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
எல்லாவற்றுக்கும் ஓடுகள் வாங்க கேரளாவில் உள்ள திருச்சூர் செல்லலாம் என முடிவானது. அலைந்து திரிந்து வாங்கி வந்தோம். இந்த நேரத்தில் கடன் இரண்டாவது தவணையும் வந்தது. வீட்டின் உள்ளே பலவித அலங்கார வேலைப்பாடு செய்து கிரானைட் பதிக்கலாம் என நானும் நண்பர்களும் முடிவு செய்தோம்.
அதற்குப் பதிலாக மாடி கட்டிவிடலாமே என என் மனைவி சொன்னாள். உண்மையிலேயே சரியான யோசனை. அதற்கு உண்டான வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தோம். ஒரு வழியாக மாடி முடிந்தது. மொத்தமாக 2400 சதுர அடி. 2002-ல் குடியேறினோம். இந்த வீட்டை நாம்தான் கட்டினோமோ என்று இப்போது மலைப்பாகத் தெரிகின்றது. கொத்தனார், சித்தாள், எலக்ட்ரிஷியன், கார்பென்டர், கடைக்காரர்கள் எல்லோருமே நாணயமாக நடந்து கொண்டார்கள்.
வீடு கட்டியதில் நான் கற்றுக்கொண்ட அனுபவங்கள் இவை...
ஆழ்துளை கிணறு அமைத்தவுடன் குழாயை மாட்டி விடுங்கள். தாமதம் வேண்டாம்.
நல்ல முகப்பைத் தேர்ந்தெடுங்கள்.
நம்பிக்கையான நபர்களிடம் கடன் கேளுங்கள்.
திறமையான கொத்தனார்களை அமர்த்துங்கள்.
கடன் கொடுத்த கடைக்காரர்களிடம் அடிக்கடி முகத்தைக் காட்டுங்கள்.
பொருட்களின் விலை விபரங்களை பல இடங்களில் திரட்டுங்கள்.
உபயோகமான எலக்ட்ரிக்கல் லைட்டுகள், தேவையான அமைப்புகள் போதும். வீண் ஆடம்பரம் வேண்டாம்.
கூடுமான வரை பில்லர் எழுப்பிக் கட்டிடம் கட்டுங்கள். எதிர்காலத்தில் பல மாடிகளுக்கான அமைப்போடு கட்டுங்கள்.
அடுத்தவர் காம்பவுண்டுக்குள் நுழையும் வண்ணம் மரங்களை வளர்க்க வேண்டாம்.
வீடு கட்டி முடிந்தவுடன், அதை அப்படிச் செய்திருக்கலாம், இதை இப்படிச் செய்திருக்கலாம் என்று பலர் சொல்லும் ஆலோசனைக்கு கவலைப்படாதீர்கள். வீடு கட்டுவதும் ஒரு வாழ்க்கைக் கல்விதான்.
வீடு வாங்குவது, கட்டுவது தொடர்பாக உங்களுக்குப் பல விதமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். அதிலுள்ள சிரமங்களையும் சுவாரசியங்களையும் எங்களுக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: sonthaveedu@thehindutamil.co.in
கடிதத் தொடர்புக்கு:
சொந்த வீடு, தி இந்து கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை- 600 002.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT