Published : 08 Jul 2017 11:01 AM
Last Updated : 08 Jul 2017 11:01 AM
பல்வேறு தேவையின் பொருட்டு நாம் இயற்கையை அழித்து வருகிறோம். காடுகளை அழித்து கட்டுமானங்களை உருவாக்குகிறோம். விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றிவருகிறோம். இந்தச் சூழலிலும் சில பகுதிகளின் இயற்கையான அம்சம் தப்பிப் பிழைத்திருக்கிறது. அந்தப் பகுதிகளில் காணும் இயற்கை அழகைக் காண யாருக்கும் விருப்பம் இருக்கும். இந்தப் பகுதிகள்தான் நாம் திரையில் காணும் இயற்கை எழில் கொஞ்சும் விவசாய நிலங்கள். அந்தப் பகுதிதான் பொள்ளாச்சி.
சினிமாவில் சிங்காநல்லூர் வீடு
தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்கள் பொள்ளாச்சியின் இந்த இயற்கை தவழும் நிலத்தில் எடுக்கப்பட்டுள்ளன. இதுபோல இங்கு படமாக்கப்படும் சினிமாக்களில் நாயகன் அல்லது வில்லன்களின் வீடு என்று ஒரு வீடு காண்பிக்கப்படும். பிரம்மாண்டமான தூண்களுடன் செட்டுநாடு வீடுகளின் கம்பீரத்துடன் இருக்கும் இந்த வீட்டின் பெயர் ‘சிங்காநல்லூர் மாளிகை’. பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள சிங்காநல்லூர் எனும் கிராமத்தில் உள்ளது இது.
இந்த வீட்டுக்கு மிகப் பெரிய அடையாளம் இங்கு படமாக்கப்பட்ட ‘தேவர் மகன்’ படம். சிவாஜி கணேசனின் வீடாக வரும் இந்த வீட்டில்தான் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. சிவாஜி கணேசன் கதாபாத்திரம் இறப்புக்குப் பிறகு கமல் ஹாசன் புதிய தோற்றத்துடன் மக்கள் முன்னால் அவதாரம் எடுக்கும் காட்சி இந்த வீட்டின் முகப்புப் பகுதியில் எடுக்கப்பட்டது.
தமிழ் சினிமாவின் மைல்கல்லாகிவிட்ட கமலுக்கும் சிவாஜிக்குமான பல வசனங்கள் இந்த வீட்டில் படமாக்கப்பட்டன. உதாரணமாக ‘இந்த ஊரைவிட்டே போய்டலாம்னு இருக்கேன்’ என கமலும் சிவாஜியும் பேசும் புகழ்பெற்ற வசனம் இந்த வீட்டின் நடுமுற்றத்தில் படமக்கப்பட்டது. அதுபோல் சிந்தர்.சி. இயக்கத்தில் ஜெயராம், கவுண்டமணி, குஷ்பு நடிப்பில் வெளியான முறைமாமன் படத்தின் பெரும்பாலான காட்சிகள் இந்த வீட்டில்தான் படமாக்கப்பட்டன. இதுமட்டுமல்லாமல் அண்மையில் வெளியான ‘கொடி’, ‘ஆம்பள’ உள்ளிட்ட பல படங்களும் இங்கே படமாக்கப்பட்டுள்ளன.
சிங்காநல்லூர் வீட்டின் கட்டிடக்கலை
கேரளக் கட்டிடக் கலையை அடிப்படையாகக் கொண்டு இந்த வீடு உருவக்கப்பட்டுள்ளது. வீட்டின் நடுவில் கேரள வீடுகளில் காணப்படக்கூடிய நடுமுற்றம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடுமுற்றத்திலிருந்து பிரிந்து செல்லக்கூடிய வகையில் நான்கு திசைகளிலும் நான்கு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வீட்டின் கதவு, ஜன்னல், தூண்கள் அனைத்தும் தேக்கு மரத்தால் ஆனவை. நல்ல வெளிச்சமும் காற்றும் அறைக்கு உள்ளே வரும்படி ஒவ்வொரு அறையிலும் மூன்று ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வீட்டின் மேல்தளத்தில் மூன்று அறைகளும் பால்கனியும் அமைக்கப்பட்டிருக்கிறது. கதவுகள் அனைத்தும் நுட்மான வேலைப்பாடுகள் கொண்டவை. கதவின் பூட்டுகள்கூடக் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. வீட்டினுள் நுழைந்ததும் மேற்குத் திசையில் சிறிய பூஜை அறை உள்ளது. 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமை கொண்ட ஓடுகளைக் கொண்டு இந்த வீட்டின் கூரை வேயப்பட்டுள்ளது.
இந்த அரண்மனை 1934-ம் ஆண்டில் பழனிசுவாமியின் என்பவரின் உறவினரால் கட்டப்பட்டது. கேரளத்திலுள்ள குல்லுகப்பாறை என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டைக் கண்டு வியந்து, இதேபோலொரு வீட்டைத் தானும் கட்ட வேண்டும் என நினைத்துள்ளார் இந்த வீட்டை உருவாக்கிய பெயர் கண்டறியப்படாத பழனிசாமியின் உறவினர். அதற்குப் பிறகு இந்த வீடு பழனிசாமியிடமிருந்து வேறு ஒருவர் கைக்கு மாறியுள்ளது. இப்போது ‘கவுண்டர் வில்லா’ என்னும் பெயரில் சினிமாத் தயாரிப்புக்காக வாடகைக்கு விடப்பட்டு வருகிறது,
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT