Published : 26 Aug 2017 10:58 AM
Last Updated : 26 Aug 2017 10:58 AM
உ
லகமயமாக்கலுக்குப் பிறகு, இந்தியா வளர்ச்சி, வளர்ச்சி என்று நகரங்களையும் துணை நகரங்களையும் உருவாக்கிக்கொண்டு செல்கிறது. இந்த உருவாக்கம் கட்டுமானத் துறையில் ஒரு பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதனால் மணல், சிமெண்ட், இரும்புக் கம்பிகள், தண்ணீர் போன்றவற்றுக்கான பெரும் பற்றாக்குறையை நாம் எதிர்கொண்டுவருகிறோம். மேலும் நம் பண்பாடு, சுற்றுச்சூழல், காலநிலை, நம் பாரம்பரிய கட்டுமான வடிவமைப்பு போன்றவற்றிலும் இதன் பாதிப்பு உள்ளது. இவற்றையும் நாம் சமாளித்தாக வேண்டுமே.
இவற்றை எப்படிச் சமாளிப்பது என்ற எண்ணத்தின் அடிப்படையில் வளர்ச்சியையும் பாதிக்காமல், இயற்கை வளத்தையும் வீணாக்காமல், நம் பாரம்பரிய கட்டுமான வடிவமைப்பு முறையில், வீடுகளை உருவாக்கும் புதிய தலைமுறைக் கட்டிட வடிவமைப்பாளர்கள் இப்போது அதிகரித்துவருகிறார்கள்.
இவர்கள், பழைய, மறு சுழற்சிக்குள்ளாகும் பொருள்களைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் வீடுகளை உருவாக்குகிறார்கள். இந்த மாதிரி வீடுகள், கண்ணைக் கவரும் வகையில் அமையாதோ என்ற அச்சம் ஏற்படலாம்.
ஆனால், இவர்கள் உருவாக்கும் வீடுகள் நவீன வடிவமைப்பில், கண்ணைக் கவரும் வண்ணங்களில், பளபளப்பான தளங்களுடன், மிகவும் உறுதியாக இருக்கும் என்று இந்த வடிவமைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். நமது பண்பாடும், மேற்கத்திய வடிவமப்பையும் இணைந்து மிகவும் அழகியலோடு விளங்கும் இந்த வீடுகள் தற்போது பிரபலமடைந்துவருகின்றன.
இவ்வகைக் கட்டுமான நிறுவனங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்:
பென்னி குரியகோஸ் சென்னை
குரியகோஸ் தன் வழிகாட்டியான லாரி பேக்கரைப் போன்று, நீண்டகாலம் நிலைத்திருக்கும் பிராந்திய கட்டிட வடிவமைப்பை ஊக்குவிப்பதில் பிரபலமானவர். காலநிலைக்கும் பண்பாட்டுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தகுந்த வண்ணம், இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, குறைந்த செலவில் வீடு கட்டுவது இவரின் சிறப்பு. பழைய வீட்டுப் பாகங்களின் பயன்பாட்டை இவர் பெரிதும் ஊக்குவிப்பார், இவர் வடிவமைப்பு நன்கு இயற்கை ஒளி நிரம்பியதாகவும் காற்றோட்டம் மிக்கதாகவும் பசுமையானதாகவும் பெரிய முற்றம் கொண்டதாகவும் இருக்கும்.
தண்ணல் ஹேண்ட் ஸ்கல்ப்டட் ஹோம் திருவண்ணாமலை
நாம் வசிக்குமிடம், நம் மனதின் நீட்சி என்பது, இதன் நிறுவனர் பிஜு பாஸ்கரின் நம்பிக்கை. உள்ளூரில் கிடைக்கும் எளிய பொருட்களைக் கொண்டு, குறைந்த செலவில், தகுந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தரமான வீடுகளைக் கட்டுவதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதே இவரின் நோக்கம்.
த அரோமா குழு புதுச்சேரி
வீடுகளின் வடிவமைப்பு இயற்கையைப் பூர்த்திசெய்வதாக இருக்க வேண்டுமேயன்றி, அதனுடன் போட்டி போடுவதாக இருக்கக் கூடாது என்பதே, திருப்தி தோஷி என்ற கட்டிடக் கலை வல்லுநரால் நிர்வகிக்கப்படும் இந்த நிறுவனத்தின் நோக்கமாகும். புதுச்சேரியைச் சேர்ந்த இவர், உள்ளூரில் கிடைக்கும் ஆட்களையும் பொருட்களையும் கொண்டு, சுற்றுப்புறச் சூழலுக்குப் பாதிப்பின்றி, அங்குள்ள வட்டாரக் கட்டிடக் கலை வடிவமைப்பில் வீடுகளைக் கட்டுவதில் புகழ்பெற்றவர்.
யூஜீன் பாண்டாலா கொல்லம்
மண் கலவை, இயற்கைப் பொருள்கள் ஆகியவற்றைக் கொண்டு வீடுகள் கட்டுவதில் இவர்கள் மிகவும் பிரசித்தமானவர்கள். மண், சரளைக் கல், கீற்றுக்கட்டு கொண்டு இவர்கள் உருவாக்கும் வீடுகளின் வடிவமைப்பு மிகவும் புத்துணர்வு அளிப்பதாக இருக்கும்.
பயோம் என்விரான்மெண்டல் சொல்யூஷன்ஸ் பெங்களூரு
சித்ரா விசுவநாதன் எனும் கட்டிடக் கலை வல்லுநரால் நடத்தப்படும் இந்த நிறுவனத்தின் வடிவமைப்பு நீண்டகாலம் நிலைக்கக் கூடியது. காலநிலையைக் கருத்தில் கொண்டு, இயற்கை வளத்தை வீணடிக்காமல், வீடுகளைக் கட்டுவது ரசாயன வண்ணங்கள், சிமெண்ட் கலவைகள் போன்றவை இல்லாமல், வெறும் செம்மண் கலவை, பழைய மரங்கள் ஆகியவற்றைக் கொண்டு வீடுகளை உருவாக்குவதே இவர்களின் சிறப்பு. இவர்கள் உருவாக்கும் வீடுகள் மனதைக் கொள்ளைகொள்ளும். மழை நீர் சேகரிப்பு, சூரிய ஒளி மின்சாரம் போன்றவை இந்த வீடுகளின் இதர சிறப்பு அம்சங்கள்.
காமத் டிசைன் ஸ்டுடியோ புதுடெல்லி
ரேவதி காமாத் என்பவரால் நடத்தப்படும் இந்த நிறுவனம், மண் கலவையாலும் பழைய மரங்களாலும் வீடுகளைக் கட்டிவருகிறது. கைவிடப்பட்ட குவாரியில், அவர் வசிக்கும், வெறும் மண்ணால் கட்டப்பட்ட வீடு, மண் வீடுகளின் மீதான அவரின் காதலுக்குச் சான்றாக உள்ளது
மொஸைக் கோவா
டீன் டி குருஸ் என்பரால், 2012-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், கோவாவின் பாரம்பரிய கட்டிட வடிவமைப்பில், குறைந்த செலவில், சுற்றுச்சூழலுக்குக் கேடின்றி, வீடுகளைக் கட்டுவதிலும், பழைய பாரம்பரிய வீடுகளைப் புதுப்பித்தலிலும் மிகவும் திறமைபெற்றது.
நாட்டின் வளர்ச்சி நமக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு நம் நாட்டின் இயற்கை வளங்களும் நமக்கு முக்கியம். ஏனென்றால், இயற்கை வளம் நமக்கு மட்டும் சொந்தமானதில்லை, அது நம் வருங்கால சந்ததிக்கும் சொந்தமானது. அதைப் பாதுகாத்து, வருங்காலத்துக்கு அளிப்பது நம் அனைவரின் கடமையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT