Published : 05 Aug 2017 10:52 AM
Last Updated : 05 Aug 2017 10:52 AM
ம
ழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே, வீட்டை மழைக்காலத்தை எதிர்கொள்வதற்குத் தோதாகத் தயார்படுத்திவிட்டால், பல பிரச்சினைகளைத் தடுக்க முடியும். மழை பெய்யும்போது, வீட்டின் ஜன்னல்களில் நீர்க் கசிவது ஒரு முக்கியப் பிரச்சினை. மழைக்காலம் ஆரம்பித்த பிறகு, ஜன்னல்களைச் சீர்செய்வதற்குப் பதிலாக இப்போதே சீர்செய்வது நல்லது. ஜன்னல்களில் நீர்க் கசிவதைத் தடுப்பதற்கான ஆலோசனைகள்…
அடைத்தல்
‘கல்கு துப்பாக்கி’களைப் (Caulk guns) பயன்படுத்தி ஜன்னல்களின் சட்டகத்தில் இருக்கும் இடைவெளிகளை அடைக்கலாம். சிலிக்கோன், சிலிக்கோன் லேட்டக்ஸ், ரப்பர் போன்ற பொதுவான கலவைகளைப் பயன்படுத்தியும் ஜன்னல்களில் நீர்க் கசிவதைத் தடுக்கலாம்.
கல்கு துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது எளிமைதான் என்றாலும் தொழில்முறை வல்லுநர்கள் இந்தப் பணியைச் சிறப்புடன் மேற்கொள்ள முடியும். இந்த கல்கு கலவைகள் சரியாக ஜன்னல்களில் பொருந்துவதற்கு 24 மணிநேர கால அவகாசம் தேவைப்படும்.
அதனால், கல்கு கலவைகளைப் பொருத்துவதற்குமுன் ஜன்னல்களின் சட்டங்களை நன்றாகத் தண்ணீரில் சுத்தப்படுத்தி உலர்ந்த பிறகு பயன்படுத்துவது சிறந்தது.
‘வெதர்ஸ்ட்ரிப் டேப்’
‘கல்கு’ கலவையைப் போல ‘வெதர்ஸ்ட்ரிப் டேப்’பைப் (Weatherstrip Tape) பயன்படுத்தியும் ஜன்னல்களில் நீர்க் கசிவதைத் தடுக்கலாம். ஜன்னல்களின் பலகைகள், சட்டகங்கள் என நீர்க் கசியும் இடங்களில் இந்த ‘வெதர்ஸ்ட்ரிப் டேப்’பைப் பொருத்தலாம். இந்த டேப்பை ஜன்னல்களின் உட்புறத்தில் பொருத்தினாலும் தோற்றம் பாதிக்கப்படாது. ரப்பர், ‘ஃபோம்’, ‘ வினைல்’ போன்ற பொருட்களில் இந்த ‘வெதர்ஸ்ட்ரிப்ஸ்’ தயாரிக்கப்படுகின்றன. உங்களுடைய ஜன்னலுக்குப் பொருந்தும் ‘வெதர்ஸ்ட்ரிப்’பைத் தேர்ந்தெடுக்கவும். சாதாரண டேப்பை ஒட்டுவதைப் போல, இந்த டேப்பை ஜன்னல்களில் எளிமையாக ஒட்டிவிடலாம். இந்த ‘வெதர்ஸ்ட்ரிப் டேப்ஸ்’ ஆன்லைன் வர்த்தக தளங்களில் ஆயிரம் ரூபாயிலிருந்து கிடைக்கின்றன.
சட்டகத்தை மாற்றலாம்
பழைய ஜன்னல்களை மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள், இப்போது மழை நீர் கசியாமல் வடிவமைக்கப்பட்டிருக்கும் யுபிவிசி, உலோக ஜன்னல்களைப் பயன்படுத்தலாம். இந்த ஜன்னல்களில் சட்டகப் பகுதிகள் உட்புறப் பிரிவுகளுடன் வடிவமைக்கப்படுகின்றன. இந்தப் பிரிவுகளில் தேங்கும் மழை நீர், வீட்டுக்குள் வராமல் வெளியேறும்படி அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஃபோம் அடைப்புகள்
ஜன்னல்களில் இருக்கும் ஓட்டைகளை அடைப்பதற்கு ‘ஃபோம் ஸ்ப்ரே’யைப் (Foam Spray)’ பயன்படுத்தலாம். ‘கல்கு’ கலவைகளைப் போல ‘ஃபோம்’ துப்பாக்கிகளைப் பயன்படுத்தி ஜன்னல்களின் ஓட்டைகளை அடைக்கலாம். கல்கு கலவை, வெதர்ஸ்ட்ரிப் ஆகியவற்றைவிட இந்த ‘ஃபோம்’ கலவை சிறப்பானது என்று சொல்கின்றனர் நிபுணர்கள். ஆனால், பயிற்சி இல்லாமல் ‘ஃபோம்’ துப்பாக்கியைப் பயன்படுத்துவது நல்லதல்ல. தொழில்முறை வல்லுநர்களைப் பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.
ஜன்னல் பாம்புகள்
உடனடியாக ஒழுகும் ஜன்னல்களைச் சரிசெய்ய நினைப்பவர்கள் ஜன்னல் பாம்புகளைப் பயன்படுத்தலாம். இந்த ஜன்னல் பாம்புகளை எளிமையான முறையிலேயே தயாரிக்கலாம். நீளமான குஷன் போன்ற டியூப்களைத் துணியால் தயாரிக்க வேண்டும். தண்ணீரை உறியும் தன்மையுடைய பருத்தி துணிகளைப் பயன்படுத்துவதுதான் ஏற்றதாக இருக்கும். அந்தத் துணிக்குள் நீரை உறிஞ்சும் தன்மையுடைய பொருட்களான மணல், அரிசி போன்றவற்றைப் போடலாம். ஜன்னல் பாம்புகள் தயார். இவற்றை ஜன்னல்களின் கீழே தண்ணீர் வழியும் இடங்களில் போட்டு வைக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT