Published : 18 Apr 2015 03:51 PM
Last Updated : 18 Apr 2015 03:51 PM
அமைதியான சூழலில் ஒரு இடம் வாங்கி அங்கே நமக்குப் பிடித்த மாதிரி வீடு கட்டிக் குடியேறினால் போதும், வேறென்ன வேண்டும் வாழ்வில் என்பது பலரது நினைப்பு.
ஆனால் சாதாரண மத்தியதர வாழ்வு நடத்துபறவர்களுக்கு யதார்த்தத்தில் தனி வீடு என்பது அருகில் தெரியும் கைக்கெட்டாத கனவு. ஆகவே கனவை அடைய முடியாவிட்டாலும் அதற்கு நெருக்கமான இடத்தையாவது எட்டிப்பிடித்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம்.
ஏதாவது ஒரு அபார்ட்மெண்டில் ஒரு ஃப்ளாட் வாங்கிவிட்டாலே ஓரளவுக்கு திருப்தி ஏற்பட்டுவிடுகிறது. வாடகை கொடுத்து மாளவில்லை, சம்பாத்தியத்தில் பாதி வாடகைக்கே போய்விட்டால் மீது செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்பதே பெரும் கவலை. இந்நிலையில் அபார்ட்மெண்ட் வாங்கும்போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வீடு வாங்கத் தயாராகும்போது பல கட்டுமான நிறுவனங்கள் கண்ணில் படும். பலவகையான தரப்புகளிலிருந்தும் வீடு தொடர்பான தகவல்கள் வந்து மூழ்கடிக்கும். இதிலிருந்து ஒரு சரியான கட்டுமான நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து நமக்கான வீட்டை வாங்கியாக வேண்டும்.
ஏனெனில் இந்தியாவில் எந்த அளவுக்கு ரியல் எஸ்டேட் துறை வளர்ந்துவருகிறதோ அந்த அளவுக்கு அதில் ஏமாற்றும் ஊழலும் அதிகரித்துள்ளது என்பது கசப்பான உண்மை. பணம் அதிக அளவில் புரளும் ஒரு துறையில் இது சாதாரணமே. நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நுகர்வோரான நமக்கு அதிக விவரங்கள் தெரிந்தபோதும் இன்னும் ஏமாந்துகொண்டிருக்கிறோம் என்பது கேலிக்குரியதுதான். எனினும் அதுதான் உண்மை.
பொய்யான வாக்குறுதிகள்
கட்டுமான நிறுவனங்கள் தரும் பொய்யான வாக்குறுதிகளை நம்பிவிடுகிறோம். ஒரு கட்டுமான நிறுவனம் வீட்டுத் திட்டத்துக்கான பணத்தை மொத்தமாக வாங்கிக்கொண்டு வீடு தயாராகும் வரை உங்களுக்கு வட்டி தருகிறோம் என்று சொல்லக்கூடும். அதை வேதவாக்காக எடுத்துக்கொண்டால் நம் கதி அதோ கதிதான். அவர்கள் தரும் செக் வங்கியிலிருந்து அசுர வேகத்தில் திரும்பி வந்துவிடலாம். எனவே இது போன்ற விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது.
வீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி நகரிலிருந்து சிறிது தொலைவில் தான் உள்ளது. ஆகவே வீடு தயாரான உடன் நீங்கள் குடியிருக்க விரும்பாவிட்டாலும் பரவாயில்லை, அதை வாடகைக்கு விட்டுச் சம்பாதிக்கலாம். அதை வைத்தே நீங்கள் வீட்டுக் கடனை அடைத்துவிடலாம் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் வீடு தயாரன பின்னர் வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன்னர் நமது தொண்டைத் தண்ணி வற்றிவிடும். ஒரு ஈ காக்கா கூட வராது என்பதைப் பின்னர் அறிவதைவிட முன்னர் உணர்ந்துகொள்வது நல்லது.
போலி ஆவணங்கள்
போலி ஆவணங்கள் உதவியுடன் பிரச்சினைக்குரிய இடங்களை உங்களிடம் விற்றுவிடலாம். வில்லங்கமான இடங்களில் வீட்டைக் கட்டிவிட்டு அதை உங்கள் தலையில் கட்டிவிட முயல்வார்கள். சுதாரிப்பாக இல்லை என்றால் நமது பணம் அவ்வளவுதான். கடலில் கரைத்த பெருங்காயமாகப் போய்விடும். வீட்டை வாங்கிய பின்னர் ஆவணங்கள் பொய்யானவை என்று தெரியும்போது வீட்டைக் கட்டித் தந்தவர் காணாமல் போய்விடுவார். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தகுந்த சட்ட உதவி பெற்று ஆவணங்களைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
அதேபோல் காலதாமதம் என்பதும் ரியல் எஸ்டேட் துறையைச் சீரழிக்கும் மற்றொரு சிக்கல். ஆனாலும் இந்தச் சீரழிவும் நிலவிவருகிறது என்பதை மறுக்க முடியாது. குறிப்பிட்ட காலத்தில் முடித்துத் தந்துவிடுவோம் என்று தேதி குறிப்பிட்டு ஒப்பந்தம் போட்ட நிலையிலும் சொன்னபடி வீட்டை முடித்துத் தராமல் இழுத்தடிப்பார்கள். இந்த மாதிரி எல்லாம் நடந்துகொள்ளாத கட்டுமான நிறுவனங்களையும் தேடிக் கண்டுபிடித்தால் தப்பித்துவிடலாம்.
அதே போல் வீட்டின் வரைபடத்தில் இருக்கும் வசதிகளில் சிலவற்றைச் செய்யாமலே விட்டுவிடுவார்கள். உதாரணமாகச் சமையலறையில் பொருள்களை வைக்கத் தேவையான அலமாரிகளைச் செய்துதருவதாக உறுதியளித்திருப்பார்கள்.
ஆனால் வீடு முடிவடைந்த பின்னர் இந்த வேலை முடிக்கப்படாமல் இருக்கும். கேட்டால் கண்டிப்பாக முடித்துத் தருவதாகச் சொல்வார்கள். ஆனால் வேலை நடக்கவே நடக்காது. மேலும் நல்ல தண்ணீர் இணைப்பு, மின்சார இணைப்பு போன்றவற்றுக்கான அனுமதி பெறும் விஷயமும் கவனத்தில்கொள்ள வேண்டியவை.
இவற்றை எல்லாம் நன்கு செய்து தரும் நிறுவனமாகப் பார்த்து, வீடு அமைய உள்ள இடத்தையும் நேரிடையாகச் சென்று பார்த்து, நமக்கு முழு திருப்தி ஏற்பட்ட பின்னரே வீடு தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொள்வது நல்லது. வீடு முக்கியம் தான் ஆனால் அதைவிட முக்கியம் குடியேறும்போது அது குடைச்சல் தராமல் இருக்க வேண்டும் என்பதும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT