Published : 21 Mar 2015 01:16 PM
Last Updated : 21 Mar 2015 01:16 PM
கட்டிடப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்றால் அது நிலநடுக்கமாகத்தான் இருக்கமுடியும். நில நடுக்கங்கள் மக்களைக் கொல்வதில்லை, நாம் கட்டும் கட்டிடங்களின் மூலம்தான் மரணங்கள் சம்பவிக்கின்றன.
கட்டிடங்களின் கட்டுமானங்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் நாம் பாதுகாப்பாக இருக்க முடியும். முதலில் என்னென்ன காரணங்களால் நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் சரிகின்றன எனப் பார்ப்போம்.
நிலநடுக்கங்களை எதிர் கொள்வது, சமாளிப்பது இரண்டும் மிகவும் அச்சமளிப்பதாகவும் பாதுகாப்பற்றதாகவும் இருக்கின்றன. அறிஞர்கள், வல்லுநர்களுக்கே தீர்வு காண்பதை விட, பிரச்சினையைப் பற்றி புரிந்துகொள்ளவே கடினமாகவும், பெரும் சவாலாகவும் உள்ளது.
நிகழப்போகும் இடம், நேரம், நேரும் பாதிப்பின் தீவிரம் போன்ற எதையுமே துல்லியமாக கணிக்கும் ஆற்றல் நமக்கு இல்லை. நில நடுக்கங்களின் அச்சுறுத்தல்களையும் பேரழிவுகளையும் முறியடிக்க ஆய்வுகளும் முயற்சிகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.
தமிழகத்தின் அனேக பகுதிகள் 3-ம் நிலை பூகம்ப வாய்ப்பு மண்டலத்தில் இடம் பெற்றுள்ளன. அதாவது 1-ம் நிலை, 2 -ம் நிலை பகுதிகளைவிட நிலநடுக்கங்கள் நேர வாய்ப்புகளும் அதிகம், நேர்ந்தால் பாதிப்பின் தீவிரமும் அதிகமாக இருக்கும்.
சமீபத்தில் சென்னை மவுலிவாக்கததில் 11 மாடிக் குடியிருப்பு ஒன்று கட்டி முடிக்கும் முன்பே இடிந்து சரிந்ததில் 61 மனித உயிர்கள் பலியாயின. இது போன்ற பேரிடர்களிலிருந்து நம்மைக் காக்கும் பொறுப்பை விஞ்ஞானிகளிடமும் பொறியியல் தொழில்நுட்ப நிபுணர்களிடமும் விட்டுவிட்டு நாம் ஒதுங்கி இருப்பது அறிவீனம்.
வாஸ்து சாஸ்திர குறிப்புகள் மீது ஆர்வம் காட்டும் நாம் ஒரு சதவீதமாவது கட்டுமான பாதுகாப்பில் காட்டவேண்டும். சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் கட்டிடப் பாதுகாப்பில் அக்கறை கவனம்கொள்ள வேண்டும். அது மட்டும் நடந்துவிட்டால் பூகம்பத்தைத் தாங்கும் கட்டிடம் மிக மிக சாத்தியமான ஒன்றுதான். எதிர்காலக் கட்டிடங்கள் எப்படி இந்த அபாயத்தை முறியடித்து வெல்லப் போகின்றன என்பதைக் காண்போம்.
கூடுதல் தாங்கும் தள உத்தி
பூகம்பங்கள் கட்டிடங்களைத் தாக்கும் விதம், விசை, வலிமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டிடங்களின் திறனையும் பலவீனங்களையும் ஆராய்ந்தால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும்.
கட்டிடச் சுவர்கள் அதிக எடை மற்றும் மேல் கீழ் நோக்கு அழுத்தங்களைத் தாங்கும் வலிமையும், வடிவமைப்பும் இயல்பாகவே பெற்றுள்ளன. ஆனால் விரிந்து, சுருங்கி, நெகிழ்ந்து கொடுக்கக் கூடிய சக்தியற்றவை.
உதாரணத்திற்கு, கரும்பலகையில் எழுத உபயோகப்படும் சாக்பீஸை இரு விரல்களுக்கு இடையே நிறுத்திவைத்து மேலும் கீழுமாக அழுத்தினால் ஓரளவிற்குத் தாங்கிக் கொள்ளும். ஆனால் வளைத்தால் தாக்குப்பிடிக்க முடியாமல் உடைந்துவிடும்.
வளைந்து கொடுக்கும் தன்மை அதற்கு இல்லை. செங்கல், களிமண், சிமெண்ட், கருங்கல் போன்ற கட்டுமானப் பொருட்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இம்மாதிரியான பொருட்கள் அழுத்தத்தைத் (COMPRESSION / STRESS) தாங்கும் ஆற்றலை அதிகம் கொண்டவை. இம்மாதிரி பொருட்களை ஆங்கிலத்தில் BRITTLE MATERIALS என்று அழைக்கிறார்கள்.
காகிதங்களை இணைக்க நாம் பயன்படுத்தும் குண்டூசியை எடுத்துக்கொண்டால், அது வளைந்து கொடுக்கக் கூடியது. கட்டிடங்களில் பயன்படுத்தப்படும் இரும்புக் கம்பிகள் இவ்வகையைச் சேர்ந்தவை. இவற்றை DUCTILE MATERIALS என்று அழைப்பார்கள்.
இந்த இரண்டு ஆற்றல் உடைய பொருட்களைச் சேர்த்துப் பயன்படுத்தும்போது
1) அதிக எடை , அழுத்தத்தைத் தாங்கும் சக்தி பெருமளவுக்குக் கூடும்.
2) அதிர்வுகளைத் தாக்குப் பிடிக்க உதவும் விறைப்புத்தன்மை பல மடங்கு கூடும்.
3. வளைக்கப்படும்போது தாங்கும் சக்தி குறிப்பிடும்படி பெரிய அளவுக்குக் கூடும்
கம்பிகளால் உட்புறம் பலப்படுத்தும் கான்கிரீட் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின் (Reinforced Concrete) அது மிகப் பெரியதொரு புரட்சியைக் கட்டிடங்கள் கட்டும் முறையில் ஏற்படுத்தி உள்ளது.
நிலநடுக்க சமயங்களில் கட்டிங்கள் எவ்வாறு இன்னல்களுக்கு ஆளாகின்றன என்பதை உற்று நோக்கினால் அது மூன்று வழிகளில் தாக்குதல் நடத்துகிறது என்பது தெரிய வருகிறது.
1. மேல் நோக்கு அதிர்வு - Vertical Vibration
2. பக்கவாட்டு அதிர்வு - Lateral Force
எதிர் முடுக்க அதிர்வு - Inertia Force
மேல் நோக்கு அதிர்வு
அஸ்திவாரமும் சுவர்களும் அதிக எடை மேல்கீழ் நோக்கு அழுத்தம் இவற்றைத் திறமையாகச் சமாளிக்கும் வடிவமைப்பையும் வல்லமையையும் பெற்றவை. மற்ற இரு அதிர்வுகளைக் காட்டிலும் மேல் நோக்கு அதிர்வு மிகக் குறைவானதே. அதனால் நாம் இந்த மேல் நோக்கு அதிர்வைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
பக்கவாட்டு அதிர்வு
பக்கவாட்டுச் சுவர்களின் கனம் பெரும்பாலும் 9 அங்குலம்தான். உட்புற, வெளிப்புற சிமெண்ட் பூச்சையும் சேர்த்தால் கூட 10 அங்குலம்தான் வரும். எனவே பக்கவாட்டில் சுவர்களின் சுவர்களின் வலிமை குறைவு. உதாரணமாக இரு செங்கற்களை பக்கவாட்டில் வைத்து ஒரு கராத்தே வீரரால் உடைத்து விட முடியும். அதே சமயம் உயர வாக்கில் உடைக்க முடியாது.
எதிர்முடுக்க விசை
நில அதிர்வு தரைக்கு கீழ் உள்ள கட்டிடப் பகுதிகளை எந்தத் திசையில் தள்ளுகிறதோ அதற்கு எதிர்த் திசையில் தரைக்கு மேலுள்ள கட்டிடப் பகுதியைத் தள்ளுவது எதிர் முடுக்க விசை. மற்ற இருவகை அதிர்வுகளைக் காட்டிலும் மிக அபாயகரமானது.
உதாரணமாக பேருந்தில் செல்லும்போது திடீரென நிறுத்தப்பட்டால் நாம் முன்பக்கமாகச் சரிவோம். வேகம் கூட்டினால் பின்பக்கமாகச் சரிவோம். இதுபோலத்தான் இந்த அதிர்வும். கட்டிடத்தைச் சாய்ப்பதில் இதுதான் முக்கியமான காரணமாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT