Last Updated : 08 Jul, 2017 11:04 AM

 

Published : 08 Jul 2017 11:04 AM
Last Updated : 08 Jul 2017 11:04 AM

உலகின் விலை உயர்ந்த வீடு இதுதான்!

பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள செயிண்ட் ஜான் காப் ஃபெர்ரா என்ற இடத்தில், நீஸ், நதிக்கருகில் அமைந்திருக்கிறது ‘வில்லா லே செத்ர’(Villa Les Cedres). இந்த மாளிகை Cedres என்பது பிரெஞ்சில் தேவதாரு மரங்களைக் குறிக்கும். வில்லா லே செத்ர என்றால் ‘தேவதாரு மரங்களடர்ந்த வில்லா’எனப் பொருள். இது 187 ஆண்டுப் பழமை கொண்டது. ஒரு காலத்தில் பெல்ஜியம் அரசர் இரண்டாம் லியோபோல்ட்டின் ஓய்வு மாளிகையாக இருந்திருக்கிறது. ஆனால் இதெல்லாம் அல்ல இதன் சிறப்பு. இன்றைய தேதியில் உலகின் மிக விலை உயர்ந்த வீடு இதுதான். இதுதான் இதன் பெருமை. இதன் மதிப்பு 100 கோடி யுரோ.

பத்து படுக்கையறைகள், வரவேற்பு அறை, ஒரு பிரம்மாண்ட நடன அறை, ஒரு தேவாலயம், 50 மீட்டர் நீளம்கொண்ட நீச்சல் குளம், குளிர்காலத் தோட்டம், முப்பது குதிரைகளைக் கட்டுவதற்கான லாயம் போன்றவற்றைக் கொண்டிருக்கிறது இந்த வில்லா. அத்துடன், 35 ஏக்கரில் அமைந்திருக்கும் இந்த வில்லாவின் தோட்டங்கள் ஐரோப்பாவிலேயே மிக அழகானவை என்று வர்ணிக்கப்படுகின்றன. இருபது பசுமைக் குடில்கள், பதினைந்தாயிரம் அரிய தாவரங்கள் இந்த வில்லாவில் பராமரிக்கப்படுகின்றன.

வெறும் இரண்டாயிரம் பேரை மக்கள்தொகையாகக் கொண்ட இந்தப் பகுதி, எப்போதும் பிரபலங்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் பிடித்த இடமாக இருந்திருக்கிறது. இந்த வில்லாவில் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், சார்லி சாப்ளின், எலிசபெத் டெய்லர் போன்ற சினிமா பிரபலங்கள், சோமர்செட் மாம், டேவிட் நிவென் போன்ற எழுத்தாளர்கள் தங்கியிருக்கிறார்கள்.

இந்தப் பத்து படுக்கையறை வில்லாவை விற்பதற்குக் கடந்த ஆண்டு முடிவுசெய்திருக்கிறார்கள். ‘கிராண்ட் மார்னியர்’ என்ற பிரபல மதுபானம் தயாரிக்கும் வம்சத்தினரின் கைவசம் இருந்த இந்த வில்லா, தற்போது கம்பாரி குழுமத்திடம் இருக்கிறது. அவர்கள் இந்த வில்லாவை விற்பதற்கு முடிவுசெய்திருக்கிறார்கள். இந்த வில்லா விற்பதால் கிடைக்கும் லாபத்தைப் பங்குதாரர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிவுசெய்திருக்கிறது கம்பாரி நிறுவனம். இந்த வில்லா அமைந்திருக்கும் ‘செயிண்ட்-ஜான் -காப்- ஃபெர்ரா’வில் ஒரு சதுர அடி 2,00,000 யுரோக்களாக இருக்கிறது. இது உலகத்திலேயே மிக அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த வில்லாவை வாங்குவதற்கு உலகளவில் கடும்போட்டி நிலவுகிறது.

- கனி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x