Published : 17 May 2014 07:08 PM
Last Updated : 17 May 2014 07:08 PM
பொருளாதார வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு என இந்திய ரியல் எஸ்டேட் துறைக்குக் கடந்த ஆண்டு போதாத காலமாக இருந்தது. இருந்தாலும் இந்திய ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சியடையவில்லை. புதிய வீட்டுத் திட்டங்களை அறிவிப்பதாக இருந்தாலும் சரி, ரியல் எஸ்டேட்டில் தனியார் முதலீடாக இருந்தாலும் சரி, ரியல் எஸ்டேட் துறை முன்னணியிலேயே இருந்தது.
பிரபல நிறுவனங்கள்கூட ரியல் எஸ்டேட் துறையில் கால் பதிக்க ஆர்வம் காட்டிவருகின்றன. குறிப்பாகப் பெரு நகரங்களில் முதலீடுகள் செய்யப் பல பிரபல நிறுவனங்களும், முன்னணி கட்டுமான நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. இன்னும் சில கட்டுமான நிறுவனங்கள் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களைத் தவிர்த்து ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள இரண்டாம் கட்ட நகரங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டிவருவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இதை மெய்ப்பிக்கும் வகையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ரியல் எஸ்டேட் துறையில், தனியார் பங்கு முதலீடு அதிகரித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுமார் ரூ. 2,800 கோடி முதலீடு அதிகரித்திருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. இது ரியல் எஸ்டேட் துறையில் சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. இது, முந்தைய நிதியாண்டில் இதே காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டைவிட 2.5 மடங்கு அதிகம் என்று குஷ்மன் அண்டு வேக்பீல்டு ஆய்வு நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இந்திய ரியல் எஸ்டேட் துறை சூடுபிடித்துள்ளது. வெளி நாடு மற்றும் உள்நாட்டு நிதி நிறுவனங்கள் பல, ரியல் எஸ்டேட் துறையில் அதிக அளவில் பங்கு முதலீட்டை மேற்கொண்டுள்ளன. ரியல் எஸ்டேட் துறையில் அதிக அளவில் பங்கு முதலீட்டை ஈர்த்த இந்திய நகரம் எது தெரியுமா? பெங்களூரு. இந்நகரம் ரூ.1,905 கோடி முதலீடு பெற்று தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாமிடத்தை மும்பையும் (ரூ. 470 கோடி), மூன்றாமிடத்தை டெல்லியும் (ரூ. 345 கோடி) பெற்றுள்ளன.
மத்தியில் புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில், கட்டமைப்புகளை அதிகரிப்பது பற்றியும், ரியல் எஸ்டேட் துறையில் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது பற்றிய எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது. மேலும் கட்டுமானத்திற்கான சேவை வரி நீக்கப்படுமா என்றும் கட்டுமான நிறுவனங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. புதிய அரசு பதவியேற்ற பிறகு புதிய கொள்கை முடிவுகளையோ, சலுகைகளையோ அறிவித்தால் ரியல் எஸ்டேட் துறை பழைய நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT