Last Updated : 21 Mar, 2015 01:19 PM

 

Published : 21 Mar 2015 01:19 PM
Last Updated : 21 Mar 2015 01:19 PM

தாத்தா கடிகாரத்தின் கம்பீரம்

தாத்தா கடிகாரம் என்பது ஒரு ஆள் உயரத்துக்கும் கூடுதலான உயரம் உள்ள கடிகாரம். ப்ரெண்ட்ஸ் படத்தில் வடிவேலுவின் வேலையாட்கள் தூக்க முடியாமல் தூக்கி உடைத்துவிடுவார்களே அதைப் போன்ற கடிகாரம்தான் இது. இது பல உயரங்களில் கிடைக்கிறது.

அதை ஏன் தாத்தா கடிகாரம் என அழைக்கிறார்கள் என யோசிக்கத் தோன்றுகிறதா? 1876-ம் ஆண்டு இங்கிலாந்தில் எழுதப்பட்ட பாடல்தான் அதற்குக் காரணம். My Grandfather's Clock என்ற அந்தப் பாடலை ஹென்றி க்லே ஓர்க் என்பவர் எழுதினார். அதைத் தொடர்ந்து உயரமான அந்தக் கடிகாரத்தை ‘Grandfather's Clock’ என அழைக்கும் வழக்கம் ஐரோப்ப நாடுகளில் பரவலானது.

தாத்தா கடிகாரம் வீட்டுக்குக் கொடுக்கும் பிரம்மாண்டமான அழகை வேறு எந்தக் கடிகாரத்தாலும் கொடுக்க முடியாது. 1670-ல் வில்லியம் கிளிமெண்ட் என்பவர்தான் இந்தத் தாத்தா கடிகாரத்தை உருவாக்கியவர். அவர் உருவாக்கிய அந்த முதல் கடிகாரம் ஒரு புரட்சிகரமான வடிவமைப்பைப் பெற்றிருந்தது.

கிட்டத்தட்ட 350 ஆண்டுகளில், தாத்தா கடிகாரம் எந்தப் பெரிய மாற்றத்தையும் அடையவில்லை. இப்போதும் ஒருவிதமான புதுப்பொலிவுடனே தாத்தா கடிகாரம் நேரத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறது. உங்கள் வீட்டைத் தாத்தா கடிகாரத்தை வைத்து எப்படி அலங்கரிக்கலாம் என்று பார்க்கலாம்.

எங்கே வைக்கலாம்?

தாத்தா கடிகாரத்தை வைக்கும் இடத்தைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். கூடுமானவரை, மாசு பாதிப்பில்லாத இடத்தில் வைக்க வேண்டும். மரக் கடிகாரங்களும் மனிதர்களைப் போலதான் என்று சொல்வார்கள். இந்தத் தாத்தா கடிகாரத்தை வைக்கும் அறையில் வெப்பமும் குளிரும் அதிகமாக இருக்கக் கூடாது. தட்பவெப்பத்தில் ஏற்படும் மாற்றம் இந்த மரக் கடிகாரங்களைப் பாதிக்கும்.

அதனால், தாத்தா கடிகாரத்தை மிதமான தட்பவெப்பநிலை இருக்கும் அறையில்தான் வைக்க வேண்டும். இந்தக் கடிகாரம் அளிவில் பெரிதாக இருப்பதால், பெரும்பாலும் தரைத்தளத்தில் வைக்கப்படுகிறது. பொதுவாக, முன்னறை, வரவேற்பறை, படிக்கும் அறை போன்ற அறைகள் தாத்தா கடிகாரம் வைப்பதற்கு ஏற்றவை.

முன்னறைக்கு ஏற்றது

முன்னறையின் நுழைவாயில் இடம் பெரும்பாலும் காலியாகவே இருக்கும். இந்த இடத்தில் தாத்தா கடிகாரத்தை வைக்கும்போது முன்னறையின் அழகுகூடும். ஒரு சாதாரண அறையில் இருப்பதைவிடத் தாத்தா கடிகாரம் முன்னறையில் இருக்கும்போது வீட்டுக்கு ஒரு கம்பீரமான தோற்றத்தைக் கொடுக்கும். ஆனால், தாத்தா கடிகாரத்துக்குக் கீழே காபி மேசையோ, நாற்காலிகளைப் போடக் கூடாது. அது கடிகாரத்தின் அழகைக் குறைக்கும்.

ஒரு வேளை, உங்கள் வீட்டில் முன்னறை இல்லையென்றால், தாத்தா கடிகாரத்தை மாடக்குழிக்குள் வைக்கலாம். ஆனால், வீட்டைக் கட்டும்போதே தாத்தா கடிகாரத்தை வைப்பதற்கான மாடக்குழியை எங்கே அமைக்க வேண்டும் என்பதைத் திட்டமிட வேண்டும்.

தாத்தா கடிகாரத்தை வைப்பதற்கான இன்னொரு சிறந்த இடம் கதவின் வாசல். கதவுக்கு செல்லும் இந்த வாசல் நீளமானதாக இருந்தால், இந்த இடத்திலேயே தாத்தா கடிகாரத்தை வைக்கலாம். எல்லாவற்றையும்விட முக்கியமானது, நீங்கள் தாத்தா கடிகாரத்தை வைக்கும் இடம் கடிகாரத்தைப் பராமரிப்புக்கு உதவக்கூடியதாக இருக்க வேண்டும்.

சங்கடத்தைத் தீர்க்கும்

எந்த வகையிலும் அலங்கரிக்க முடியாத இடத்தில்கூட இந்தத் தாத்தா கடிகாரத்தை வைத்து அலங்கரிக்கலாம். படிக்கட்டுகளின் கீழ்ப்பகுதியில் இருக்கும் இடத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

சாப்பாட்டறை

தாத்தா கடிகாரத்தைச் சாப்பாட்டறையில் வைக்க நீங்கள் முடிவுசெய்தால், சமையலறைக்கு மிகவும் அருகில் இல்லாதவாறு வைக்க வேண்டும். சமையலறையில் இருந்து வெளியேறும் புகை கடிகாரத்தைப் பாதிக்கலாம்.

படுக்கையறை

படுக்கையறையில் தாத்தா கடிகாரத்தை வைப்பதற்கு முன்னால், ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். ஏனென்றால் கடிகாரத்தின் மணியோசை ஒவ்வொரு மணிநேரத்துக்கும் கேட்கும்போது அது தூக்கத்தைப் பாதிக்கலாம். ஆனால், கடிகாரத்தை வாங்குவதற்கு முன்னால் கடைக்காரரிடம் ஒலிக்கட்டுப்படுத்தும் கருவி பற்றிக் கேட்கலாம்.

எப்படிப் பராமரிக்கலாம்?

தாத்தா கடிகாரத்தை வெளியே சுத்தப்படுத்தும்போது மரக்கலன்களை எப்படிச் சுத்தப்படுத்துகிறீர்களோ அப்படியே செய்யலாம். கடிகாரத்தின் கண்ணாடியைச் சுத்தப்படுத்தும்போது, மற்ற பகுதிகளில் ஸ்ப்ரே படாதவாறு சுத்தப்படுத்த வேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தக் கடிகாரத்துக்கு எண்ணெய் போட வேண்டும். கடிகார சேவை செய்யும் நபர்களைவைத்து இதைச் செய்வது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x