Last Updated : 14 Mar, 2015 12:45 PM

 

Published : 14 Mar 2015 12:45 PM
Last Updated : 14 Mar 2015 12:45 PM

இல்லத்துக்கேற்ற புதுமையான சூரிய சக்தித் தகடுகள்

இனிய இல்லங்களுக்குக் கூரை எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் மின்சாரமும். நமக்கான மின்சாரத் தேவைக்கு நாம் மின்சார வாரியங்களையே நம்பி இருக்கிறோம். அதை விடுத்து நமக்கு நாமே மின்சாரத்தைத் தயாரித்துக்கொள்ள உதவுபவை சூரிய சக்திக் கூரைகள். கோடை காலத்தில் கடும் வெயில் மண்டையைப் பிளப்பது போன்று வாட்டி வதைக்கும். அந்த அதிகபட்ச வெயிலில் வெளிப்படும் சூரியக் கதிர்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த சூரிய சக்தி கூரைகள் உதவும்.

பொதுவாக உலகம் முழுவதும் சூரிய சக்தித் தகடுகள் தான் கூரைகளில் பொருத்தப்படுகின்றன. இவற்றை அப்படியே கூரைகளில் அடுக்கிவிட முடியாது. அதற்கெனத் தனியாக தாங்குவதற்கேற்ற மேடை அமைத்தே சூரிய சக்தித் தகடுகளைப் பொருத்த இயலும். இதன் காரணமாக கூரையின் பாரம் சிறிது அதிகரிக்கும் என்பதாலும், சூரிய சக்தித் தகட்டைப் பொருத்த தனியான அமைப்புகள் தேவைப்படுவதாலும் பெரும்பாலானோர் இதைத் தவிர்க்கிறார்கள்.

ஆனால் இந்தப் பாரம்பரிய சூரிய சக்தித் தகடுகளுக்கு மாற்றாக இப்போது புதுமையானதும் வசீகரமானதுமான Building-integrated photovoltaics (BIPV) எனச் சொல்லப்படும் சூரிய சக்தித் தகடுகள், மெல்லிய ஃபிலிம் போன்ற சூரிய சக்தித் தகடுகள், ஃபோட்டோவோல்டைக்ஸ் ஷீட்டுகள் போன்றவை கிடைக்கின்றன. ஃபோட்டோவோல்டைக் என்பது சூரிய ஒளியிலிருந்து நேரிடையாக மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம்.

இந்த மாற்று சூரிய சக்தித் தகடுகள் கட்டிடத்தின் கூரைமீது இணைந்தே பொருத்தப்படும் வகையில் சூரிய சக்தி செல்களைக் கொண்ட டைல்களாகவோ, ஃபோட்டோவோல்டைக்ஸ் ஷீட்களாகவோ கிடைக்கின்றன. இவற்றைப் பழைய சூரிய சக்தித் தகடுகள் போல தனியாகப் பொருத்த வேண்டிய அவசியமில்லை. இவற்றைக் கூரையுடன் இணைத்தே பொருத்திவிடலாம்.

சூரிய சக்தி செல்களைக் கொண்ட மெல்லிய தடுகளைக் கூரை மீது லேமினேட் செய்வது போன்று இணைத்துவிடுகிறார்கள். இதனால் தனியாகக் கூரைமீது சூரிய சக்தித் தகடுகளைப் பொருத்த தேவைப்படும் மேடை போன்ற அமைப்பை உருவாக்கத் தேவையில்லை என்கிறார்கள். இதனால் மரபான சூரிய சக்தித் தகடுகளை அமைக்க ஏற்படும் செலவைவிடக் குறைந்த செலவே இதற்குத் தேவைப்படும். சூரிய சக்தி செல்களைக் கொண்ட இந்தத் தகடுகள் மீது விழும் சூரிய ஒளிக்கதிர்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

இந்த ஃபோட்டோவோல்டைக் தொழில்நுட்பம் மேகமூட்டமான வேளைகளிலும், குறைவாக சூரிய ஒளி வெளிப்படும் நேரத்திலும்கூடத் திறமையாகச் செயல்படும் என்கிறார்கள் நிபுணர்கள். பல்வேறு வகையான அலைநீளம் கொண்ட ஒளிகளையும் கிரகித்து மின்சார உற்பத்திக்கு உதவுகிறது இந்தத் தொழில்நுட்பம். கடற்கரைப் பகுதி, தொழிற்சாலைப் பகுதி போன்ற அதிக தூசு படியும் இடங்களிலும் இவை சிறப்புடன் செயல்படும் என்கிறார்கள் அவர்கள்.

சூரிய சக்தி டைல்கள்

சூரிய சக்தி டைல்கள் பெரும்பாலும் 86 அங்குல நீளமும் 12 அங்குல அகலமும் கொண்டவையாக இருக்கும். இவற்றை நேரிடையாகக் கூரைமீது பொருத்திவிடலாம். சாதாரண டைல்கள் போன்ற தோற்றம் கொண்ட இந்த டைல்கள் எடை குறைவானவை. இவற்றை வழக்கமான டைல்களைக் கையாள்வது போலவே கையாளலாம். ஒரே ஒரு வித்தியாசம் சூரிய சக்தி டைல்களின் ஓரங்களில் சாதாரண டைல்கள் போன்ற பார்டர் காணப்படும்.

சிலிக்கானிலிருந்து உருவாக்கப்பட்ட ஃபோட்டோவோல்டைக் செல்கள் இந்த டைல்கள் மீது பூசப்பட்டிருக்கும். சூரிய சக்தி டைல்கள் நீர் புகா தன்மையும், கடும் சூரியக் கதிரின் வெப்பத்தையும் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்கும்.

மரபான சூரிய சக்தித் தகடுகளுக்கு மாற்றாக வந்திருக்கும் இந்தப் புதிய சூரிய சக்தி கூரைகள் பலவகையில் அனுகூலம் மிகுந்தவையாக உள்ளன. இவற்றைப் பொருத்துவது சுலபம். இவற்றின் எடையும் மிகவும் குறைவு. பொருத்தும் செலவு குறைவு. கூரையின் மீது இந்தப் புதிய சூரிய சக்தித் தகடுகளைப் பொருத்த சிறப்பான தனி அமைப்பு தேவையில்லை. நேரடியாக கூரைமீதே பொருத்திவிடலாம். இவை வெவ்வேறு அளவுகளிலும் வடிவங்களிலும் நிறங்களிலும் கிடைக்கின்றன.

மேலும் இவற்றைக் கூரைமீது இணைத்தே பொருத்திவிடலாம். ஆகவே பார்வைக்கு வித்தியாசமான எந்தத் தோற்றமும் இருக்காது. சாதாரண கூரை போலவே தோன்றும். ஆனால் சூரிய சக்தியையும் மின்சாரமாக மாற்றிவிடலாம். ஆகவே அதிக அளவில் சூரிய ஒளி கிடைக்கும் நமது மாநிலத்தில் அதைப் பயன்படுத்தி சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும்போது ஒவ்வொரு இல்லமும் மின்சார உற்பத்தில் தன்னிறைவைக் காண்பதுடன் பிறருக்கும் உதவலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x