Published : 20 Dec 2014 03:19 PM
Last Updated : 20 Dec 2014 03:19 PM
சமீபகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மாற்றுக் கட்டுமானப் பொருள்களுள் முக்கியமானது கான்கிரீட் கான்வாஸ் (Concrete Canvas - CC). இது சுருக்கமாக ‘சிசி’ என அழைக்கப்படுகிறது. இது வேறொன்றுமில்லை கான்கிரீட் துணி போன்றது. இதை எளிதாகப் பொறுத்த முடியும். தண்ணீரைத் தடுக்கக்கூடியது.
இத்துடன் வேறு எந்தக் கட்டுமானப் பொருள்களையும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. வெறும் தண்ணீரைச் சேர்த்தாலே போதுமானது. இது மூன்று அளவுகளில் சந்தையில் கிடைக்கிறது. CC5, CC8, CC13 ஆகிய மூன்று வகைகளில் கிடைக்கிறது. அதாவது 5, 8 ,13 மில்லி மீட்டர் திண்மை கொண்டவை.
இந்தத் தொழில்நுட்பம் இங்கிலாந்தில் பத்தாண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது. தொடக்கத்தில் இவை அதிகமாகக் கூடாரங்கள் அமைக்கப் பயன்பட்டன. இதை நமக்குத் தேவையானது போல மிக எளிதாகக் கையாள முடியும். இருக்கக்கூடிய பரப்புக்குத் தகுந்த மாதிரி வெட்டி உபயோகப்படுத்தலாம். இப்படியாக அமைத்து, அதன் மேல் தண்ணீர் தெளித்தால் போதுமானது.
அது சேர்ந்து கொள்ளும். அதாவது 'U' கால்வாய் என வைத்துக்கொண்டால், அதில் அப்படியே இந்தக் கான்வாஸை விரித்துத் தண்ணீரைத் தெளித்தால் போதுமானது. அளவுக்குத் தகுந்தாற்போல ஒன்றின் மேல் ஒன்றை வைத்து எளிதாக இணைக்கலாம். ஒரு நாளுக்குள் இவை தன் உறுதிநிலையைப் பெற்றுவிடும்.
பயன்கள்
சுருட்டப்பட்ட நிலையில் கிடைக்கும் இதை ஒருவர் மட்டும் எளிதாகத் தூக்கிச் செல்ல முடியும். இதற்காக பிரத்யேகமான போக்குவரத்து செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தண்ணீருக்கு அடியிலும் இந்த கான்வாஸைப் பயன்படுத்த முடியும். அது மட்டுமல்ல கடிமான உப்பு நீரிலும் இது அதே உறுதியுடன் செயலாற்றும். இது எளிதில் கீறல் விடக்கூடியது அல்ல. சுற்றுச்சூழலுக்கும் உகந்தது. இதைத் தயாரிக்கும்போது கேடு விளைவிக்கக் கூடிய கார்பன் டை ஆக்ஸைடு அவ்வளவாக வெளியேறுவதில்லை.
அரிப்பைத் தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது. அதனால் வேதிப் பொருள்கள் இதன் மீது படுவதால் சேதம் ஏற்படாது. இதை நிறுவ பிரத்யேகமான சாதனங்கள் தேவையில்லை. அதனால் மின்சக்தி, இயந்திர சக்தி சேமிக்கப்படும். தற்காலிகப் பயன்பாட்டுக்கு இதைப் பயன்படுத்தினால் இதை அப்புறப்படுத்துவதும் மிக எளிது.
பயன்பாடு
கால்வாய் அமைக்க இவற்றைப் பயன்படுத்தலாம். நீண்ட தூரம் கால்வாய் அமைக்க கான்கிரீட் கான்வாஸைப் பயன்படுத்தும்போது நேர விரயம் தவிர்க்கப்படும். மேலும் கால்வாயின் கரடுமுரடான மேற்பரப்புக்குத் தகுந்தாற்போல் இதை விரித்துக்கொள்ள முடியும். தண்ணீர்க் குழாய் பதிக்கும்போது பாதுகாக்க அதைச் சுற்றி கான்கிரீட் கான்வாஸ் அமைக்கலாம். தற்காலிகமாகத் தரையைச் சமன்படுத்த வேண்டும் எனில், அதற்கும் நேரம் எடுக்கும்.
சட்டென கான்கிரீட் கான்வாஸை விரித்துவிட்டால் உடனடியாகத் தரை சமமாகும். இதைத் தற்காலிகப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்துக்கொண்டு பிறகு அகற்றிவிடலாம். தண்ணீருக்கு அடியில் பிவிசி பைப்புகளைப் பதிக்க வேண்டிய சூழலில் இதைப் பயன்படுத்தலாம். விரிசல்களால் கட்டிடம் விழுந்துவிடாமல் இருக்க ஆதாரமாக இந்த கான்வாஸைக் கொண்டு கட்டலாம். எளிய வகையில் கூடாரம் அமைக்க இதைப் பயன்படுத்தலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT