Last Updated : 15 Jul, 2017 12:11 PM

 

Published : 15 Jul 2017 12:11 PM
Last Updated : 15 Jul 2017 12:11 PM

எந்த அறைக்கு என்ன வண்ணம்?

வீட்டின் அறைகளுக்கு வண்ணமடிக்கும்போது, பெரும்பாலானவர்கள் அவர்களுடைய மனதுக்குப் பிடித்த வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அப்படியில்லாவிட்டால், எந்த வண்ணம் வீட்டின் அழகை மேலும் மெருகேற்றுமோ அந்த வண்ணத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், உள் அலங்கார வடிவமைப்பாளர்கள் ஒவ்வொரு அறைக்கும் அந்த அறையின் தேவைக்கேற்ப வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பதையே பரிந்துரைக்கிறார்கள். எந்த அறைக்கு எந்த வண்ணம் பொருத்தமாக இருக்கும் என்று பார்க்கலாமா?

படுக்கையறைக்குப் பச்சை

வீட்டிலிருக்கும் பெரும்பாலான நேரத்தை ஓய்வெடுப்பதற்கு, புத்துணர்ச்சி பெறுவதற்கு, சிந்திப்பதற்கு எனப் படுக்கையறையில்தான் செலவிடுகிறோம். அதனால், படுக்கையறைக்கான வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, இவற்றைக் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும். அமைதியின் நிறமாக அறியப்படும் பச்சை நிறத்தைத்தான் பெரும்பாலான வடிவமைப்பாளர்கள் படுக்கையறைக்குப் பரிந்துரைக்கிறார்கள். பதற்றத்தைக் குறைத்து மனதுக்கு அமைதியைக் கொடுக்கும் தன்மையுடையது பச்சை நிறம்.

தூங்கி எழுந்தபின், ஒவ்வொரு நாளையும் காலையில் புத்துணர்ச்சியுடன் தொடங்குவதற்குப் பச்சை நிறம் உதவும். இயற்கையோடு இணைந்திருப்பதைப் போன்ற தோற்றத்தையும் பச்சை நிறம் கொடுக்கும். அமைதி, ஓய்வு, வசதி, இயற்கை போன்ற தன்மைகளைக் கொண்டிருப்பதால் பச்சை நிறத்தைப் படுக்கையறைக்குப் பயன்படுத்துவது மிகவும் பொருத்தமாக இருக்கும். பரபரப்பான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் படுக்கையறையின் வண்ணத்தையோ பொருட்களையோ பச்சையாக மாற்றினால் மனதில் ஒருவித அமைதியை உணர்வார்கள்.

படுக்கையறை என்பது சுவரின் வண்ணம் மட்டுமல்ல. அதனால், படுக்கை, தலையணைகள், படுக்கை விரிப்புகள், விளக்குகள் என எல்லாவற்றையும் படுக்கையறையை வடிவமைக்கும்போது கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும்.

படிக்கும் அறைக்கு நீலம்

வீட்டில் படிக்கும் அறைக்கும் அலுவலக அறைக்கும் ஏற்ற வண்ணம் நீலம்தான். ஏனென்றால், இந்த அறைகளில் நீங்கள் கவனமாகச் செயல்பட வேண்டியது முக்கியம். நீல நிறம் பன்முகத் தன்மைகொண்டது. இந்த நிறம் உங்களுக்கு அமைதியையும் ஆற்றலையும் ஒரே நேரத்தில் வழங்கும். நீல நிறம் மனிதர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது என்று டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று கண்டுபிடித்திருக்கிறது. இந்த நிறம் இதயத் துடிப்பைக் குறைத்து உங்களுடைய கவனிக்கும் திறனை அதிகரிப்பதால் வேலையைச் சுலபமாக முடித்துவிடலாம். நீல நிற வானம், கடல், தண்ணீர், சுகாதாரத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. நீல வானையும் நீலக் கடலையும் பார்ப்பது எல்லோருக்குமே பிடித்த விஷயமாகத்தானே இருக்க முடியும்?

சாப்பிடும் அறைக்குச் சிவப்பு

குடும்பத்துடன் அமர்ந்து உண்பது என்பது ஒரு மகிழ்ச்சியான தருணம். அந்தத் தருணத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உற்சாகமாகவும் ஆர்வத்துடன் உணவைச் சாப்பிட வேண்டும் என்று அனைவருமே எதிர்பார்ப்போம். சிவப்பு நிறம் உற்சாகத்தையும் ஆற்றலையும் தரக்கூடியது. பேரார்வம், அன்பு, ஆபத்து போன்ற தன்மைகளுடன் சிவப்பு நிறம் தொடர்புடையது. சிவப்பு நிறம் பசியைத் தூண்டக்கூடியது. அதனால், சிவப்பு நிறத்தைச் சாப்பிடும் அறையில் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி அமர்ந்து உரையாடும் இடங்களுக்குச் சிவப்பு நிறத்தைப் பயன்படுத்தலாம். சிவப்பு நிறம் மனிதர்களை உரையாடுவதற்குத் தூண்டும். சிவப்பு நிறத்தை மொத்தமாகப் பயன்படுத்துவதைவிடச் சிதறல்களாகப் பயன்படுத்தலாம்.

சமையலறைக்கு மஞ்சள்

உணவைச் சமைக்கும் இடமென்பது படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கு ஏதுவாக இருக்க வேண்டும். மஞ்சள் நிறம் அதற்கு ஏற்றதாக இருக்கும். மஞ்சள் அடிப்படையிலேயே பிரகாசமான நிறம். எலுமிச்சை, வாழைப்பழம், சூரியகாந்தி மலர்கள், சூரியன் என மஞ்சள் நிறத்தில் இருப்பவை புத்துணர்ச்சியையும் பிரகாசத்தையும் குறிப்பதாக இருக்கின்றன. அதனால், மஞ்சள் நிறத்தைச் சமையலறைக்குத் தேர்வுசெய்வது சரியானதாக இருக்கும்.

வரவேற்பறைக்கு வெள்ளை

வீட்டில் வரவேற்பறையே அதிகமாகப் பயன்படுத்தும் இடமாக இருக்கிறது. இந்த வரவேற்பறைக்குப் பொருத்தமானதாக உள் அலங்கார வடிவமைப்பாளர்கள் பரிந்துரைப்பது வெள்ளை நிறம். வெள்ளைச் சுவர்கள் வெளிச்சத்தைப் பிரதிபலிக்கும் தன்மையுடையதால் அது அறையைப் பெரியதாகக் காட்டும். வெள்ளை எப்போதும் சுத்தத்தையும் சுதந்திரத்தையும் பிரதிபலிக்கும் நிறமாக இருக்கிறது.

அத்துடன், வெள்ளை நிறம் உங்களுடைய வரவேற்பறையைப் பிரகாசமானதாக மாற்றும். அடர் வெள்ளை நிறம் அறைக்குப் பாரம்பரியமான தோற்றத்தைக் கொடுக்கும். பிரகாசமான வெள்ளை நிறம் அறைக்குச் சமகாலத் தோற்றத்தைக் கொடுக்கும். உங்களுடைய ரசனைக்குப் பொருந்தும் வெள்ளை நிறத்தை வரவேற்பறைக்குத் தேர்ந்தெடுக்கலாம். அத்துடன், வெள்ளை நிறத்துடன் பிற வண்ணங்களையும் இணைத்து வரவேற்பறையில் பயன்படுத்தலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x