Published : 04 Jun 2016 01:21 PM
Last Updated : 04 Jun 2016 01:21 PM
ஒரு மனிதனுடைய அடிப்படைத் தேவைகள் மூன்று எனப் பழைய காலத்திலிருந்தே வரையறுத்திருக்கிறார்கள். அவை, உணவு, உடை, உறைவிடம்.
இந்த நாளில், எந்த வீட்டுக்குச் சென்றாலும் முன்னாலுள்ள வரவேற்பறை பளிச்சென்றிருக்கும். ஆனால் பொதுவாகப் பெண்கள் நடமாடும் சமையல் அறை?
“தினம் தினம் பயன்படுத்துவதுதானே?” என்ற எண்ணத்தில் சில பாத்திரங்கள் அங்குமிங்குமாக இரைந்துகிடக்கும். சமையல் ருசியாக இருந்தால் சரி. சமையலறை எப்படி இருந்தால் என்ன? என்பது ஆண்களின் எண்ணமாக இருக்கும்.
ஆனால் இது சரி இல்லை. சமையலறை சுத்தமாக இருந்தால்தான் குடும்பத்தினரின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். சமையலறையைச் சுத்தமாக வைத்துக்கொள்ளச் சில குறிப்புகள்:
# நாலைந்து பேர் வசிக்கிற குடும்பத்துக்குத் தேவையான பாத்திரங்களையே வைத்துக் கொள்ளுங்கள். கழுவுவதற்குச் சோம்பல்பட்டு, வேறு வேறு பாத்திரங்களை எடுத்துப் பயன்படுத்தினால், வேலைதான் கூடுதலாகும். அறையும் பாந்தமாக இருக்காது.
# தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டே உண்பது, தற்போது எல்லா வீடுகளிலும் பழக்கமாகிவிட்டது. இதனால் என்ன ஆகிறது தெரியுமா? சாப்பிட்டு முடித்த உணர்வேயில்லாமல், தொலைக்காட்சியிலேயே லயித்து விடுகிறார்கள். சாப்பிட்ட தட்டு உலர்ந்துவிடுகிறது.
அது போன்ற பாத்திரங்களை கழுவுவதற்கு நேரமாகும். தப்பித் தவறி ஏதாவது ஒட்டிக் கொண்டிருந்தால், கிருமிகள் வருவதற்கும் அதுவே காரணமாக அமைந்துவிடும்.
# உங்களின் வீட்டில் சிறு குழந்தைகள் (ஏழெட்டு வயதிற்குள்) இருக்கிறார்களா? இரட்டிப்புக் கவனம் அவசியம். அரிவாள்மனை, கத்தி, கத்தரிக்கோல் போன்ற பொருட்கள் எதுவுமே குழந்தைகளின் கைக்கு எட்டும்படி இருக்கக் கூடாது. நடை பயிலும் குழந்தைகள் சமையலறை உள்ளே வந்தால், முதலில் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
# அன்றாடம் சமையலுக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை (உப்பு, சர்க்கரை, புளி) குடும்பத்தினர் எல்லாருக்கும் தெரியும்படி வைத்திருங்கள். உங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர், ஒரு அவசரத்துக்கு காபி கலந்துகொள்ள நினைத்தால், எது எங்கிருக்கிறது என்று திணறாத வகையில் அத்தியாவசியப் பொருட்களை, சமையலறையில் பார்வையில் படும்படி வைத்திருக்க வேண்டும்.
# மாதாமாதம் வாங்குகிற பருப்பு முதலான மளிகைப் பொருட்களை அதற்குரிய குறிப்பிட்ட டப்பாவில் போட்டு வையுங்கள். இடத்தை மிச்சப்படுத்த, சாமான்களை மாற்றி மாற்றி டப்பாவில் வைக்காதீர்கள். இது குழப்பத்தை ஏற்படுத்தும்.
# அலமாரியின் மேல்தட்டில் அவ்வளவாகத் தேவைப்படாத பொருட்களை வைப்பது இயல்புதான். ஆனால் விளிம்பில் இருக்கும்படி வைத்துவிடாதீர்கள். வேறு ஏதாவது எடுக்கும்போது, பாத்திரம் கீழே விழுந்து காலில், தலையில் அடிபட வாய்ப்புண்டு.
# நடுத்தரக் குடும்பங்களிலும் இப்போது மாடுலர் கிச்சன் முறை பிரபலமாகி வருகிறது. ஸ்பூன்கள், கரண்டிகள் போன்றவற்றை வைக்கத் தோதாகப் பதித்து விடுகிறார்கள். பிற பாத்திரங்கள் வைக்கவும் தனி இடமுண்டு.
இது போல் வைக்கும்போது, அடுப்புப் புகை படியாமலிருக்க, மேலே சிம்னி வைக்கிறார்கள். சில பெண்கள், “இதை அடிக்கடி தேய்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். அனல் அடிக்கும்” என்று அபிப்ராயப்படுகிறார்கள். வசதிப்படியும், அவர்களின் மனதுக்கு உகந்தவகையிலும் இதை அமைத்துக் கொள்ளலாம்.
# சமையல் கட்டுக்குப் பின்புறம் வலை போட்ட அலமாரி போல் வைத்து, சிலிண்டர்களை வைக்கும் முறை பிரபலமாகி வருகிறது. சமையறையின் மேடைச் சுவரில் துளை போட்டு, டியூபைக் கொணர்ந்து அடுப்புடன் இணைத்துவிடுகிறார்கள்.
இது நல்ல பாதுகாப்பு. சிலிண்டரின் குமிழை, வெளியூர் செல்லும்போது மட்டும் மூடிவிட்டால் போதுமானது. இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாகவும் இந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
# நவீன வகைக் கோப்பைகளைத் தனியே அலமாரியில் வைத்திருப்பார்கள். அது போல, குடும்பத்தில் விசேஷம், திதி போன்றவற்றுக்காகப் பித்தளைப் பாத்திரங்களைப் பரண் மீதோ வேறு இடத்திலோ மறைத்து வைத்திருப்பார்கள். தேவையான நேரத்தில் பயன்படுத்த இவற்றை எடுக்கும்போது, ஒருமுறைக்கு இரண்டு முறை நன்றாகக் கழுவுங்கள்.
இது முக்கியம். பிற அறைகள் போல் சமையலறை மிக ஒழுங்காக இருக்க முடியாதுதான்; என்றாலும் குடும்பத் தலைவி தவிர வேறு மூன்றாவது நபர் யார் வந்தாலும் எளிதாகப் பாத்திரங்களை எடுத்து பயன்படுத்தும் அளவுக்கு அனைத்துப் பொருட்களும் இருக்க வேண்டும். சமையலறையின் `கட்டை விரல் விதி’யாகவே இதை எடுத்துக் கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT