Published : 24 May 2014 12:00 AM
Last Updated : 24 May 2014 12:00 AM
விவசாயமும், நெசவும் நாட்டின் இரு கண்களாகக் கருதப்பட்ட காலம் இன்று முற்றிலுமாக மாறிவிட்டது. உலகமயமாக்கல் மூலமாக எந்த ஒரு நாட்டில் இருந்தும், எதை வேண்டுமானாலும் இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்ய முடியும் என்பதால், உழவுக்கும் நெசவுக்கும் இருந்த தேவை, வெகுவாகக் குறைந்துவிட்டது.
இந்தியாவைப் பொறுத்தவரை, விவசாயம் மெல்ல மெல்லத் தேய்ந்துகொண்டே செல்வதற்கு மக்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றமும் ஒரு காரணமாக இருக்கிறது. வேலை தேடி நகரங்களுக்கு மக்கள் குடிபெயரத் தொடங்கியது முதலே விவசாயமும், அதுசார்ந்த பணிகளும் குறைந்தன.
இந்தியாவில் நகர்ப்புற மக்களைவிடக் கிராமப்புறங்களில்தான் அதிகம் பேர் வசிக்கிறார்கள் என்றாலும், நகர மக்களுக்குக் கிடைக்கும் பொருளாதார வளர்ச்சி, கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்குக் கிடைப்பதில்லை.
இதன் காரணமாக, கிராமங்களில் முதலீடுகள் குறைவதும், நகரங்களில் முதலீடு அதிகரிப்பதும் இயல்பான விஷயமாக இருக்கிறது. பாசனத்திற்குத் தண்ணீர்ப் பற்றாக்குறை, மின் தடை, விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காதது போன்ற பல்வேறு காரணங்களால், தங்களின் வயல்களை விற்று விட்டு, கிராமங்களில் இருக்கும் சிறு விவசாயிகள், நகரங்களை நோக்கி இடம்பெயர்கின்றனர்.
இதன் காரணமாக நெல் விளையும் டெல்டா மாவட்டங்களில்கூட விளை நிலங்களின் விற்பனை அதிகரித்து வருவதாக அண்மையில் செய்திகள் வெளியாயின. குறிப்பாக, தஞ்சை மாவட்டத்தில், பல நூற்றாண்டுகளாக விவசாயிகளிடம் இருந்த பாரம்பரிய விளை நிலங்கள்கூட, பொருளாதார நெருக்கடியின் காரணமாக விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், வயல்களின் மத்தியில் வீட்டு மனைகளை உருவாக்கியுள்ளன.
இந்த வீட்டு மனைகளை வாங்கினால், என்ன மாதிரியான பொருளாதாரப் பலன்களை வருங்காலத்தில் எதிர்பார்க்கலாம் என முதலீட்டு ஆலோசகர்களிடம் கேட்டபோது, அவர்களின் விளக்கங்கள் பல்வேறு விஷயங்களை வெளிப்படுத்துவதாக அமைந்தன.
அதில் முக்கியமான அம்சம், இன்றைக்கு விவசாயம் செய்வதற்கு வழியில்லாமல் விற்கப்படும் வயல்கள், இன்னும் 15 அல்லது 20 ஆண்டுகளில், பொன் முட்டையிடும் வாத்துக்களாக மாறிவிடும் என்கின்றனர். கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம் பெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அவர்களுக்கான உணவுத் தேவையும் அதிகரிக்கும். அப்போது, விவசாயத்தை மேம்படுத்துவதற்கான வழிகளைத்தான், மத்திய, மாநில அரசுகள் முன்னெடுக்கும் நிர்ப்பந்தம் ஏற்படும்.
விவசாயத்திற்கு வழியில்லாத இன்றைய நிலை மாறி, விவசாயம் செய்ய இடம் போதவில்லை என்ற சூழல் உருவாகும்போது, ஒரு ஏக்கர் விளை நிலம் வைத்திருந்தாலும், அதன் மதிப்பு, சென்னை போன்ற பெரு நகரங்களின் மையப் பகுதியில் இருக்கும் ஒரு கிரவுண்ட் நிலத்திற்கு சமமானதாகக் கருதப்படும் என்கின்றனர் ரியல் எஸ்டேட் முதலீட்டு ஆலோசகர்கள்.
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு தேடிச் சென்றவர்களில் பலர் நகர்ப்புறங்களில் வீடு, நிலங்களை வாங்கினாலும், சிலர் கிராமப்புறங்களில் உள்ள சொத்துகளை, குறிப்பாக விளை நிலங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். வாழ்வின் பிற்பகுதியை அமைதியான சூழலில், இயற்கையுடன் ஒன்றிய நிலையில் அவர்கள் கழிக்க விரும்புவதுதான் இதற்குக் காரணம்.
டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில், ஒரு ஏக்கர் விளை நிலம் சுமார் 2 லட்சம் ரூபாய் முதல், இடத்தின் அமைவிடத்தைப் பொறுத்து 12 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதில் டெல்டா பகுதியின் நுழைவாயிலாகக் கருதப்படும் திருச்சியில், மண்ணச்சநல்லூர் வரையிலான பகுதிகள், கரூர் சாலையில் உள்ள கம்பரசம்பேட்டை, ஜீயபுரம், முக்கொம்பு மற்றும் அய்யம்பாளையம் ஆகிய
காவிரி கரையோர இடங்களில் விளை நிலங்கள் முதலீடு செய்ய ஏற்ற பகுதிகளாகத் திகழ்கின்றன. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில், தஞ்சை புறநகர்ப் பகுதிகள், கும்பகோணம் அருகே உள்ள பகுதிகளில் விவசாய நிலங்கள் அதிகளவில் விற்பனைக்கு உள்ளன.
இதுபோன்று விளை நிலங்களில் முதலீடு செய்வதால், எதிர்காலத்தில் அந்த முதலீடு பெருகும் என்பது ஒருபுறம் இருந்தாலும், அந்த நிலத்தை வேறொரு விவசாயிக்கு, ஒத்திக்கு (லீசு) விடுவதன் மூலமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீட்டாளர் பெற்று விட முடியும். இதுமட்டுமின்றி, நிலத்தை வாங்கியவரே அதனைப் பராமரிக்கும் பொறுப்பை, தனது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பட்சத்தில், அந்த நிலத்தில் விளையும் பொருட்களின் மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதும், உரிமையாளருக்கு கிடைக்கும் வாய்ப்பும் இருக்கிறது.
எனவே, புறநகர்ப் பகுதிகளில் வீட்டு மனைகளை வாங்குவதைப் போல், சிறு நகரங்கள் மற்றும் டவுன்களில் விற்கப்படும் விளை நிலங்களில் முதலீடு செய்வதும் எதிர்காலத்தில் சிறந்த பலனைத் தரும் என்கின்றனர் ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT