Published : 22 Jul 2017 09:41 AM
Last Updated : 22 Jul 2017 09:41 AM
தேசிய அளவில் வீடுகளின் விலை வீழ்ச்சி அல்லது விலை உயர்வைச் சொல்லிப் பொதுமக்களுக்கு வழிகாட்டிவருகிறது தேசிய வீட்டு வசதி வங்கியின் ரெசிடெக்ஸ் குறியீடு. தற்போது வீட்டு விலைக் குறியீட்டின் (ரெசிடெக்ஸ்) தரவுகள் வடிவத்தைத் தேசிய வீட்டு வசதி வங்கி மாற்றி அமைத்திருக்கிறது. நகரங்களில் வீடுகளின் விலை நிலவரத் தரவுகளும் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. புதிய வடிவத்தின்படி மார்ச் 2017-ம் ஆண்டு வரையான நகரங்களின் ரெசிடெக்ஸ் குறியீட்டு விலைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அம்சங்கள்
ஏற்கெனவே இருந்த ரெசிடெக்ஸ் குறியீட்டுப் பட்டியலைவிட மேம்பட்ட வடிவில் தற்போதைய குறியீடு மாற்றியமைக்கட்டுள்ளது. பழைய குறியீட்டு வடிவம் ஒரு நகரில் வீடுகளின் விலை அதிகரித்துள்ளதா குறைந்துள்ளதா என்பதை மட்டுமே தரவுகளின் அடிப்படையில் சொன்னது. ஆனால், தற்போதைய குறியீட்டு வடிவத்தில் ஒரு சதுர அடியின் விலை, சதுர மீட்டரின் விலை, சராசரியாக வீட்டின் விலை எனப் பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
அடுக்குமாடி வீடுகளில் ‘கார்பெட்’ பகுதி விலை நிலவரங்களை அறிவதற்கான வழிகாட்டு முறைகளும் சொல்லப்பட்டுள்ளன. இதனால் வீடு வாங்குபவர்களுக்கு இந்தப் புதிய வடிவம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் குறிப்பிட்ட நகரில் ரியல் எஸ்டேட் நிலவரத்தை அறிந்துகொள்ளவும் உதவும்.
புதிய தேசிய வீட்டு வசதி ரெசிடெக்ஸ் வீட்டு விலைக் குறியீடு (Housing Price Index) நான்கு குறியீடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மதிப்பீட்டு விலை, பதிவு விலை, வீடு கட்டுமானத்தின்போது சந்தை விலை மற்றும் சொத்து விற்பனையின்போது சந்தை விலை என நான்கு வகைகள் குறிப்பிடப்படுள்ளன. இந்தக் குறியீட்டு வகைகளில் உள்ள தரவுகளைப் பயன்படுத்தி நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வீட்டு விலை நிலவரம் என்ன, முந்தைய மாதங்களைவிட வீடு விலை அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா என்பது போன்ற தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.
முதல் கட்டமாக மதிப்பீட்டு விலை மற்றும் வீடு கட்டுமானத்தின்போது சந்தை விலை ஆகிய குறியீடுகள் மட்டுமே செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. மற்ற இரு குறியீடுகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நான்கு வகையான குறியீடுகளுமே சொத்தின் சந்தை மதிப்பு, வழிகாட்டு மதிப்பு, உள்ளாட்சி நிர்வாகங்களால் வசூலிக்கப்படும் சொத்து வரி, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனங்கள், வீட்டுக் கடன் அளிக்கும் வங்கிகள் ஆகியவற்றில் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் விஞ்ஞானப்பூர்வமாகக் குறியீடு வெளியிடப்படுகிறது. இந்த வீட்டு விலைக் குறியீடு ரிசர்வ் வங்கியால் மேம்படுத்தப்பட்டுள்ளதால் இதை ஆதாரபூர்வமானதாகவும் கருதலாம்.
குறைகள்
அதேவேளை இந்தக் குறியீடுகளிலிருந்து பெறப்படும் தரவுகளை நம்பி யாரும் இல்லை என்று கருத்தும் முன்வைக்கப்படுகிறது. அதற்குச் சில காரணங்களையும் ரியல் எஸ்டேட்காரர்களால் முன்வைக்கிறார்கள். குறிப்பாகக் குறியீடுகளின் அடிப்படைப் புள்ளிகள் மற்றும் தரவுகள் குறிப்பிட்ட காலத்துக்குள் மாற்றப்படுவதில்லை. காலாண்டு அல்லது அரையாண்டுக்குக் குறியீடுகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று விதிமுறை இருந்தும், அது முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. ஏற்கெனவே புழக்கத்தில் இருந்த குறியீடுகளின் தரவுகள் 2015-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவேற்றம் செய்யப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
“குறியீடுகளின்படி வீட்டு விலை நிலவரப் போக்கு என்பது நகரை மையமாகக் கொண்டே தயாரிக்கப்படுகிறது. ஆனால், வீடு நகருக்குள் இருக்கிறதா அல்லது புறநகர்ப் பகுதியில் இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். மேலும் கட்டுமானத்தின் தரம், வீடு அமைந்துள்ள இடத்தைச் சுற்றியுள்ள வசதிகளையெல்லாம் வைத்துதான் வீட்டின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டும் குறியீடு தயாரிக்கப்பட வேண்டும். குறியீட்டு வீட்டு விலைக் குறியீட்டுப் பட்டியலில் தமிழகத்தில் சென்னை, கோவை நகரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. பிற முக்கிய நகரங்களையும் சேர்க்க வேண்டும். அப்போதுதான் அது முழுமையாக இருக்கும்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் சவுகத்.
பயன் அளிக்கும் குறியீடு
புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள ரெசிடெக்ஸ் வீட்டு விலை குறியீட்டை ஒவ்வொரு காலாண்டுக்கும் தொடர்ச்சியாக மாற்றியமைத்தால் வீடு வாங்குபவர்களுக்கும் ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களுக்கும் அது நிச்சயம் பயன் அளிக்கக்கூடும். தற்போது வீடு, மனை வாங்கத் திட்டமிடுவோர் இந்த இணையதளத்தைப் பார்வையிடுவது நல்லது. வெளி மாநில நகரங்களில் சொத்து வாங்குபவர்களுக்கும் தேசிய வீட்டு வசதி ரெசிடெக்ஸ் வீட்டுக் விலை குறியீடு வழிகாட்டுகிறது.
ரெசிடெக்ஸ் குறியீடுகளைத் தேசிய வீட்டு வசதி வங்கியின் https://residex.nhbonline.org.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT