Last Updated : 18 Apr, 2015 03:27 PM

 

Published : 18 Apr 2015 03:27 PM
Last Updated : 18 Apr 2015 03:27 PM

கோடையில் மிளிரும் மஞ்சள்

இயற்கை எழிலுடன் விளங்கும் மலர்கள், பழங்கள், கதிரவனின் ஒளி என மஞ்சள் நிறத்தின் அழகை அடுக்கிக்கொண்டே போகலாம்.

பொதுவாக, வீட்டுச் சுவர்களில் அதிகமாகக் காணப்படும் நிறம் மஞ்சள்தான். ஆனால், அந்தக் காரணத்தினாலேயே உங்கள் வீட்டுக்கு மஞ்சள் நிறத்தைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்று அர்த்தமல்ல. மஞ்சள் நிறத்தை வைத்தே உங்கள் வீட்டுக்கு நீங்கள் பல விதமான தோற்றத்தை உருவாக்கலாம். அதுவும் இந்தக் கோடையில் மஞ்சள் நிறம் உங்கள் வீட்டுக்குப் புத்துணர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்கும்.

ஆங்காங்கே அடிக்கலாம்

வீட்டின் சுவரில் மட்டுமே வண்ணங்களை வைத்து அலங்கரிக்க வேண்டும் என்று அவசியமல்ல. ஓர் அறையில் இருக்கும் பல்வேறு பொருட்களை மஞ்சள் நிறத்தில் தேர்ந்தெடுத்து ஆங்காங்கே கண்களில் படும் இடத்தில் அடுக்கி வைக்கலாம். இதற்காகப் பெரிய பொருட்களைத் தேர்ந்தெடுப்பதைவிடச் சின்னச் சின்னப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கலாம். இதனால் வீட்டின் அலங்காரச் செலவும் குறையும். ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ற மாதிரி இந்த மஞ்சள் நிறத்தின் சாயலை மாற்றிக்கொள்ளவும் செய்யலாம்.

மயக்கும் மஞ்சள்

மஞ்சள் வசீகரமானது. இந்த வண்ணத்தைப் பல சாயல்களில் உங்கள் வீடுகளுக்குப் பயன்படுத்தலாம். இது வீட்டுக்கு ஒருவிதமான புத்துணர்ச்சியைக் கொடுக்கும். வரவேற்பறையின் சுவரில் அடர்த்தியான மஞ்சள் சாயலைப் பயன்படுத்தலாம். அதே மஞ்சள் சாயலைத் தரைவிரிப்புக்குப் பயன்படுத்தாமல் வேறு ஒரு மிதமான மஞ்சள் சாயலைப் பயன்படுத்தலாம். அறைக்கலன்களுக்கு மஞ்சள் நிறத்தின் ‘கான்ட்ராஸ்ட்’ வண்ணங்களைப் பயன்படுத்தலாம். இது வீட்டு அலங்காரத்துக்கு ஒரு சமகாலத் தன்மையைக் கொடுக்கும்.

மிதமான வண்ணம்

மென்மையான நிறங்களை விரும்புபவர்கள் மஞ்சள் நிறத்தையே மிதமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். சாம்பல் நிறமும், வெள்ளை நிறமும் வீட்டுக்குக் கொடுக்கும் மென்மையான தோற்றத்தை வெளிர் மஞ்சள் நிறம் கொடுக்கும். இந்த நிறம் வீட்டுக்கு அமைதியான தோற்றத்தையும், வரவேற்கும் தன்மையைக் கொடுக்கும்.

மஞ்சள் பூக்கள்

ஓர் அறையின் அழகை அதிகப்படுத்த வேண்டுமென்றால் அங்கே அலங்காரத்தில் மலர்களை இணைக்க வேண்டும். மஞ்சள் நிறத்தில் வீட்டை அலங்கரிக்கும்போது இந்த மலர் அலங்காரம் இன்னும் வசதியானதுதான். மகிழ்ச்சி தரும் மஞ்சள் பூக்களை வைத்து வரவேற்பறையை அலங்கரிக்கும்போது வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நீங்கள் வரவேற்பதற்கு முன்னர் அந்தப் பூக்கள் வரவேற்றுவிடும்.

இணைப்பதன் ரகசியம்

மஞ்சள் நிறத்தில் வீட்டை அலங்கரிப்பதில் பல வசதிகள் இருக்கின்றன. ஏனென்றால், மிக எளிமையாக மற்ற நிறங்களுடன் ஒத்துப்போகும் தன்மை மஞ்சளுக்கு அதிகம். இதனால், வீட்டின் அலங்காரத்தில் எந்த நிறத்துடன் வேண்டுமானாலும் மஞ்சளை இணைக்கலாம்.

ஓர் அடர்த்தியான சிவப்பு நிறத்துடனும் இணைக்கலாம். மென்மையான நீல நிறத்துடனும் இணைக்கலாம். இல்லையென்றால் புத்துணர்ச்சி தரும் பச்சை நிறத்துடனும் இணைக்கலாம். இப்படி எளிதில் மற்றொரு வண்ணத்துடன் இணைவதால் மஞ்சள் நிறத்தை வைத்து உங்கள் வீட்டு அலங்காரத்தில் மாயங்கள் செய்யலாம்.

மஞ்சள் நிறத்தில் வீட்டை அலங்கரிப்பதில் பல வசதிகள் இருக்கின்றன. ஏனென்றால், மிக எளிமையாக மற்ற நிறங்களுடன் ஒத்துப்போகும் தன்மை மஞ்சளுக்கு அதிகம். இதனால், வீட்டின் அலங்காரத்தில் எந்த நிறத்துடன் வேண்டுமானாலும் மஞ்சளை இணைக்கலாம்.

ஓர் அடர்த்தியான சிவப்பு நிறத்துடனும் இணைக்கலாம். மென்மையான நீல நிறத்துடனும் இணைக்கலாம். இல்லையென்றால் புத்துணர்ச்சி தரும் பச்சை நிறத்துடனும் இணைக்கலாம். இப்படி எளிதில் மற்றொரு வண்ணத்துடன் இணைவதால் மஞ்சள் நிறத்தை வைத்து உங்கள் வீட்டு அலங்காரத்தில் மாயங்கள் செய்யலாம்.

குழந்தைகளுக்குப் பிடிக்கும்

குழந்தைகள் அறையை வடிவமைப்பதற்கும் சிறந்த தேர்வாக மஞ்சள் நிறம் இருக்கும். ஏனென்றால், மஞ்சள் நிறம் கொண்டாட்டமான மனநிலையை உருவாக்கும் தன்மை கொண்டது.

ஒரேயடியாகக் குழந்தைகள் அறை முழுவதையும் மஞ்சளால் வடிவமைக்காமல் அதனுடன் ஆரஞ்சு, நீலம், பச்சை போன்ற வண்ணங்களையும் இணைத்துக்கொள்ளலாம். இது குழந்தைகள் அறைக்குக் கூடுதல் உற்சாகத்தைக் கொடுக்கும்.

சமையலறைக்கு ஏற்றது

சமையலறையை வடிவமைப்பதற்கும் மஞ்சள் நிறத்தைத் தேர்ந்தெடுக்கலாம். சமையலறை அலமாரிகள், சாப்பாட்டு மேசை போன்ற வற்றில் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்தலாம். இது சமையலறைக்கும் பிரகாசமான தோற்றத்தைக் கொடுக்கும்.

கவனமாகப் பயன்படுத்தினால் மஞ்சள் வண்ணம் நெஞ்சை அள்ளும் என்பதை உணர்வீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x