Published : 06 Jul 2019 09:31 AM
Last Updated : 06 Jul 2019 09:31 AM
சில ஆண்டுகளாக இந்திய ரியல் எஸ்டேட் துறையில் நீடித்துவந்த மந்த நிலை 2018-ல் மாறியது. ரியல் எஸ்டேட் விற்பனை முன்னேற்றம் கண்டது. அந்த ஓராண்டில் இந்திய அளவில் 1,36,518 வீடுகள் (ஜே.எல்.எல். ஆய்வறிக்கையின்படி) விற்பனை ஆயின.
இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 40,160 வீடுகள் அதிகம். ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட இந்த ஏறுமுகம் இந்த ஆண்டும் தொடர்கிறது என இப்போது வெளியாகியிருக்கும் ஜே.எல்.எல். ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்திய ரியல் எஸ்டேட் கடந்த சில ஆண்டுகளாக இறங்குமுகமாகவே இருந்தது. பண மதிப்பு நீக்கம், மணல் தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் இந்தச் சரிவு ஏற்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து வீட்டு விற்பனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பல ரியல் எஸ்டேட் ஆய்வறிக்கைகள் வெளியாயின.
2017-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த வளர்ச்சி முக்கியமானது. 2018-ல் நீடித்த இந்த வளர்ச்சி, முடிவடைந்த 2019 முதல் அரையாண்டு வரை தொடர்வதாகவும் புள்ளி விவரங்களைச் சுட்டிக்காட்டி இந்த அறிக்கை சொல்கிறது. அதேநேரம் புதிய வீட்டுத் திட்டங்கள் 2018-ம் முதல் அரையாண்டுடன் ஒப்பிடும்போது இந்த அரையாண்டில் வெகு 9,244 ஆகக் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை சொல்கிறது.
இந்திய அளவில் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது மும்பை, புனே, பெங்களூரூ, கொல்கத்தா, ஹைதராபாத், தேசியத் தலைநகர்ப் பகுதிகள் ஆகிய நகரங்களில் விற்பனை சென்ற 2018-ன் முதல் அரையாண்டைக் காட்டிலும் 11 சதவீதம் அதிகரித்துள்ளது. வீட்டு விற்பனையில் முதலிடம் பெறும் மும்பையின் இந்த அரையாண்டு விற்பனை கடந்த 2018-ன் முதல் அரையாண்டைக் காட்டிலும் 3,378 அளவு அதிகரித்துள்ளது.
அதேபோல் மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்கள் மட்டுமே 2018-ன் முதல் அரையாண்டைக் காட்டிலும் அதிகமான புதிய வீட்டுத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 2018-ன் முதல் அரையாண்டில் 18,196 ஆக இருந்த மும்பையின் புதிய வீட்டுத் திட்டங்கள், இந்த அரையாண்டில் 28,723 ஆக அதிகரித்துள்ளன. 2018-ன் முதல் அரையாண்டில் 16,495 ஆக இருந்த பெங்களூருவின் புதிய வீட்டுத் திட்டங்கள், இந்த அரையாண்டில் 18,273 ஆக அதிகரித்துள்ளன.
சென்னை, புனே, கொல்கத்தா, ஹைதராபாத், தேசியத் தலைநகர்ப் பகுதிகள் ஆகிய நகரங்களில் புதிய வீட்டுத் திட்டங்கள் தொடங்குவது சென்ற 2018-ன் முதல் அரையாண்டைக் காட்டிலும் கிட்டதட்ட பாதியாகக் குறைந்துள்ளது. புதிய வீட்டுத் திட்டங்காள் தொடங்குவதில் இந்திய அளவில் கொல்கத்தா கடைசி இடத்தைப் பெறுகிறது.
2018-ன் முதல் அரையாண்டில் 7,736 ஆக இருந்த பெங்களூருவின் புதிய வீட்டுத் திட்டங்கள், இந்த அரையாண்டில் 2,652 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. புதிய வீட்டுத் திட்டங்கள் தொடங்குவது சென்ற ஆண்டைக் காட்டிலும் 22 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்திய அளவில் ஏறுமுகம் கண்டுள்ள ரியல் எஸ்டேட், சென்னையைப் பொறுத்த அளவில் சுணக்கத்துடன் இருப்பதாகத்தான் இந்த அறிக்கையின் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இந்திய அளவில் வீட்டு விற்பனை வளர்ச்சி அடைந்திருக்கும் சூழலில் இந்த முதல் அரையாண்டின் விற்பனை சென்னையில் 7 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
2018-ன் முதல் அரையாண்டில் 8,237 ஆக இருந்த சென்னையின் வீட்டு விற்பனை இந்த முதலாம் அரையாண்டில் 7,660 ஆகக் குறைந்துள்ளது. ஆனால், 2018-ன் இரண்டாம் அரையாண்டின் விற்பனையைக் காட்டிலும் இது அதிகம். 2018-ன் இரண்டாம் அரையாண்டில் வீட்டு விற்பனை 6,186 ஆக இருந்தது.
இந்த முதலாம் அரையாண்டில் விற்பனை கடந்த இரண்டாம் அரையாண்டைவிட 1,474 எண்ணிக்கை அதிகம். புதிய வீட்டுத் திட்டங்கள் தொடங்குவது 51 சதவீதம் குறைந்துள்ளது. 2018-ன் முதலாம் அரையாண்டில் புதிய வீட்டுத் திட்டங்கள் தொடங்குவது 8,596 ஆக இருந்தது.
இந்த அரையாண்டில் அது பாதியாகக் (4,189) குறைந்துள்ளது. ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் விற்கப்படாமல் இருப்பதால்தான், புதிய திட்டங்கள் தொடங்குவதும் குறைந்துள்ளதாக இந்த அறிக்கை சொல்கிறது. அதே நேரம் நடுத்தர மக்களுக்கான வீட்டுத் தேவை அதிகரித்திருப்பதாகவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதனால் அடுத்த அரையாண்டில் இந்த விற்பனை உயரும் என எதிர்பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT