Published : 17 Jan 2015 05:44 PM
Last Updated : 17 Jan 2015 05:44 PM

குளியலறைக்கு ஏற்ற தரைத்தளங்கள்

குளியலறைக்குத் தரைத்தளத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, அழகிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் அது நடைமுறைக்கு ஏற்றதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. குளியலறைத் தரைத்தளம் அமைப்பதற்கு இப்போது பல வகையான பொருட்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், சாதக பாதகங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். குளியலறை தரைத்தளத்தை அமைப்பதற்கு முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள்...

தரைத்தளத்தின் நிறம்

தரைத்தளத்திற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறம்தான் குளியலறையின் அழகைப் பிரதிபலிக்கும். நிறமும், வடிவமைப்பும் மிகவும் முக்கியம். குளியலறை பெரிதாக இருப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்க நடுநிலையான, வெளிர் நிறங்களைப் பயன்படுத்தலாம். பளிங்கு, வெள்ளை, பழுப்பு, மென் சாம்பல் போன்ற நிறங்களைத் தரைத்தளத்திற்குப் பயன்படுத்தலாம். அடர் நிறத் தரைத்தளம் அமைப்பதாக இருந்தால் அடர் சாம்பல் அல்லது கறுப்பு போன்ற நிறங்களை உபயோகிக்கலாம். இது குளியறைக்கு வசதியான, பிரம்மாண்டமான தோற்றத்தைக் கொடுக்கும்.

சின்ன இடம், பெரிய தோற்றம்

ஒருவேளை குளியலறை சிறியதாக இருந்தால், தரைத்தளத்தின் டைல்ஸ் குளியலறை சுவரின் நிறத்தோடு ஒத்துப்போகும்படி அமைக்கலாம். அத்துடன் குளியலறையில் பெரிய கண்ணாடியை மாட்டி வைக்கலாம். இவை சிறிய குளியலறையைப் பெரிதாகக் காட்டும். குளியலறை தரைத்தளத்தில் பெரிய டைல்ஸ் பயன்படுத்துவதும் தோற்றத்தைப் பெரிதாகக்காட்டும். ஆனால், பெரிய டைல் சற்று விலை உயர்ந்ததாகவும், அமைப்பதற்கு கடினமானதாகவும் இருக்கும்.

பாதுகாப்பான தரைத்தளம்

குளியலறையின் தரைத்தளம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். தரைத்தளம் வழுக்கும் தன்மையுடன் இல்லாமல் சற்று கடினமானதாகவும், சொரசொரப்பாகவும் இருக்கும்படி பார்த்து அமைக்க வேண்டும். வரவேற்பறைக்குப் பயன்படுத்தும் டைல்ஸை கட்டாயமாகக் குளியலைறைக்குப் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகள், முதியவர்கள் இருக்கும் வீடுகளில் நிச்சயமாகக் கடினமாக இருக்கும் தரைத்தளங்கள்தான் அமைக்க வேண்டும்.

மரத் தரைத்தளம்

திட மரத்தலான தரைத்தளத்தைவிட மூங்கில், தேக்குப் போன்ற வன்மரத்தலான தரைத்தளம்தான் குளியலறைக்கு ஏற்றது. இது குளியலறைக்குக் கதகதப்பையும், ஆடம்பரமான தோற்றத்தைக் கொடுக்கும். சாதாரண மரத்தலான தரைத்தளம் தண்ணீர் படும்போது எளிதில் பாதிப்படையும். ஆனால், மூங்கில், தேக்கு போன்றவை அவ்வளவு எளிதில் பாதிப்படையாது. நவீனக் குளியலறைக்கு ஏற்ற தோற்றத்தை மரத் தரைத்தளம் கொடுக்கும்.

டைல்ஸ் தரைத்தளம்

டைல்ஸ் தரைத்தளம் குளியலறைக்குச் செம்மையான தோற்றத்தைக் கொடுக்கும். ஆனால், இது மற்ற தரைத்தளங்களை ஒப்பிடும்போது சற்று விலையுயர்ந்தது. ஈரப்பதத்தால் பாதிக்கப்படாத டைல்ஸ் இப்போது கிடைக்கின்றது. இந்த டைல்ஸ் தரைத்தளத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, வடிவமைப்புக்கு பலவிதமான வாய்ப்புகள் கிடைக்கின்றன. பல நிறங்களில், அளவுகளில் இந்த டைல்ஸ் தரைத்தளத்தை வடிவமைக்கலாம். கல் டைல்ஸ் நீண்ட நாட்களுக்கு உழைக்கும். அத்துடன், தரை வழுக்காமல் இருக்க கல் டைல்ஸ்தான் ஏற்றது.

கல் தரைத்தளம்

கிரானைட், சுண்ணாம்பு, பளிங்கு போன்ற கற்களான தரைத்தளங்களையும் குளியலறைக்குப் பயன்படுத்தலாம். ஆனால், இவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் உங்கள் பட்ஜெட்டை முடிவு செய்துகொள்ளுங்கள். இந்த இயற்கைக் கற்கள் விலையுயர்ந்ததாக இருந்தாலும் நீண்ட நாட்கள் உழைக்கக்கூடியவை.

தக்கை தரைத்தளம்

தக்கை தரைத்தளம் 1960, 1970 களில் பிரபலமாக இருந்தது. இப்போது மீண்டும் நவீன தரைத்தள வடிவமைப்பில் பயன்பட ஆரம்பித்திருக்கிறது. இந்தத் தக்கைத் தரைத்தளம் சூழலுக்கு உகந்தது. இது மரத்துகள்களில் இருந்து செய்யப்படுவதால் இதற்காகத் தனியாக மரங்கள் வெட்டப்படுவதில்லை.

ரப்பர் தரைத்தளம்

இந்த ரப்பர் தரைத்தளம் குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தும் குளியலறைக்கு ஏற்றது. இதைச் சுத்தப்படுத்துவதும் எளிமையானது. இந்தத் தரைத்தளம் நீர் புகாமலும், வழுக்காமலும் இருக்கும். அதனால் குழந்தைகள் பாதுகாப்பாக இதைப் பயன்படுத்தலாம். இந்த ரப்பர் தரைத்தளத்தில் மரம், கற்கள் போன்ற பொருட்களில் நகல் தோற்றத்தையும் உருவாக்க முடியும்.

கான்கிரீட் தரைத்தளம்

கான்கிரீட் தரைத்தளம் அமைப்பதற்குப் பெரிதாகச் செலவழிக்கத் தேவையில்லை. இந்தத் தரைத்தளத்தை மெருகேற்றி மரம், டைல்ஸ், கல் போன்ற எல்லாப் பொருட்களின் தோற்றத்தையும் கொண்டு வரலாம். வழுக்காமல் இருக்குமாறு வடிவமைத்துக்கொள்ளலாம்.

உலோகத் தரைத்தளம்

வசீகரம், அலங்காரம் போன்றவற்றை விரும்புபவர்களாக இருந்தால் உலோக தரைத்தளம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். குளியலறைக்கு ஆடம்பரத் தோற்றத்தைக் கொடுக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இதைத் தேர்ந்தெடுக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x