Last Updated : 19 Aug, 2017 11:09 AM

 

Published : 19 Aug 2017 11:09 AM
Last Updated : 19 Aug 2017 11:09 AM

மீண்டெழும் சென்னை

ரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வெள்ளம் சூழ்ந்தது. நாட்டின் மிக மோசமான வெள்ளப் பாதிப்புகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. சென்னைப் புறநகர்ப் பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கின. கடந்த ஆண்டு முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானார். அதன் பிறகு பன்னீர் செல்வம் முதல்வரானார். அவர் ராஜினாமா செய்தததால் ஒரு நிலையில்லாத தன்மை ஏற்பட்டது. அடுத்தடுத்த அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டன. இந்தக் காரணங்களால் கடந்த இரு ஆண்டுகளாகச் சென்னையின் ரியல் எஸ்டேட்டும் பாதிப்புக்குள்ளானது. இந்தப் பெரும் பாதிப்புகளில் இருந்து இந்த ஆண்டில்தான் சென்னை முழுமையாக மீண்டுவருகிறது.

முடிவடைந்த 2017-ம் ஆண்டின் காலாண்டு குறித்த நைட் ப்ராங்க் இந்தியாவின் ஆய்வு இதைத் தெரிவிக்கிறது. இந்தக் காலாண்டில் வீடு விற்பனையும் புதிய திட்டங்கள் தொடங்கப்படுவதும் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை சொல்கிறது. ரூ.50 லட்சத்துக்கும் குறைவான வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

சென்னை ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரை இந்தியாவில் குறிப்பிடத்தக்க சந்தையாக இருந்துவருகிறது. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு உலக அளவில் ஏற்பட்ட ரியல் எஸ்டேட் மந்த நிலையிலும் சென்னை சந்தைதான் ஓரளவு தாக்குப் பிடித்தது. மும்பை, பெங்களூரூ நகரங்களுடன் ஒப்பிட்டால் மிகப் பெரிய வளர்ச்சி இல்லையென்றாலும், மோசமான தேக்க நிலைக்குப் பின்தங்காத ஒரு சந்தையாக இது இருந்துவருகிறது. ஆனால், தமிழகத்தில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு கூட்டப்பட்டது ஒரு பின்னடைவாக இருந்தது. அதேசமயம் சிமெண்ட் விலை அதிகரிப்பும் மணல் தட்டுப்பாடும் தீராத பிரச்சினையாக இருந்தன.

இவற்றில் அரசு சமீபத்தில் வழிகாட்டி மதிப்பைக் குறைத்தது. ஆனால், பத்திரப் பதிவுக் கட்டணத்தை அதிகரித்துவிட்டது. அதே நேரம் மணல் தட்டுப்பாட்டைக் குறைக்க ஆன்-லைன் மணல் விற்பனையைத் தொடங்கியது. ஆனாலும் குவாரிகள் குறைக்கப்பட்டதால் தட்டுப்பாடு நீங்கவில்லை. சமீப காலத்தின் இந்தப் பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டும் ரியல் எஸ்டேட் மீண்டு வருகிறது.

2016-ம் ஆண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிட்டால் 2017-ம் ஆண்டின் முதல் அரையாண்டில் குறைந்த விலை வீடுகள் அதிகமாகி உள்ளன. புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதேபோல் 2017-ம் ஆண்டின் முதல் அரையாண்டில் சொகுசு வீடுகளும் 2016-ம் ஆண்டின் முதல் அரையாண்டைவிட அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை சொல்கிறது.

அதுபோல விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கையும் 30 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளதாகவும் கூறுகிறது. ஜே.எல்.எல். ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனம் சென்னையின் வர்த்தக ரியல் எஸ்டேட் வளர்ச்சியைப் பற்றியும் கூறுகிறது. 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 20 சதவீதம்வரை வர்த்தக ரியல் எஸ்டேட்டுக்கான தேவை அதிகரித்துள்ளது.

சென்னையின் ஐடி, ஆட்டோமொபைல் உள்ளிட்ட தொழில் துறை சார்ந்த தொழிலாளர்களை நம்பித்தான் சென்னை ரியல் எஸ்டேட் பெரும்பாலும் இருக்கிறது. அதனால் அவர்கள் வேலை பார்க்கும் இடத்துக்கு அருகிலேயே வீடுகள் கட்டப்படுவதும் அதிகரித்துவருகிறது. சென்னையின் வளர்ச்சி மிக்க ரியல் எஸ்டேட் பகுதியான தென் சென்னைபோல், மேற்குச் சென்னையிலும் இப்போது வீடுகள் விற்பனை அதிகரித்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் வீட்டுப் பற்றாக்குறை தீர இந்த வளர்ச்சி வழிவகுக்கும் என நம்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x