Published : 13 Aug 2016 11:57 AM
Last Updated : 13 Aug 2016 11:57 AM
நம் ஊரில் வீட்டின் மேலே லாரி போலவோ கார் போலவோ விதவிதமான வடிவங்களில் தண்ணீர் தொட்டியை அமைத்திருப்பார்கள். ஆனால் ஒரு சினிமாவில் வரும் கற்பனை இடங்களைப் போல் வீட்டை யாராவது அமைத்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை. அப்படியான பார்த்திபன் தனமான ரசிகர்கள் எங்கேயாவது இருக்கலாம். இங்கிலாந்தில் இப்படி ஒரு ஹாரி பாட்டர் ரசிகர் அவருடைய வீட்டை ஹாரி பாட்டரில் வரும் கற்பனை இடங்களைப் போன்று வடிவமைத்திருக்கிறார்.
இங்கிலாந்தில் பேஸ்டன் ஹில் என்னும் கிராமம் ஒன்று உள்ளது. இந்தக் கிராமத்தில் தன் கணவருடனும் குழந்தைகளுடனும் வசித்துவருபவர் சார்லட் க்யூரியாக்க. இவர் ஹாரி பாட்டர் நாவல்களின் பரம ரசிகர். அதிலும் ஹாரி பாட்டர் நாவலில் வரும் ஹாக்வர்ட்ஸ் மந்திரப் பள்ளியைப் பார்த்து அவர் பிரமித்துப் போயிருக்கிறார். இவரது வீடு வெளியிலிருந்து பார்க்க மிகவும் சாதாரண வீடாகத்தான் தெரியும் ஆனால் வீட்டின் உள்ளே சென்றீர்கள் என்றால் அசந்துவிடுவீர்கள். ஏனெனில் அதன் உள் அலங்காரம் உங்களுக்கு ஹாரி பாட்டர் நாவலுக்குள்ளே புகுந்துவந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.
எப்படி வீட்டை ஒரு சினிமா செட் போல் வடிவமைக்கும் ஆசை இவருக்கு வந்தது என்பது சுவாரசியமான விஷயம். இவர் ஒருமுறை வார்னர் ஸ்டுடியோவுக்குச் சென்று ஹாரி பாட்டர் உருவாக்கப்பட்ட விதத்தைப் பார்த்திருக்கிறார். அதன் மாயத்தன்மை அவரைக் கவந்துவிட்டது. தனது வீட்டையும் ஹாரி பாட்டர் செட் போல மாற்றிவிடும் ஆசை துளிர்த்துவிட்டது. இவரது விருப்பத்துக்கு இவருடைய கணவரும் தலையாட்டிவிட்டார். பிறகென்ன, சுமார் ஒன்றரை ஆண்டுகள் செலவழித்து வீட்டின் வரவேற்பறை, சமையலறை, உணவருந்தும் அறை எனப் பலவற்றையும் மாற்றிவிட்டார். வீட்டின் உள்ளே ஹாரி பாட்டர் தொடர்பான படங்களும், அப்படத்தில் இடம்பெறும் பொருள்களும் நிறைந்திருக்கின்றன. திடீரென உள்ளே வருபவர்களுக்கு இது வீடா சினிமா செட்டா என்ற சந்தேகமே ஏற்பட்டுவிடும் அளவுக்கு வீட்டின் தோற்றத்தையே மாற்றிவிட்டார்.
வீட்டின் வரவேற்பறையை ஹாரி பாட்டர் படத்தில் வரும் ஹாக்வர்ட்ஸ் மந்திரப் பள்ளியின் ஹாலைப் போலவே வடிவமைத்திருக்கிறார். இதற்காகப் பழமையான பொருள்களை எல்லாம் தேடிப் பிடித்து வாங்கியிருக்கிறார்கள். ஓரிரு பொருள்கள் ஹாரி பாட்டர் படத்தில் இடம்பெற்றதே இவருக்குக் கிடைத்திருக்கிறது. இப்படி ஒவ்வொன்றாகப் பார்த்து பார்த்து அமைத்த வீட்டில் நண்பர்களுடன் கிறிஸ்துமஸைக் கொண்டாடியிருக்கிறார். தனது குழந்தைகளுக்கும் இந்த வீட்டின் அமைப்பு மிகவும் பிடித்துப்போய்விட்டது என்றும் இவர் கூறுகிறார். இதெல்லாம் சரிதான். இப்படி இவரது வீட்டை மாற்ற எவ்வளவு செலவாகியது என்று தெரிந்துகொள்ள விரும்புவீர்கள் தானே. அதிகமில்லை நமது பண மதிப்புக்கு சுமார் 10 லட்சம் ரூபாய். வாயைப் பிளக்காதீர்கள். அப்படிச் செலவழித்ததால் தான் இப்போது இந்த வீட்டை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT