Last Updated : 11 Apr, 2015 02:34 PM

 

Published : 11 Apr 2015 02:34 PM
Last Updated : 11 Apr 2015 02:34 PM

வட்டியைக் குறைக்கத் தயக்கம் ஏன்?

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை (ரிசர்வ் வங்கியிடம் வணிக வங்கிகள் வாங்கும் கடனுக்கான குறுகிய கால வட்டி) குறைக்கும் போதெல்லாம் வங்கிகளில் வீட்டுக் கடன் வட்டி உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படுவது வாடிக்கை என்றே சொல்லாம்.

ஆனால், முன் எப்போதும் பின்பற்றாத அணுகுமுறையாகக் கடந்த மூன்று மாதங்களில் இரண்டு முறை ரெப்போ ரேட்டை 0.50 சதவீதம் ரிசர்வ் வங்கி குறைத்த பிறகும் பெரும்பாலான வணிக வங்கிகள் வட்டியைக் குறைக்க ஆர்வம் காட்டவில்லை. வட்டியைக் குறைத்தால் வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான தவணைத் தொகை (இ.எம்.ஐ.) குறையும் என்ற நிலையில், வங்கிகள் வட்டியைக் குறைக்கத் தயங்குவது ஏன்?

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரத ஸ்டேட் வங்கி திடீரென 0.15 சதவீத வட்டிக் குறைப்பு அறிவிப்பை வெளியிட்டது. இதனை தொடர்ந்து தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ 0.25 சதவீதமும், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி 0.15 சதவீதமும் வட்டிக் குறைப்பு அறிவிப்பை வெளியிட்டன.

இந்த வங்கிகளின் வட்டிக் குறைப்பின் பின்னணியில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் இருந்தார் என்று நிச்சயம் அடித்துச் சொல்லலாம். அண்மையில் நாணயக் கொள்கையை வெளியிட்டு ரகுராம் ராஜன் பேசும்போது, வட்டிக் குறைப்பு செய்யும்படி வங்கிகளை வலியுறுத்தப்போவதாகக் கூறியிருந்தார். வங்கிகள் வட்டிக் குறைப்பு செய்யாதது குறித்தும் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்துப் பொதுத்துறை வங்கிகளில் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தனியார் வங்கிகளில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. வங்கிகள் வட்டிக் குறைப்பு அறிவிப்பை வெளியிட்டன. இந்த வங்கிகளைத் தொடர்ந்து பிற பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் வட்டியைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி வங்கிகள் வட்டியைக் குறைக்கும்போது வீட்டுக் கடன் உள்ளிட்ட இதர கடன்களுக்கான மாதத் தவணை (இ.எம்.ஐ.) குறையும். இதனால் வாடிக்கையாளர்கள் பயனடைவதோடு, புதிதாகக் கடன் வாங்கப் பல வாடிக்கையாளர்கள் முன் வரவும் செய்வார்கள்.

இவை ஒருபுறம் இருக்க, ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டைக் குறைத்த பிறகும் வணிக வங்கிகள் வட்டிக் குறைப்பு செய்ய ஆர்வம் காட்டாததற்கு வேறு சில காரணங்கள் கூறப்படுகின்றன. ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறும் குறுகிய காலக் கடனில் இருந்து, வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களைக் கொடுப்பது இல்லை என்று வங்கிகள் கூற ஆரம்பித்துள்ளன.

வாடிக்கையாளர்கள் வங்கிகளில் செய்யும் முதலீடுகள் மூலமே கடன்களை வழங்குவதாகவும் வங்கிகள் கூறுகின்றன. மேலும் பொருளாதார மந்த நிலை காரணமாக வாடிக்கையாளர்கள் கடன் வாங்குவதும் குறைந்திருப்பதாகவும் வங்கிகள் காரணங்களை அடுக்குகின்றன.

வங்கிகள் இப்படிக் கூறும் நிலையில், பெரும்பாலான வங்கிகள் வட்டிக் குறைப்பு செய்யும் என்று எதிர்பார்ப்பது சாத்தியமா? “வங்கிகள் சில காரணங்களைக் கூறி, ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டைக் குறைத்தாலும் அதில் வங்கிகள் பயன் அடையவில்லை என்று கூறுகின்றன. எனவேதான் ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டைக் குறைத்தபோதும் அந்தப் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியவில்லை என்றும் வங்கிகள் தரப்பு கூறுகின்ற

ன. ஆனால், வங்கிகள் கூறும் இந்தக் காரணத்தை ரிசர்வ் வங்கி ஏற்கவில்லை. வட்டிக் குறைப்பு செய்யச் சொல்லி ரிசர்வ் வங்கி அழுத்தம் கொடுக்கும்பட்சத்தில் இன்னும் பல வங்கிகள் வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டியைக் குறைக்க முன்வரும். அதனால் வீடு வாங்கி இ.எம்.ஐ. செலுத்தி வருபவர்களுக்குத் தவணைத் தொகை குறையும்” என்கிறார் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஓய்வு பெற்ற துணைப் பொது மேலாளர் எஸ்.கோபாலகிருஷணன்.

பிற கடன்களைக் காட்டிலும் வங்கிகள் அதிகளவில் வீட்டுக் கடன்களைக் கொடுக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் பெரும்பாலான வங்கிகள் கடன்களுக்கான வட்டியைக் குறைத்தால், அது வீடு வாங்கி இ.எம்.ஐ. செலுத்துபவர்களுக்கு உள்ள சுமையைக் கொஞ்சம் குறைக்கும் என்று நம்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x