Published : 26 Aug 2017 11:03 AM
Last Updated : 26 Aug 2017 11:03 AM
செ
ன்னை என்றதும் பழைய திரைப்படங்களில் சென்ட்ரல் ரயில் நிலையத்தைக் காண்பிப்பார்கள். விரிந்து பரந்த அண்ணா சாலையைக் காண்பிப்பார்கள். இன்னும் எல்.ஐ.சி. கட்டிடம், ஏ.வி.எம். ஸ்டுடியோ எனப் பல அடையாளங்கள் மூலம் சென்னை நகரைக் காட்சிப்படுத்துவர்கள். ஆனால், இவை அல்லாமல் கடந்த இரு பத்தாண்டுகளில் சென்னைக்குப் பல புதிய அடையாளங்கள் வந்துசேர்ந்திருக்கின்றன.
சமீப காலத்திய திரைப்படங்களில் கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையம் போன்ற சென்னையின் புதிய அடையாளங்கள் காண்பிக்கப்படுகின்றன. இது போன்ற சென்னையின் புதிய அடையாளங்கள் குறித்த ஒளிப்படத் தொகுப்பு:
கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையம்
பாரீஸ் கார்னர் பகுதியிலிருந்து பேருந்து நிலையத்துக்கு மாற்றாக 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்தப் பேருந்துநிலையம். 37 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இது ஆசியாவின் மிகப் பெரிய பேருந்து நிலையம். ஒருநாளைக்கு 4,800 பேருந்துகள் வரை இந்த நிலையத்துக்கு வருகின்றன. ஒருநாளைக்கு ஐந்து லட்சம் பேர்வரை இதைப் பயன்படுத்துகிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது.
கோயம்பேடு மொத்தச் சந்தை வளாகம்
ஆசியாவின் மிகப் பெரிய சந்தை இதுவே. 295 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இது நான்கு பகுதிகளைக் கொண்டது. இந்தச் சந்தை காய்கறி, கனி, பூ, ஜவுளி, உணவு தானியங்கள் ஆகியவற்றுக்கான கடைகளைக் கொண்டது. மத்திய சென்னையிலிருந்த கொத்தவால்சாவடி சந்தைக்கு மாற்றாக 1996-ல் தொடங்கப்பட்டது.
செம்மொழிப் பூங்கா
20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இது 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தாவரவியல் பூங்காவான இதில் 500-க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் உள்ளன. பூங்கா அமைக்கப்படுவதற்கு முன்பு அங்கிருந்த 80 மரங்களும் இந்தப் பூங்காவின் பகுதியாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில் சென்னையின் முதல் டிரைவ்-இன் உணவு விடுதியான உட்லாண்ட்ஸ் முன்பு இருந்தது.
கத்திப்பாரா மேம்பாலம்
ஆசியாவின் மிகப் பெரிய வண்ணத்துப் பூச்சி மேம்பாலம் இது. 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மேம்பாலம் 6 பிரிவுப் பாதைகளைக் கொண்டது. அண்ணா சாலை, ஜி.எஸ்.டி. சாலை, ஜவஹர்லால் நேரு சாலை, பட் சாலை ஆகிய சாலைகளை இந்த மேம்பாலம் இணைக்கிறது. இது 40,000 சதுர மீட்டரில் அமைந்துள்ளது.
தமிழ்நாடு பல்நோக்குச் சிறப்பு மருத்துவமனை
தமிழ்நாடு தலைமைச் செயலகப் பயன்பாட்டுக்காகக் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் இப்போது பல்நோக்கு மருத்துவமனையாகச் செயல்பட்டுவருகிறது. 2010-ம் ஆண்டு இந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. 9,30,297 சதுர அடிப் பரப்பில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம் அண்ணாசாலை தொடங்கும் இடத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
சென்னை மெட்ரோ
சென்னையின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில் சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஆலந்தூரிலிருந்து கோயம்பேடு சந்தை வரையிலான முதல் சேவை 2015-ல் தொடங்கப்பட்டது. இரண்டாவது சேவை இந்தாண்டில் தொடங்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பெரிய மெட்ரோ நிறுவனங்களில் ஒன்றாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலைவாணர் அரங்கம்
சென்னை வாலாஜா சாலையிலுள்ள கலைவாணர் அரங்கம் சென்னையின் மிகப் பெரிய அரங்கங்களுள் ஒன்று. 1952-ல் கட்டப்பட்ட இந்த அரங்கம் 1974-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. பிறகு இந்தக் கட்டிடம் இடிக்கப்பட்டு, அதில் ஓர் அரங்கம் உருவாக்கப்பட்டு 2016-ல் பயன்பாட்டுக்கு வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT