Published : 29 Mar 2014 01:48 PM
Last Updated : 29 Mar 2014 01:48 PM
வீடு கட்டுவது என்பதே மிகப் பெரிய சவால்தான். அதுவும் மனை விலை ஏற்றம், சந்தை வழிகாட்டு மதிப்பு உயர்வு, வரி உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக இப்போது வீடு கட்டி முடிப்பதற்குள் கட்டுநர்களுக்கும் தலையே சுற்றி விடுகிறது. குறிப்பாக சென்னை போன்ற பெரு நகரங்களில் அடுக்குமாடி வீடுகள் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்துவருகின்றன. ஆனால், விலையேற்றம் காரணமாக வீடுகளை விற்க முடியாமல் போவதாகக் கூறுகின்றனர் கட்டுநர்கள்.
சென்னையில் மனை கிடைப்பதே குதிரைக் கொம்பாகிவிட்டது. அப்படியே கிடைத்தாலும், கோடி ரூபாய்க்குக் குறைவாக மனைகள் கிடைப்பதும் இல்லை. எனவே தனி வீடெல்லாம் சென்னையில் பழங்கதையாகி வருகிறது. ஒரு கிரவுண்டு (2400 சதுர அடி) நிலம் கிடைத்தாலும், புரோமோட்டர்கள் அந்த நிலத்தில் 10 வீடுகள் வரை கட்டிவிடுகிறார்கள். இடத்திற்கும், வசதிக்கும் ஏற்றவாறு ஃபிளாட் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது.
சென்னையில் ஒரு கிரவுண்டு நிலம் வாங்கி அடுக்குமாடி வீடு கட்ட வேண்டும் என்றால் கோடிக்கணக்கில் செலவாகும். சந்தை வழிகாட்டு மதிப்பு உயர்வு, பத்திரப் பதிவு செலவு, மாநாகராட்சி, மின் வாரியம், குடிநீர் இணைப்பு என இவற்றுக்கு கட்டும் வரியும் செலவும் தனி. ஃபிளாட்டுகளில் கார் பார்க்கிங் அமைப்பது உள்பட பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு உள்ளாட்சி அமைப்புக்கு அதிக வரி செலுத்த வேண்டும். இவ்வளவு செலவுக்கிடையே வீடு கட்டும் புரோமோட்டர்கள் லாபமும் பார்க்க வேண்டும். விளைவு என்ன? வீட்டின் விலையை உயர்த்துவதுதான்.
ஆனால், முன்பு போல அதிக விலை கொடுத்து வீடுகளை வாங்கப் பொதுமக்கள் விரும்புவதில்லை. பட்ஜெட் போட்டு வீட்டுக் கடன் வாங்குவோர் கூடுதல் விலை கொடுத்து வாங்காமல் விட்டுவிடும் நிலையும் உள்ளது என்கிறார் சென்னைப் புற நகர் கட்டுநர் சங்கச் செயலாளர் பிரான்சிஸ் பிரிட்டோ. “செலவினங்கள் அதிகரித்து, அதை வாடிக்கையாளரிடம் சொன்னாலும் அவர்கள் அதை ஏற்க மாட்டார்கள். இதன் காரணமாகப் பல வீடுகளை விற்க முடியாமலும் போகிறது. புரோமோட்டர்களும் கடன் வாங்கித்தான் வீடு கட்டுகிறார்கள். வீடுகள் விற்க முடியாமல் போவதால் பல நெருக்கடிகளைச் சந்திக்கும் கட்டுநர்கள், தொழிலை விட்டு விலகும் சூழ்நிலையும் ஏற்படுகிறது’’ என்கிறார் பிரான்சிஸ்.
அப்படியானால் கட்டுமானச் செலவினங்களைக் குறைக்க வழியில்லையா? ‘‘தேர்தலுக்கு பிறகு கட்டுமானத் தொழில் மீளூம் என்ற நம்பிக்கை உள்ளது. கட்டுமானச் செலவுகளும், வரிகளும் குறையும் என்று எதிர்பார்க்கிறோம். இது நடந்தால் வீடு விலையும் குறையலாம்” என்கிறார் பிரான்சிஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment