Published : 08 Jul 2017 10:48 AM
Last Updated : 08 Jul 2017 10:48 AM
மூங்கில்தான் உலகில் வேகமாக வளரும் தாவரம் என்கிறார்கள். இந்தியாவில் அளவுக்கு அதிகமாக மூங்கில் உற்பத்தியாகும் இடங்கள் நிறைய உள்ளன. இருப்பினும், நாம் கான்கிரீட் வீடுகளை இன்னும் கட்டிக்கொண்டிருக்கிறோம், இதற்கு மாறாக யோசித்திருக்கிறார்கள் ஒரு தம்பதி. அவர்கள் மூங்கில் பயன்பாட்டை ஊக்கப்படுத்தியதுடன் மூங்கிலைச் சார்ந்த ஒரு சமூகத்தையே ஊக்குவித்திருக்கிறார்கள்.
அருணா கப்பகண்டுலா, பிரசாந்த் லிங்கம் ஆகிய இருவரும் மூங்கில் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத் தொழில் நிறுவனத்தை நடத்திவருகிறார்கள். அவர்கள் கிராமப்புற, பழங்குடியின மக்களுக்கு இதன் மூலம் நிலையான வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறார்கள்.
அவர்கள் தேடியபோது, அவர்களுக்கு ஒரு மூங்கில் நாற்காலி மட்டும் கிடைத்திருந்தால் அவர்கள் பிரபலமாகியிருக்க மாட்டார்கள். அது கிடைக்காத காரணத்தாலேயே இன்று அவர்களை உலகம் அறிந்துவைத்திருக்கிறது. மூங்கிலால் ஆன ஒரு நாற்காலி வாங்க வேண்டும் என அவர்கள் விரும்பியபோது, தரமான மூங்கில் சாமான்கள் அவர்கள் ஊரில் கிடைக்கவில்லை. அதே சமயம் மரம், இரும்பு, பிளாஸ்டிக் ஆகியவற்றாலான சாமான்கள் தாராளமாகக் கிடைத்தன. எனவே, மூங்கில் அறைக்கலன்கள் குறித்த அவர்களது தேடல் தொடங்கியது. இந்தத் தேடல் அருணாவையும் பிரசாந்தையும் இந்திய-பங்களாதேஷ் எல்லையையொட்டி அமைந்திருக்கும் திரிபுரா மாநிலத்தின் கட்லமர என்னும் குக்கிராமத்துக்குக் கொண்டுசென்றது.
மூங்கிலே வாழ்க்கையாக...
மூங்கிலை நம்பி வாழும் அந்தக் கிராமத்து மக்கள் தங்கள் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக மிகவும் சிரமப்படுவதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். மூங்கிலைப் பற்றியோ மூங்கிலை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழலாம் என்பது பற்றியோ அந்தத் தம்பதி அதுவரை அறிந்துவைத்திருக்கவில்லை. இருப்பினும், இந்தச் சமூகத்துக்கு, சிறுதொழில் முனைவின் வழியாக ஆதரவு அளிக்க முடிவுசெய்து, மூங்கிலை வாழ்க்கையாகக் கொண்ட பயணத்தைத் தொடங்கினர்.
கைவினைப் பொருள்கள், சாரக்கட்டு, தற்காலிக இருக்கைகள், நாற்காலிகள் போன்றவற்றைத் தயாரிப்பதற்கே இந்தியாவில் மூங்கிலைப் பயன்படுத்திக்கொண்டிருந்த நிலையில், அதிலிருந்து முற்றிலும் மாறாக வீடுகளின் கட்டுமானத்துக்கு மூங்கிலைப் பயன்படுத்துவது என்ற துணிகர முடிவை எடுத்திருக்கிறார்கள் அவர்கள்.
மூங்கில் எங்கெல்லாம் வளருகிறதோ, அங்கெல்லாம் காட்டுப் பகுதிகளில் அவர்கள் பரவலாகப் பயணம் மேற்கொண்டனர். அந்தப் பயணத்தில், மூங்கிலைப் பற்றி நன்கு அறிந்த விவசாயிகள், கிராம மக்கள், பழங்குடிகள் ஆகியோரிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டனர்.
அந்த நெடிய பயணத்தை முடித்தபின், 2010-ல் மூங்கிலால் வீடு கட்டுவதற்கு என்றே ‘Bamboo house India’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். வனச் ச ட்டம் 1927 பற்றி அதுவரை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இந்தச் சட்டத்தின் படி, மூங்கிலைப் பழங்குடிகள் மட்டுமே வெட்ட முடியும். அதை அவர்கள் அரசாங்கத்திடம் மட்டுமே விற்க முடியும். அரசாங்கம் அதை மாதத்துக்கு இருமுறை ஏலம் மூலம் சந்தையில் விற்கும். இந்த ஏலமும் வருடத்தில் ஆறு மாதம் மட்டுமே நடைபெறும். “இது எதிர்பாராத பிரச்சினை என்றாலும், இதனால் எங்கள் முயற்சி தளர்ந்து போகவில்லை” என்கிறார் பிரசாந்த்.
மூங்கில் ஆராய்ச்சி
கைவினைஞர்களையும் தொழிலாளர்களையும் வேலைக்கு அமர்த்தியபின், சுமார் மூன்று வருடங்களை ஆராய்ச்சிக்கும் உள்ளூர் மக்களிடமிருந்து தொழிலைக் கற்பதற்கும் மூங்கில் பயன்பாட்டில் உள்ள சிரமங்களைப் புரிந்துகொள்வதற்கும் செலவழித்திருக்கிறார்கள்,
எந்த ஊரில் மூங்கிலைப் பயன்படுத்துகிறோமோ, அந்த ஊரின் தட்பவெப்பநிலையை ஒத்த ஊரிலிருந்து மூங்கிலைத் தருவிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துகொண்டதாகவும் இதனால் பொருளாதார இழப்பீடு ஏற்பட்டாலும், இதில் எந்தச் சமரசத்தையும் தாங்கள் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கிறார் பிரசாந்த்.
ஹைதரபாத்தில் உள்ள ஒரு பள்ளி, அதன் மொட்டை மாடியில் மூங்கிலால் ஆன கூடம் அமைப்பதற்கு, அவர்களுக்கு முதல் வாய்ப்பை அளித்திருக்கிறது. கொலம்பியன் வகை கட்டிடக் கலையைப் பயன்படுத்தி அந்தக் கூடத்தைக் கட்டியதாகக் கூறுகிறார் பிரசாந்த். இதன் பின்னர், இரண்டு வருடத்துக்குள் அவர்கள் நாடு முழுவதும் சுமார் 150 வீடுகளைக் கட்டி முடித்திருக்கின்றனர். இது மட்டுமின்றி மூங்கிலால் ஆன சாமான்கள், கட்டுமான அமைப்புகள், வீட்டு உள்வேலைப்பாடுகள், தோட்டங்கள் என்று தங்கள் நிறுவனத்தை அவர்கள் விரிவுபடுத்தியிருக்கிறார்கள்.
சிறப்பு வகுப்புகள்
அவர்கள் நிறுவனத்தைத் தொடங்கியபோது, பலர் இது வியாபாரத்துக்கு ஏற்ற தொழில் அல்ல என்று சொல்லி இருக்கிறார்கள். தொழில்நுட்ப உதவி வேண்டி நிறைய கல்லூரிகளின் கதவைத் தட்டி இருக்கிறார்கள். ஆனால் செங்கலாலும் சிமெண்டாலும், இரும்பாலும் கட்டப்படும் வீடுகள் தவிர வேறு எதற்கும் அவை உதவத் தயாராகவில்லை. ஆனால், இன்று பல கல்லூரிகளில் மூங்கிலால் வீடு கட்டுவது எப்படி என்ற சிறப்பு வகுப்புகளை எடுத்து வருகிறார் பிரசாந்த்.
“உலக அளவில் மூங்கில் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால், நாம் இன்னும் மூங்கிலைக் கூடை தயாரிப்பதற்கு மட்டும் பயன்படுத்துவது வருந்ததக்கது” என்கிறார் பிரசாந்த். எல்லா வசதிகளையும் கொண்ட மூங்கில் வீட்டைக் கட்டுவதற்கு சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் போதுமானது என்றும் தெரிவிக்கிறார் அவர். இந்த மூங்கில் வீடு சுமார் முப்பது வருடங்கள் தாக்குப்பிடிக்குமாம். ஒரு மூங்கில் வீடு, நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ சுமார் 150 குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு ஆதரவு அளிக்கும் என்கிறார் பிரசாந்த்.
நம் தேவைக்காக ஒரு சொந்த வீடு அமைத்துக்கொள்ள விரும்புவது சரியான எண்ணம்தான். ஆனால், வீட்டின் அளவையும் வசதியையும் கட்டுமானப் பொருட்களையும் பிறருடன் ஒப்பிட்டுத் தீர்மானிப்பது சரிதானா என்பதை நாம் யோசிக்க வேண்டும். அந்தஸ்து என்னும் நோக்கில் வீடு கட்டினால் அதற்குக் கொடுக்க வேண்டிய விலை நம் சக்திக்கு மீறியதாக உள்ளது. வங்கியில் கடன் வாங்கிச் சமாளித்து வட்டியுடன் கடனை அடைப்பதற்கே வாழ்நாளைச் செலவழிக்கிறோம். ஆனால், பெரும் பொருட்செலவின்றி மூங்கிலால் வீடு கட்ட வாய்ப்பு கிடைக்கும்போது அதைப் பயன்படுத்திப் பார்க்கலாமே?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT