Published : 04 Apr 2015 12:44 PM
Last Updated : 04 Apr 2015 12:44 PM
மின்சாரம் இல்லாத வாழ்க்கை சாத்தியமே இல்லாதது இன்று. அப்படி அவசியமான மின் இணைப்பு வீடு கட்டும் முன்பே நமக்குத் தேவைப்படும். வீடு கட்டும் பணிக்கு நீர் அவசியமானது. நீருக்காக வெளியே அலைவதைக் காட்டிலும் வீடு கட்டப் போகும் நிலத்திலேயே ஆழ்துளை கிணறு அமைப்பது சாலச் சிறந்தது. மட்டுமல்லாமல் கட்டிடப் பணிகளுக்கு விளக்கு அமைக்க வேண்டும். இதற்குத் தற்காலிக மின் இணைப்பு பெற்றுக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.
எங்கே கிடைக்கும்?
தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகத்தின் பிரிவு அலுவலகங்களிலும் மின் இணைப்புக்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். >http://www.tangedco.gov.in/formgallery1.php என்னும் இணையதளத்திலும் விண்ணப்பத்தைப் பெறலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அந்தப் பகுதி பிரிவு அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
மின் இணைப்புக் கோரும் நபர் இடம், வீட்டின் உரிமையாளராக இருக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட உரிமையாளரிடமிருந்து அனுமதிக் கடிதம் வாங்கியிருக்க வேண்டும். வீடு, நிலம் போன்றவற்றின் பட்டா மற்றும் பத்திரத்தின் நகல். வீட்டின் நிழற்பட அச்சுமுறை நகல் (ப்ளூ பிரிண்ட்).
வீட்டுக்கான ஒயரிங் முழுவதுவமாக முடிக்கப்பட்டுவிட்டன என்பதை அரசு அனுமதி பெற்ற மின் பொறியாளர் உறுதிசெய்ய வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்றவர்தான் வயரிங் பணிகளைப் பார்க்க வேண்டும். பிறகு அவரிடம் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும்.
கட்டணம்
தனி இணைபைத் (Single Phase) தேர்ந்தெடுக்கிறோமா, மும்முனை (Three Phase) இணைப்பைத் தேர்ந்தெடுக்கிறோமா என்பதைப் பொறுத்து கட்டணம் வேறுபடும். மேலும் இணைப்புக் கோரும் இடத்துக்கு அருகில் மின் கம்பம் இல்லையெனில் அந்தச் செலவு இதில் கணக்கிடப்படும். அருகில் உள்ள மின்மாற்றியின் (Tranformer) திறன் போதுமானதாக இருக்கிறதா என்பதையும் ஆய்வுசெய்து கட்டணத் தொகையை முடிவுசெய்வார்கள்.
அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் ஒரு வாரத்தில் இருந்து 30 நாட்களுக்குள் மின் இணைப்பு கிடைத்துவிடும். மின்மாற்றி அமைக்க வேண்டும் எனும் பட்சத்தில் 60 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை ஆகலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT