Published : 19 Aug 2017 11:09 AM
Last Updated : 19 Aug 2017 11:09 AM
சு
வர் என்பது உடலைப் போன்றது. எப்படி நம் உயிரை உடல் காக்கிறதோ அதைப் போல, நம்மை இந்தச் சுவர்கள் காக்கின்றன. சுவரை வைத்தே வீட்டுக்குப் பெயர் சொல்லப்பட்டது ஒரு காலம். மண் வீடு, காரை வீடு, கல் வீடு என்பதெல்லாம் சுவரோடு இணைந்த பெயரே ஆகும். மண்ணைக் குழைத்து அப்படியே கை, கையாக வைத்து சுவர் எழுப்பி மேலே ஓலை வேய்ந்த வீடுகள் இன்றும் கிராமப் புறங்களில் காணப்படுகின்றன.
காரை வீடு என்பது சுண்ணாம்பைச் செங்கற்களுக்கு இடையில் வைத்து, மேல் பூச்சாகவும் சுண்ணாம்பையே பூசி, மேல் தளத்துக்கும் சுண்ணாம்பைப் பயன்படுத்தியே கட்டப்பட்ட வீடுகள் கிராமங்களில் காணப்படுகின்றன. சுண்ணாம்பால் கட்டப் பட்ட வீடுகள் வெய்யில் காலத்தில் குளுமையாக இருக்கும், உறுதியாகவும் இருக்கும்.
எங்கள் வீடு ஐம்பது வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. அப்போது சிமெண்ட் தட்டுப்பாடு மிக அதிகம். அதனால் சுண்ணாம்பை வைத்தே கட்டி, மேல் பூச்சுக்கு மட்டும் சிமெண்டைப் பயன்படுத்தினோம்.
சுவரின் கனமும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஐம்பது வருடங்களுக்கு முன், பில்லர் கட்டுமானம் கிடையாது. வீட்டின் நான்கு புறமும் உள்ள தாய்ச்சுவர் ஒன்றே கால் அடி கன சுவராக இருக்கும். வீட்டுக்கு உள் அறைகள் தடுப்பு மட்டும் முக்கால் அடி சுவராக அமைக்கப்படும்.
இன்று சுவருக்கு சிமெண்ட், செங்கல் தவிர ஹாலோ பிளாக் கற்கள், ஃபிளை ஆஷ் கற்கள் என்று பலவிதங்கள் வந்துவிட்டன. வீட்டின் காம்பவுண்ட் சுவர், தற்சமயம் ரெடிமேட் சுவர்கள் மாதிரி வந்துவிட்டது. சிமெண்ட் போஸ்ட்களை நட்டு அதன் இடைவெளியில் சிமெண்ட் பலகைகள் சொருகப்பட்டு இரண்டே நாளில் காம்பவுண்ட் சுவர்கள் கட்டப்பட்டு விடுகின்றன.
வீட்டின் சுவர்கள் போதிய அளவுக்குத் தடிமண் கொண்டதாக இல்லாவிட்டால், வெளிப்புறச் சத்தங்கள் தடுக்கப்படாமல் ஒலி மாசு ஏற்படும் என்பது வல்லுநர்கள் அபிப்பிராயம். வெளிச்சத்தங்களை வீட்டுக்குக் கடத்தாத வகையில் சுவர்கள் அமைய வேண்டும். கட்டிடங்கள் உறுதியாக இருக்க சுவரின் கனமும் கவனிக்கப்பட வேண்டும்.
வீடு கட்டப் பயன்படும் சிமெண்ட், சுவருக்கு அடிக்கப்படும் பெயிண்ட் போன்றவை நச்சுத்தன்மை அற்றதாக இருக்க வேண்டியது அவசியம். இல்லாவிடில் வீட்டில் வசிப்பவரின் உடல்நலம் பாதிப்படையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment