Published : 03 May 2014 05:25 PM
Last Updated : 03 May 2014 05:25 PM
நாட்டின் உள் கட்டமைப்புகளை நிர்மாணிப்பதிலும், மக்களின் கனவு இல்லங்களைக் கட்டி எழுப்புவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது கட்டுமானத் துறை. சென்னை போன்ற பெரு நகரங்களில் கட்டப்படும் அடுக்குமாடி வீடுகள் கட்டுமான நிறுவனங்களை நம்பியே செயல்படுத்தப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகள் வரை கட்டப்படும் வீடுகள் உடனடியாக விற்றுத் தீரும் நிலை இருந்தது. ஆனால் இன்றோ கட்டப்பட்ட வீடுகளை வாங்கக் கூட மக்கள் எளிதில் வருவதில்லை. வீடுகளின் விலை உயர்வுதான் இதற்குக் காராணம் என்கின்றன கட்டுமான நிறுவனங்கள். அப்படியானால், இந்த விலை ஏற்றத்திற்கு என்ன காரணம் என்று அடுத்த கேள்விக்குள் நுழைந்தால், சேவை வரி முக்கியக் காரணம் என்று பதில் வருகிறது.
சேவை வரி கட்டுமானத் துறையை எப்படிப் பாதிக்கிறது? கடந்த 2012-ம் ஆண்டு ஜூலையில் கட்டுமானத்துறைக்குச் சேவை வரி விதிக்கப்பட்டது. இதன்படி, ஒரு கட்டிடம் அது கட்டி முடிக்கப்பட்டு அதற்குரிய சான்று பெற்று (Completion certificate) விற்கப்படுவதாக இருந்தால், அந்தக் கட்டுமானத்திற்குச் சேவை வரி கிடையாது. அப்படி இல்லாமல் கட்டிடம் கட்டுவதற்கு முன்னதாகவோ, கட்டிக்கொண்டிருக்கும்போதோ ஏதாவது தொகை முன்பணமாக வாங்கியிருந்தாலோ அல்லது தவணை முறையில் பணம் பெறப்பட்டாலோ இந்தப் பரிவர்த்தனை சேவை வரிக்கு உள்ளாகும். இதற்கு 12.36 சதவீதம் வரி கட்ட வேண்டும் என்று கூறப்பட்டது.
இன்று பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள், வீடுகள் கட்டுவதற்கு முன்பாக முன் பணம் பெற்றுக் கட்டுகின்றன. எனவே கட்டுமான நிறுவனங்கள் சேவை வரி கட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. ஆனால் முன்பு, ஒரு மனையில் 12 வீடுகள் கட்டினாலும் வரி இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால், சேவை வரி விதிக்கப்பட்ட பிறகு 2 வீடுகள் கட்டினாலே வரி கட்ட வேண்டும் என்று கொண்டு வந்துவிட்டார்கள். இது சிறிய கட்டுமான நிறுவனங்களை மிகவும் பாதிக்கிறது என்கிறார் சென்னைப் புறநகர் கட்டுமானச் சங்கத்தின் செயலாளர் பிரிட்டோ பிரான்சிஸ்.
‘‘ஒரு வீட்டுக்கு மேல் கட்டினால் வரி செலுத்த வேண்டும் என்பது கட்டுமான நிறுவனங்களுக்குச் சுமையை அதிகரிக்கும். ஏற்கனவே முத்திரைத் தீர்வை, யு.டி.எஸ்., டி.டி.எஸ்., வருமான வரி என நிறைய வரிகள் கட்டப்படுகின்றன. பெரிய கட்டுமான நிறுவனங்களைப் பொறுத்தவரை ‘கேட்டட் கம்யூனிட்டி’ எனப்படும் வசதி படைத்தவர்களுக்கான வீடுகளை அதிக வசதியுடன் கட்டுகிறார்கள். ஒவ்வொரு வசதிக்கும் தகுந்தாற்போல் அதில் வரி உண்டு. எனவே பெரிய நிறுவனங்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்படப் போவதில்லை. ஆனால், நான்கு ஐந்து வீடுகள்கொண்ட அடுக்குமாடி வீடுகள் கட்டும் சிறிய நிறுவனங்கள் சென்னையில் அதிகம் உள்ளன. அதுபோன்ற நிறுவனங்கள் நிச்சயம் பாதிக்கப்படும். இன்று வீடு விலை உயர இதுவும் ஒரு காரணம்.’’ என்கிறார் பிரிட்டோ பிரான்சிஸ்.
பொதுவாக எந்த ஒரு வரியும் கடைசியாகப் பொதுமக்களையே பாதிக்கும் என்பது யதார்த்தம். கட்டுமானத்துறைக்கு விதிக்கப்பட்டுள்ள சேவை வரிக்கும் பொதுமக்களின் பாக்கெட்டில் இருந்தே பணம் எடுக்கப்படுகிறது. சேவை வரியைச் செலுத்த மக்களிடமே பணத்தை வசூலிப்பதாகக் கூறுகிறார்கள் கட்டுமான நிறுவத்தினர்.
‘’பதினைந்து லட்சம் ரூபாய் செலவில் ஒரு வீடு கட்டப்படுகிறது என்று வைத்துக்கொண்டால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை சேவை வரி விதிக்கப்படும். இந்தத் தொகையை வாடிக்கையாளர்களிடம்தான் வசூலிக்க முடியும். இதனால் வாடிக்கை யாளர்களுக்குத்தான் சுமை அதிகமாகிறது. சேவை வரியை நீக்க வேண்டும் என்று CREDAI மூலம் மத்திய அரசுக்கு ஏற்கனவே கோரிக்கை வைத்திருக்கிறோம். இதை நீக்கினால், வீடு வாங்க மக்கள் செய்யும் செலவு சிறிது குறையும். இது மக்களுக்கு நன்மை அளிக்கும். கட்டுமானத் தொழில் அபிவிருத்தி அடைய இது வழி வகுக்கும்’’ என்கிறார் கோவை ராகிண்டோ டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறியாளர் ஆர்.எஸ்.கிருஷ்ணன்.
புதிய அரசு அமைந்த பிறகு கட்டுமானத்துறைக்கு விதிக்கப்பட்டுள்ள சேவை வரி நீக்கப்படும் என்று கட்டுமான நிறுவனங்கள் எதிர்பார்த்துக் காத்திருக் கின்றன. இந்த விஷயத்தில் புதிய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது ஜூன் மாதத்தில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் தெரிந்துவிடும்.
இரண்டு வீட்டுக்குச் சேவை வரி
இன்று வீடுகள் கீழே, மேலே என இரண்டு அடுக்குகளாகக் கட்டப்படுகின்றன. அப்படியானால் இதற்கும் சேவை வரி உண்டா என்ற கேள்வி எழலாம். மாடியில் ஒரு வீடு கட்டி இரண்டையும் தனித்தனியாகப் பிரித்து விற்கும்படி செய்திருந்தால் சேவை வரி உண்டு. அதேபோல மாடியுடன் கூடிய வீடு இரண்டு வீடுகளுக்குரிய பயன்பாட்டுடன் கட்டப்பட்டு நகராட்சி ஆவணங்களின்படி இரு வீடுகளாக அடையாளம் காணப்பட்டிருந்தால் அதற்கும் சேவை வரி வசூலிக்கப்படும். அதேசமயம் வீடும் மாடியும் ஒரு குடும்பத்தின் ஒரே வீடாக நகராட்சியால் அடையாளம் காணப்பட்டிருந்தால் அதற்குச் சேவை வரி கிடையாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT