Published : 28 Mar 2015 12:27 PM
Last Updated : 28 Mar 2015 12:27 PM
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இப்போதெல்லாம் லிப்ட் என்பது அத்தியாவசியமான ஓர் அம்சமாகிவிட்டது. மூன்று நான்கு பிரிவுகளாகக் கட்டப்படும் பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் லிப்டின் எண்ணிக்கை பிரிவுகளுக்கு தகுந்தவாறு அதிகரிக்கவும் செய்கின்றது. எனவே அடுக்குமாடிக் குடியிருப்புகளில் லிப்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அவசியமாகிறது.
லிப்டின் தாங்கும் திறனுக்கு மேல் பளுவை ஏற்றக் கூடாது. இதன் காரணமாக லிப்டின் திறன் பாதிக்கப்படும். ஒவ்வொரு லிப்டிலும் அதில் எவ்வளவு எடை ஏற்றலாம் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த உச்ச வரம்பைப் பற்றிக் கவலைப்படாமல் அலட்சியமாக அதிகமான அளவில் கனரகப் பொருட்களை லிப்டுக்குள் கொண்டுசெல்ல நினைப்பார்கள். இதன் காரணமாக லிப்ட் பாதியிலேயே நின்றுவிடும் அபாயம் இருக்கிறது.
லிப்ட் இயங்கத் தொடங்கும்போதே வித்தியாசமான ஒலி அல்லது குலுங்குவதுபோல் ஆடினால் அதை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த லிப்டை உடனடியாகப் பராமரிப்புக்கு உட்படுத்த வேண்டியது அவசியம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற சமயங்களில் லிப்டைத் தொடர்ந்து இயக்குவது ஆபத்தில் முடியும்.
லிப்டிற்குத் தானியங்கி கதவுகள், கைகளால் திறந்து மூடும் கதவுகள், டிரான்ஸ்பரன்ட் எனப் பல வகையிலும் கதவுகள் இருக்கின்றன. எப்படிப்பட்ட கதவுகளாக இருந்தாலும் லிப்டின் கதவுகள் சரியாக மூடாவிட்டால் அதைக் கவனிக்க வேண்டியது அவசியம். கதவுகள் சரியாக மூடாத லிப்டில் செல்வது ஆபத்தானது.
லிப்டின் உள்ளே எச்சரிக்கை மணி, இண்டர்காம் தொலைபேசி போன்றவை சரியாக வேலை செய்கிறதா என்பதை அடிக்கடி சரிபார்க்க வேண்டும். ஏனென்றால் லிப்ட் பாதியில் நிற்கும்போது இப்படிப்பட்ட சாதனங்களின் துணையோடுதான் நாம் வெளியில் இருப்பவர்களைத் தொடர்புகொள்ள முடியும்.
மின் தடை ஏற்படும் நேரத்தில் ‘இந்த நேரத்தில் லிப்ட் இயங்காது’ என்னும் அறிவிப்பைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். லிப்டுகளுக்குத் தனி ஜெனரேட்டர் வசதியை அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஏற்படுத்த வேண்டும். மின்சாரம் நின்றுபோனால் லிப்டின் ஜெனரேட்டர் தானாகவே செயல்படத் தொடங்கும் ஏற்பாடும் இருக்க வேண்டும்.
லிப்டு சரியாக இயங்குவதற்கு இயந்திரத்தில் எண்ணெயின் அளவு, ஹைட்ராலிக் பம்புகள், கேபிள் இணைப்புகள், பளுவைத் தாங்கும் தாங்கிகள் போன்றவற்றைத் தகுந்த இடைவெளிகளில் பராமரிக்க வேண்டும். இதுபோன்ற பராமரிப்புகளை லிப்டுகளைக் குடியிருப்புகளில் அமைத்திருக்கும் நிறுவனங்களின் பொறுப்பிலேயே விட்டுவிடலாம். அதேபோல் அவசரத்துக்கு அவர்களின் சேவையைப் பெறுவதற்கு ஏற்ற வகையில் அந்த நிறுவனத்தின் அவசர அழைப்புக்கான தொலைபேசி எண்களை லிப்டின் உள்ளேயும் வெளியேயும் வைக்க வேண்டும்.
சில நேரங்களில் நீங்கள் செல்ல வேண்டிய மாடியில் சரியாக லிப்ட் நிற்காமல், தரை மட்டத்தைவிடச் சற்று உயர்வாகவோ குறைவாகவோ நின்றுவிடும். லிப்டை விட்டு வெளியே வர இயலாத நிலை ஏற்படலாம். இந்த மாதிரியான சமயங்களில் தீயணைப்புத் துறை வீரர்கள் அல்லது லிப்ட் பராமரிப்பு நிறுவனத்திலிருந்து தகுந்த ஆட்களின் உதவி கிடைக்கும்வரை நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்.
லிப்டின் அடிப்பக்கம் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்பிரிங் குஷன் ஷாக் அப்ஸர்வர்களைத் தகுந்த கால இடைவெளிகளில் சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும்.
மூன்று மாதங்கள், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை லிப்டை முழுமையாக சர்வீஸ் செய்ய வேண்டும். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குழந்தைகள் தனியாக லிப்டை இயக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம் இருக்கும். இதைத் தவிர்க்கும் வகையில் லிப்ட் ஆபரேட்டர்களை நியமிக்க வேண்டும். கூடுமானவரை குழந்தைகள் தனியாக லிப்டை இயக்குவதற்கு அனுமதிக்கக் கூடாது.
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் லிப்ட் பராமரிப்பைக் குடியிருப்பவர்களின் சங்கத்தின் மூலமாகத் தகுந்த கால இடைவெளிகளில் நடத்த வேண்டும். ஏனென்றால் லிப்டின் பராமரிப்பில் குடியிருப்பில் வாழ்பவர்களின் பாதுகாப்பும் அடங்கியிருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT