Last Updated : 05 Apr, 2014 01:00 PM

 

Published : 05 Apr 2014 01:00 PM
Last Updated : 05 Apr 2014 01:00 PM

வளம் பெருக்கும் வழித் தடங்கள்

சாலை, ரயில் மற்றும் வான்வழிப் போக்குவரத்து வசதிகளால், தலைநகர் சென்னை விஸ்வரூப வளர்ச்சியை எட்டியிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏரி, குளங்களாக இருந்த பல்வேறு பகுதிகள் இன்று கோடிக்கணக்கில் விலைபோகும் மனைகளாக மாற்றப்பட்டு, விண்ணை முட்டும் கட்டடங்களும் எழுப்பப்பட்டுவிட்டன. தலைநகரை நோக்கி தினசரி வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

சென்னையில் இல்லாவிட்டாலும், சென்னைக்கு அருகில் உள்ள புறநகர்ப் பகுதிகளில் ஒரு வீட்டைக் கட்டிவிட வேண்டும் அல்லது நிலம் வாங்கிவிட வேண்டும் என்பதே நடுத்தர மக்களின் லட்சியம். அந்த வகையில், சென்னைப் புறநகர் பகுதிகளில், அடுத்த சில ஆண்டுகளில் வளம் பெருக்கும் பூமிகள் என்று சொல்லும் வகையில் மூன்று பகுதிகள் உருவெடுத்துள்ளன.

ஜி.எஸ்.டி. சாலைப் பகுதி: கிராண்ட் சதர்ன் டிரங்க் எனப்படும் இந்த ஜி.எஸ்.டி. சாலையில்தான் சென்னை பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்தாலும், விமான நிலையம் தொடங்கி, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளைத் தாண்டிய இடங்களும் அபார வளர்ச்சி பெற்றுள்ளன.

இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள மஹீந்த்ரா தொழிற்பேட்டை, ஸ்ரீராம் கேட்வே, அக்‌ஷயாவின் பெல்விட்ரி, ஏரின்ஸ் கோல்ட் சௌக், சாஃபா ஆகிய கட்டுமானங்கள் இதன் வளர்ச்சிக்கு சான்றுகளாகத் திகழ்கின்றன.

இது மட்டுமின்றி, வண்டலூர் - கேளம்பாக்கம் இடையிலான 18 கி.மீ. நீளச் சாலையிலும், குடியிருப்புகள் அதிக அளவில் முளைக்கத் தொடங்கியுள்ளன. இந்த வழித் தடத்தில் ஏராளமான காலி இடங்கள் இருப்பதால், கட்டுமானத் துறையில் உள்ள முன்னணி நிறுவனங்கள், இந்தப் பகுதிகளைக் குறிவைத்துத் தங்களின் அடுத்த கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளன.

வண்டலூர் அருகே 65 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள புதிய புறநகர் பேருந்து நிலையமும், சுற்றுப் பகுதியில் உள்ள இடங்களின் விலையைப் பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது. இந்தப் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது, மேற்கூறிய பகுதிகளின் விலை மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சென்னை - பெங்களூரு வழித்தடம்: சென்னையின் புறநகர் பகுதிகளில் அடுத்த சில ஆண்டுகளில் அபரிமித வளர்ச்சி பெறத் தகுதியுள்ள இடங்களில் ஒன்றாக சென்னை - ராணிப்பேட்டை- பெங்களூரு வழித்தடம் விளங்குகிறது. இதில் ராணிப்பேட்டை வரையிலான வழித்தடத்தில் ஏற்கனவே ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டுவருகின்றன.

குறிப்பாக வாகன உதிரிபாக உற்பத்தி ஆலைகள், மின்னணு உபகரணத் தொழிற்சாலைகள் என வெளிநாட்டு நேரடி முதலீட்டில் உருவான தொழில் நிறுவனங்கள் ஏராளம். வெளிநாட்டைச் சேர்ந்த 400 நிறுவனங்கள் இங்கு தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. இதில், சுமார் 30 நிறுவனங்கள் ஃபார்ச்சூன் - 500 பட்டியலில் இடம்பெற்றவை. ஆசியாவிலேயே மிகப் பெரிய தொழிற்சாலை வழித்தடமாக அமையும் எனவும் கூறப்படுகிறது. எனவே இங்கு அதிவேக ரயில் பாதை அமையவும் எதிர்காலத்தில் வாய்ப்புகள் உள்ளன.

இது மட்டுமின்றி, இப்பகுதியில் அமைய உள்ள கிரீன் ஃபீல்டு விமான நிலையமும், இந்த வழித்தடத்தின் மதிப்பீட்டை அதிகரிக்கச் செய்யும் காரணியாகத் திகழ்கிறது. இந்த விமான நிலையத்திற்கான நிலக் கையகப்படுத்தல் பணி தொடங்கியுள்ள அதே நேரத்தில், இந்தப் பகுதியில் 8 வழிச்சாலையை அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுவருவதாகக் கூறப்படுகிறது. இதனால், இங்கு கட்டமைப்பு வளர்ச்சியும் முன்னேற்றமடையும் என்பதில் சந்தேகமில்லை.

ஓ.எம்.ஆர். சாலை: சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து சிறுசேரி வரையிலான இந்த 20 கி.மீ., தூர சாலையில் தினசரி 30 ஆயிரம் வாகனங்கள் பயணிப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. விண்ணை முட்டும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் இங்கு ஏற்கனவே முளைத்துவிட்டன.

எனினும், வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் இந்த வழித்தடத்தில் தேவையான அளவுக்கு முன்னேற்றம் அடையவில்லை என்றும் ரியல் எஸ்டேட் துறையினர் கூறுகின்றனர். ஆனாலும், இப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளின் மதிப்பீடு இரு மடங்கு உயர்ந்துவிட்டது.

இது ஒருபுறம் என்றால், தமிழ்நாடு தொழிற்சாலை மேம்பாட்டு நிறுவனம் (டிட்கோ) உயிரி பூங்காவை (பயோ பார்க்) 6.13 லட்சம் சதுரடி பரப்பளவுக்கு விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தரமணி பகுதியில் அமைய உள்ள இந்த பூங்காவில், பயோ டெக்னாலஜி, பார்மாசூடிகல்ஸ், நேனோ டெக்னாலஜி மற்றும் இதர ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குத் தேவையான வசதிகள் இருக்கும் எனத் தெரிகிறது.

இதேபோல், சிறுசேரி முதல் மகாபலிபுரம் வரையிலான 25 கி.மீ. தொலைவுள்ள பூஞ்சேரி திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் பணிகள் நடந்துவருகின்றன. இந்த வழித்தடத்தில், 2 புதிய பைபாஸ் சாலைகள் அமைக்கப்பட உள்ளதாகவும், 13 கிராமங்கள் வழியாக இந்த வழித்தடம் செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் ஒரு பைபாஸ் சாலை காலவாக்கம் முதல் வெங்கலேரி வரையும் அமைக்கப்படுகிறது. திருப்போரூர் மற்றும் தண்டலம் ஆகிய பகுதிகள் வழியாக இது அமையலாம் எனக் கூறப்படுகிறது. இதற்காகச் சாலையை விரிவாக்கம் செய்ய நிலம் கையகம் செய்யும் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளன.

மேற்கூறிய மூன்று வழித்தடங்கள் தவிர ஸ்ரீபெரும்புதூர், படப்பை ஆகிய பகுதிகளிலும் ஏராளமான தொழிற்சாலைகள் வந்துவிட்டதால், அங்குள்ள பகுதிகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் இந்தப் பகுதிகளில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில் பிரம்மாண்ட வளர்ச்சியைப் பெறும் என்பதில் ஐயமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x