Published : 15 Mar 2014 12:00 AM
Last Updated : 15 Mar 2014 12:00 AM
கணவன் - மனைவி, குழந்தைகளுக்கென இன்று வீடுகளில் தனித்தனி அறைகள் அமைக்கப்படுவதைப் போல முதியவர்களுக்கும் தனி அறை அமைப்பது அவசியமாகிவிட்டது. முதுமை எல்லோருக்கும் சொந்தம் என்பதால் இன்று நம் பெற்றோருக்காகவோ, தாத்தா- பாட்டிகளுக்காகவோ கட்டும் அறைகள் பிற்காலத்தில் நமக்கு உதவும் என்ற தொலை நோக்கு யோசனையும் தேவை. சரி, முதியவர்களுக்கான அறை, வசதிகள் எப்படி இருக்க வேண்டும்?
தரைகள் : அழகழகான டைல்ஸ்கள் வீட்டின் தோற்றத்தை எடுப்பாகக் காட்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், டைல்ஸ் தரைகள் முதியவர்களுக்குக் கொஞ்சம் எதிரி என்றே சொல்லலாம். வழுக்குத் தன்மையுள்ள டைல்ஸ் தரைகளில் முதியவர்கள் நடக்கும்போது வழுக்கி விழ வாய்ப்புகள் அதிகம். குறிப்பாகக் காலை நனைத்து விட்டு வரும்போது விழும் வாய்ப்புகள் அதிகம். முதியவர்கள் கீழே விழுவது அவர்களின் உடல் நலத்துக்குக் கேடு விளைவித்துவிடும். எனவே வழுக்கும் தன்மையுள்ள டைல்ஸ்களுக்குப் பதிலாக, சொரசொரப்புத் தன்மையுள்ள டைல்ஸ்களைப் பதிக்கலாம்.
மாடிகள் : முடிந்த அளவுக்கு வீட்டுக்குள் உள்ள மாடி படிக்கட்டுகளைச் சாய்வு தளமாக அமைப்பது முதியவர்களுக்கு வசதியாக இருக்கும். மேலும் படிக்கட்டுகளின் ஓரத்தில் நிச்சயமாகக் கைப்பிடி அமைக்க வேண்டும். மாடிப் படிக்கட்டுகளில் டைல்ஸ்கள் பதிப்பதைத் தவிர்க்கலாம்.
குளியலறை: குளியலறையில் சொரசொரப்புத் தன்மையுள்ள டைல்ஸ்களைப் பயன்படுத்துவது முதியவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் ஏற்றது. குளியலறை அலமாரிகள் குறைந்த உயரத்தில் அமைப்பது நல்லது. குளியலறையில் பொருத்தப்பட்டுள்ள கைப்பிடிகள் வலுவாக இருப்பதை அடிக்கடி உறுதி செய்யவும்.
கழிவறை : இந்திய பாணிக் கழிப்பிடங்கள் முதியவர் களுக்குக் கஷ்டத்தையே கொடுக்கும். காலைக் கடனை உட்கார்ந்து கழிக்கும் வகையில் மேற்கத்தியக் கழிப்பிடங்களை அமைப்பதே முதியவர்களுக்கு நல்லது. முதியவர்கள் உட்கார்ந்து எழ மிகவும் கஷ்டப்படுவார்கள் என்பதால் சுவர்களின் பக்கவாட்டில் கைப்பிடிகள் அமைப்பது அவர்களுக்குப் பயனளிக்கும்.
மேற்கூறிய அனைத்து அறைகளும் முதியவர்கள் விழுவதற்கும், காயம் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ள பகுதிகள். மற்ற அறைகளிலும், முதியவர்களுக்கு ஏற்ற வகையில் வசதிகளைச் செய்து கொடுப்பதும் நல்லதே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT