Published : 05 Apr 2014 01:00 PM
Last Updated : 05 Apr 2014 01:00 PM
சொந்த வீடு சென்ற இதழில் வெளியான ‘வாடகைதாரரா நீங்கள்..?’ என்னும் கட்டுரையைத் தொடர்ந்து வாசகர்கள் பலர் வாடகை வீடு குறித்து சட்டரீதியான சந்தேகங்களை எழுப்பியிருந்தனர். இது தொடர்பான நமது கேள்விகளுக்கு வழக்கறிஞர் விஸ்வநாதன் பதில்களை அளிக்கிறார்.
1. வாடகை வீட்டில் மிக நீண்டகாலம் வசிப்பவர்கள் அந்த வீட்டைச் சொந்தமாக்கச் சட்டத்தில் இடம் இருக்கிறதா?
வாடகை வீட்டுக்காரர் 100 வருடமே வசித்தாலும் அந்த வீட்டைச் சொந்தம் கொண்டாடச் சட்டத்தில் வழிமுறை இல்லை. ஆனால் 12 வருடங்களாக வாடகைக் கட்டணம் ஏதும் செலுத்தாமல் வாடகைதாரர் இருக்கும்பட்சத்தில் அந்த வீட்டிற்கு உரிமை கோர சட்டத்தில் வழியிருக்கிறது. அதாவது வீட்டு உரிமையாளர் வாடகை வசூலிக்காமல் இருக்கும் பட்சத்தில் இது சாத்தியமாகும்.
2 வாடகைக் கட்டணம், அட்வான்ஸ் நிர்ணயிப்பதில் சட்ட வரையறை உண்டா?
வாடகைக் கட்டணம் வசூலிப்பதில் சட்ட வரையறை எதுவும் சட்டத்தில் இல்லை. ஆனால் வாடகைக் கட்டணம் கூட்டுவது குறித்து வாடகை ஒப்பந்தப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் உரிமையாளர் அதற்கேற்றபடி வாடகைக் கட்டணத்தைக் கூட்டலாம். ஆனால் அதற்கு வாடகைதாரருக்கு உடன்பாடு இல்லாதபோது அவர்கள் நீதிமன்றத்தில் சென்று முறையிடலாம். அதுபோல உரிமையாளரும் வாடகைக் கட்டணம் உயர்த்தும்போது வாடகைதாரர் ஒத்துக்கொள்ளாதபட்சத்தில் கட்டணம் உயர்த்துவதற்கான உரிய காரணத்தைத்துடன் நீதிமன்றம் சென்று முறையிடலாம்.
வாடகைதாரர் அதிகமான வாடகைக் கட்டணத்திற்கு குடிவந்த பிறகு, அந்தக் கட்டணம் அதிகம் என நினைத்தாலும் நீதிமன்றத்தை அணுகலாம். உதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு ஒருவர் குடி வருகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் குடி வந்த பிறகு அருகில் உள்ள வீட்டு வாடகைக் கட்டணங்கள் மிகக் குறைவாக இருக்கிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் வாடகைதாரர் நீதிமன்றத்தை அணுகலாம்.
வாடகை முன்பணத்தைப் பொறுத்தவரை அதற்குச் சட்டம் நிர்ணயித்திருக்கும் தொகை என்பது ஒரு மாத வாடகைதான். அதாவது வாடகைதாரர் அளிக்கவிருக்கும் வாடகையை முன்பணமாகச் செலுத்தினாலேயே போதுமானது.
3. வாடகைதாரர்களைக் காலி செய்யச் சொல்ல என்னென்ன காரணங்கள் உள்ளன?
உரிமையாளர் வீட்டைக் காலி செய்யக் கோர முறையான சில காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை:
வாடகை ஒப்பந்தப் பத்திரத்தில் குறிப்பிட்ட தேதிக்குள் வாடகையைச் செலுத்தத் தவறும்போது காலிசெய்யச் சொல்லலாம். அதாவது 5க்குள் வாடகை தருவதாக ஒப்பந்தம் என்றால் உரிமையாளர் அந்தத் தேதியில் இருந்து 15 நாட்கள் வரை பார்க்கலாம். அதற்குப் பிறகு வாடகை செலுத்தத் தவறினால் காலிசெய்யச் சொல்லலாம்.
வாடகை ஒப்பந்தப் பத்திரத்திற்கு மாறாக வீட்டை வேறு ஒருவருக்கு உள்வாடகைக்கு விடும்போது காலிசெய்யச் சொல்லலாம். வீட்டின் மதிப்பையும், உபயோகத்தையும் பாதிக்கக்கூடிய வகையில் அதைச் சேதப்படுத்தி இருந்தால் காலிசெய்யச் சொல்லலாம்.
வீடு எந்த உபயோகத்திற்கு விடப்பட்டதோ அதைத் தவிர்த்து மற்ற உபயோகத்திற்குப் பயன்படுத்தும்போது. உதாரணத்திற்கு வசிப்பதற்காக எடுத்து அதில் ஏதெனும் வணிகம் செய்தால். சட்ட விரோதமான செயல்களுக்காக அந்த வீட்டைப் பயன்படுத்திய அல்லது பயன்படுத்த அனுமதித்த குற்றத்திற்காக வாடகைதாரர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தால்...
வீட்டுக்கு அருகில் வசிப்பவர்களுக்குத் தொல்லை தரக்கூடிய செயல்களில் வாடகைதாரர் ஈடுபடும்போது... அந்த வீட்டை உபயோகிக்காமல் 4 மாதங்களுக்கு மேல் பூட்டி வைத்திருந்தால்... (மலைவாசஸ் தலங்களுக்கு இந்த வீதிமுறை செல்லாது).
4. வாடகைதாரர் வீட்டைச் சேதப்படுத்தினால் உரிமையாளர் இழப்பீடு வாங்கிக்கொள்ள சட்ட வழிமுறை இருக்கிறதா?
வாடகைதாரர் வீட்டைச் சேதப்படுத்தினால் அதற்கான இழப்பீடைப் பெற்றுக்கொள்ளச் சட்டத்தில் இடம் இருக்கிறது. வாடகைதாரர் வீட்டிற்காகச் செலுத்தியிருக்கும் அட்வான்ஸில் உரிய தொகையைப் பிடித்துக்கொள்ளும் உரிமையும் உரிமையாளருக்கு உண்டு.
5. வாடகைதாரர்கள் தங்கள் பிரச்சினைகள் தொடர்பாக நீதிமன்றத்தை எப்படி அணுகுவது?
சென்னையைப் பொறுத்தவரை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்திருக்கும் சிறுவழக்குகள் நீதிமன்றத்தை அணுகலாம். வெளியூர்களில் இருப்பவர்கள் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம்.
6. தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியமான தேவைகள் நிறுத்தப்படுவது, திடீரென வீட்டைக் காலிசெய்யச் சொல்வது - இது போன்று உரிமையாளர்கள் தொந்தரவு தரும்போது அதற்கான இழப்பீடு வாங்க வாடகைதாரர்களுக்கு உரிமை உண்டா?
தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியமான தேவைகளை நிறுத்துவதற்கு உரிமையாளருக்கு உரிமை இல்லை. இம்மாதிரியான சூழ்நிலையில் வாடகைதாரர் உரிமையியல் நீதிமன்றத்தில் சென்று முறையிடலாம். இம்மாதிரியான வழக்குகள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுத் தீர்வு காணப்படும். இதுபோன்ற தொந்தரவுகளால் வாடகைதாரருக்கு ஏதேனும் இழப்பு இருக்கும்பட்சத்தில் உரிமையாளர் அதற்குரிய இழப்பீடைத் தர வேண்டும்.
தொடர்புக்கு: sbviswanathan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment