Last Updated : 26 Aug, 2017 11:00 AM

 

Published : 26 Aug 2017 11:00 AM
Last Updated : 26 Aug 2017 11:00 AM

அறிவியலின் மூன்றாவது கண்

வீட்டு வளாகத்துக்குள்தான் தண்ணீர் ஏற்றும் மோட்டார் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால், கட்டிடத்துக்கு வெளியே சுற்றுச்சுவருக்குள் பொருத்தப்பட்டிருந்த அதை யாரோ இரவோடு இரவாகக் கழற்றிச் சென்றுவிட்டார்கள். மூன்று நாட்கள் வெளியூர் சென்று விட்டு வந்து பார்த்தால் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோ திறந்து கிடக்க, விலை உயர்ந்த பொருட்களைக் காணோம்.

குறுகிய தெரு. வீட்டுக்குள் பைக்கை நிறுத்த இடமில்லை. வீட்டுக்கு வெளியே அதை நிறுத்திவைத்திருந்தபோது ஒரு நாள் இரவு பைக் களவு போய்விட்டது. மேலே குறிப்பிட்ட நிகழ்வுகள் நடந்து முடிந்தவுடன் இப்போதெல்லாம் பலரும் கேட்கும் கேள்வி ‘உங்கள் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தி இருக்கிறீர்களா?’ என்பதுதான். காவல்துறையிடம் புகார் செய்யச் சென்றால் அங்கும் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. 

ஆக தொழிற்சாலைகள், வங்கிகள், பிரம்மாண்டமான கடைகள், ஏ.டி.எம். மையம் ஆகியவைதான் சிசிடிவி கேமராவின் களங்கள் என்பதைத் தாண்டி வீடுகளிலும், வீட்டைச் சுற்றிலும் சிசிடிவி கேமரா பொருத்துவது என்பது கொஞ்சம் கொஞ்சமாகப் பரவலாகிவருகிறது. எனவே இதுபற்றித் தெரிந்துகொள்வதும் தெளிவுகொள்வதும் நல்லது. 

சிசிடிவி கேமரா பல வடிவங்களிலும் அளவுகளிலும் தயாரிக்கப்படுகின்றன. எந்த அளவு துல்லியமான படங்களை அவற்றால் எடுக்க முடியும். ஒரு நிமிடத்துக்கு எவ்வளவு படங்களை எடுத்துத் தள்ளும், அந்த கேமராக்களால் தங்கள் கோணங்களை மாற்றி நகர்ந்தபடி படமெடுக்க முடியுமா என்பதையெல்லாம் பொருத்துதான் சிசிடிவி கேமராவின் விலை மாறுபடும்.

குளோஸ்டு சர்க்யூட் டி.வி. என்பதுதான் சிசிடிவி என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் படங்களை மட்டுமே இவை உள்வாங்கிக்கொள்ளும். சம்பந்தப்பட்டவர்கள் பேசுவதெல்லாம் பதிவாகாது (சில குற்ற வழக்குகளில் சிசிடிவியில் பதிவானவர்களின் உதட்டசைவைக் கொண்டு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள செவித்திறனற்ற – பேச்சுத்திறனற்றவர்களுக்குப் பயிற்சி கொடுப்பவர்களின் உதவி கோரப்படுவதுண்டு).

வழக்கமான டி.வி. என்பது ஒளிப்பதிவு சிக்னல்களைப் பொது மக்களுக்கு அளிக்கும். ஆனால், சிசிடிவி அப்படியல்ல. அது closed circuit. சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே அவற்றைப் பார்க்க முடியும். சின்னச் சின்ன கடைகளிலெல்லாம் இப்போது சிசிடிவி கேமராவைக் காண முடிகிறது. பிற தளங்களிலுள்ள ஊழியர்கள் சரியாக வேலை செய்கிறார்களா வாடிக்கையாளர்களுக்கு ஒழுங்கான விதத்தில் சேவை அளிக்கப்படுகிறதா என்பதையெல்லாம் இருந்த இடத்திலிருந்தே கடையின் முதலாளியோ நிர்வாகியோ கவனிக்க முடியும்.

வெளிப்புறச் சுவர்களில் பொருத்திவிட்டால் வெளி நடமாட்டமும் தெரியும். நாம் கடையைப் பூட்டிக்கொண்டு சென்ற பிறகும்கூட வெளிப்புறங்களில் நடைபெறும் திருட்டு முயற்சிகளை இவை வெளிப்படுத்துகின்றன.

பிரிட்டனில்தான் உலகில் வேறெந்த நாட்டையும்விட இவ்வளவு பேருக்கு ஒரு சிசிடிவி கேமரா என்கிற விகிதம் அதிகம் உள்ளதாம். சிசிடிவி கேமராக்கள் பொதுவாகவே குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன என்கிறார்கள். இதுபோன்ற கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் இடங்களைப் பல திருடர்கள் தவிர்க்கிறார்கள். ஆக திருடர்களைப் பிடிப்பதற்கு உதவுவதுடன் திருடர்களைத் தவிர்க்கவும் சிசிடிவி கேமராக்கள் உதவுகின்றன. 

பல மேலை நாடுகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட வளாகங்களுக்குக் கொஞ்சம் குறைவாகவே இன்ஷுரன்ஸ் தொகையை வசூலிக்கிறார்கள், இந்தியாவில் அல்ல. ரிஸ்க் குறைவு என்பதால் காப்பீட்டு நிறுவனம் நஷ்ட ஈடு அளிக்க வேண்டிய சம்பவங்களும் குறைகின்றன. எனவேதான் சற்றுக் குறைவான பிரிமீயத்துக்கு ஒத்துக் கொள்கிறார்கள் (நீங்கள் கதவைத் திறந்து போட்டுவிட்டுப் பக்கத்து வீட்டுக்குச் சென்றிருந்த நேரத்தில் உங்கள் வீட்டில் திருட்டு நடந்தால் இன்ஷுரன்ஸ் நிறுவனம் நஷ்ட ஈடைக் கொடுக்க மறுக்கலாம்).

இணையத்துடன் இணைந்து செயல்படும் சிசிடிவி கேமராக்களும் உண்டு. ஃப்ளோரிடாவைச் சேர்ந்த ஜென்னி தாமஸ் என்ற பெண் தனது வீட்டில் திருட்டு நடப்பதைத் தனது அலுவலகத்திலிருந்தே பார்த்து காவல்துறையைத் தொடர்பு கொள்ள, அந்தத் திருடர்கள் பிடிபட்ட சம்பவம் நிகழ்ந்தது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x