Published : 12 Aug 2017 11:34 AM
Last Updated : 12 Aug 2017 11:34 AM
ஒ
ரு வீடு அழகாக இருப்பதைவிட ஆரோக்கியமாக இருப்பதுதான் அவசியமானது. வீட்டை அழகாகவும் பாதுகாப்பாகவும் வைத்துகொள்ளவதற்கு எவ்வளவு மெனக்கெடுகிறோமோ, அதே அளவுக்கு வீட்டில் வசிப்பவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் மெனக்கெட வேண்டும். வீட்டை வடிவமைப்பதற்கு அலங்காரப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கும்போது, அதில் வீட்டில் வசிப்பவர்களின் ஆரோக்கியமும் அடங்கியிருக்கிறது என்பதைக் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும். ஆரோக்கியமான முறையில் வீட்டை வடிவமைப்பதற்கான சில வழிமுறைகள் இதோ..
கதிரவனை வரவேற்க
சூரியன் வீட்டுக்குள் நுழைவதற்கு எந்த அளவுக்கு இடம் அளித்திருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு வீட்டில் வசிப்பவர்கள் ஆரோக்கியமாக இருக்கலாம். பகல் பொழுதுகளில் விளக்குகளின் பயன்பாடு தேவைப்படாத வகையில் வீட்டை வடிவமைக்க வேண்டும். இது மின்சார செலவைப் பெரிய அளவில் குறைக்கும். ஜன்னல்களைத் தெற்கு நோக்கி வடிவமைத்தால், வீட்டுக்குள் போதுமான சூரிய வெளிச்சம் வருவதற்கு அது வாய்ப்பாக அமையும். வீட்டுக்குள் காலையில் சூரிய வெளிச்சம் நுழையும்போது, அது பலவகையான தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும்.
வீட்டின் அறைக்கலன்களைத் தேர்ந்தெடுக்கும்போது மரத்தாலான பொருட்களைத் தேர்ந்தெடுக்கவும். இது வீட்டில் வேதிப் பொருட்களின் தாக்கத்தைக் குறைக்க உதவும். சூழலுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஏற்ற இந்த அறைக்கலன்களால் பல நன்மைகள் இருக்கின்றன. கூடுமானவரை, பிளாஸ்டிக், பார்ட்டிக்கல் போர்டு, குரோமிய உலோகம் போன்ற பொருட்களைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. மூங்கில் அறைக்கலன்களைத் தேர்ந்தெடுப்பதும் பொருத்தமாக இருக்கும்.
பசுமை அலங்காரம்
வீட்டுக்குள் செடிகளை வளர்ப்பதைவிட ஆரோக்கியமான விஷயம் வேறு இருக்க முடியாது. செடிகள், வீட்டுக்குள் சுத்தமான காற்றைச் சுவாசிக்கவும், அறையில் இருக்கும் ஆபத்துவிளைவிக்கும் வேதிப்பொருட்களை நீக்கவும் உதவும். ஆரோக்கியம், பசுமை அழகு என இரண்டையும் வீட்டுக்கு வழங்கக்கூடியவையாகச் செடிகள் இருக்கும். உங்கள் வீட்டுக்கும் காலநிலைக்கும் ஏற்ற மாதிரி செடிகளைத் தேர்தெடுக்கவும். அது சிறியதாகவும் இருக்கலாம். பெரியதாகவும் இருக்கலாம். ‘பேம்போ பாம்’ (Bamboo Palm), ‘பார்லர் பாம்’ (Parlor Palm), ‘பீஸ் லில்லி’ (Peace Lily) போன்ற செடிகள் உட்புறக் காற்றை அதிகரிக்க உதவக்கூடியவை.
பசுமை விளக்குகள்
ஆற்றல் திறன்மிகுந்த விளக்குகளைப் பயன்படுத்துவது சூழலுக்கு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவும். பசுமை இல்ல வாயுக்களின் தாக்கத்தைக் குறைப்பதற்கு ஆற்றல் திறன்மிகுந்த விளக்குகள் பயன்படுகின்றன. அதனால், வீட்டுக்கு விளக்குகளைத் தேர்ந்தெடுக்கும்போது, ஆற்றல் திறன்மிகுந்த விளக்குகளைத் தேர்ந்தெடுக்கவும்.
கரிமப் பொருட்களைத் தவிர்க்க
வாலட்டைல் ஆர்கானிக் காம்பவுண்ட்ஸ் (VOC) எனப்படும் கரிமச் சேர்மங்கள் நிறைந்த பொருட்களை வாங்குவதைக் குறைக்க வேண்டும். இந்தக் கரிமச் சேர்மங்கள் சுவர்களில் அடிக்கும் பெயிண்ட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அறைக் கலன்கள், தரைவிரிப்புகள் போன்றவற்றில் கலந்திருக்கின்றன. அதனால், இந்தப் பொருட்களை வாங்கும்போது, அவற்றின் கரிமச் சேர்மங்கள் அளவைக் கவனித்து வாங்குவது நல்லது.
சுவர்கள், கூரைகள்
வீட்டின் சுவர்களுக்கு ஆபத்து விளைவிக்காத பெயிண்ட்டைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தவும். சுவர்களுக்கு வேதிபொருட்கள் நிறைந்த வண்ணப் பெயிண்டை அடிப்பதைவிட வால்பேப்பர், மரப்பலகைகள், தக்கைகள், செராமிக் டைல்கள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இது வீட்டின் ஆரோக்கியத்தைக் காப்பதுடன், வீட்டை அழகாகவும் மாற்றும்.
தரைத் தளமும் முக்கியம்
சுவர்கள் மட்டுமல்லாமல் வீட்டின் தரைத் தளத்தையும் வடிமைக்கும்போது கவனிக்க வேண்டும். தரைத் தளத்தை அழகுபடுத்துவதற்குப் பளிங்கு போன்ற கற்களைப் பயன்படுத்தலாம். அத்துடன், மரத் தரைதளம், ‘லேமினேட்’ தரைத் தளம் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
வீட்டு அலங்காரத்தை அழகு மட்டும் தீர்மானிப்பதில்லை. ஆரோக்கியத்தைப் பாதிக்காத பொருட்களைத் தேர்ந்தெடுப்பதிலும் அது அடங்கியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT