Published : 08 Nov 2014 03:03 PM
Last Updated : 08 Nov 2014 03:03 PM
ஒரு சொத்துக்கு வாரிசுதாரர்கள் எந்த வகையில் உரிமை கோர முடியும் என்பது அந்தச் சொத்து எந்த வகையில் வந்தது என்பதைப் பொறுத்து இருக்கிறது. பூர்வீகச் சொத்தாக இருந்தால் அதில் உடைமையாளரின் மகனுக்கும் பின் அவருடைய பேரனுக்கும் உரிமை உண்டு.
அதே சமயத்தில் ஒருவர் தன் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தாக இருந்தால் அந்தச் சொத்துக்கான உரிமை அவருக்கு மட்டுமே உரித்தானது. அந்தச் சொத்தில் மற்ற எவரும் உரிமை கோர முடியாது. அவருடைய காலத்திற்குப் பிறகு அந்தச் சொத்தை தன் விருப்பப்படி யாருக்கும் எழுதி வைக்கும் உரிமை அவருக்கு உண்டு. அது எவருடைய தலையீடுக்கும் அப்பாற்பட்டது.
அவரது வாரிசோ, உறவினரோ யாரும் அந்தச் சொத்தின் மீது உரிமை கொண்டாடவும் முடியாது. இன்னொரு முறையில் பார்த்தால் மனைவியின் சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா என்னும் ஒரு கேள்வி வருகிறது. மேற்சொன்ன முறையில் பார்த்தால் ஒரு பெண்ணுக்கு எந்த வகையில் சொத்து வந்தாலும், அது அந்தப் பெண்ணுக்கு மட்டுமே உரிமை உடைய சொத்து.
அதாவது பெற்றோர் தன் பெண்ணில் நலத்திற்காக அவருக்கு ஒரு சொத்தை எழுதிவைக்கிறார் என்றால், அந்தச் சொத்து அவளுக்கு மட்டுமானதுதான். ஒரு கணவன் தன் சுய சம்பாத்தியம் மூலம் தன் மனைவி பெயருக்கு ஒரு சொத்தை வாங்குகிறார் என வைத்துக்கொண்டால் அந்தச் சொத்திலும் கணவன் உரிமை கொண்டாட முடியாது.
எந்த வகையில் ஒரு பெண்ணின் பெயரில் சொத்துப் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும் அதற்கு அந்தப் பெண் மட்டுமே உரிமை கொண்டாட முடியும். இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் ஒரு பிரிவு பெண்ணுக்கு எந்த வகையில் சொத்து வந்தாலும் அது அவருக்கு மட்டுமே உரிமை உடைய தனிபட்ட சொத்து என்கிறது. இதன்படி கணவன், மனைவி பெயரில் இருக்கும் சொத்தில் தனக்கும் உரிமை உண்டு எனச் சொந்தம் கொண்டாட முடியாது என்பது தெளிவாகிறது. ஒரு பெண் தனக்கு உரிமைப்பட்ட சொத்தைத் தன் காலத்திற்குப் பிறகு யாருக்கும் எழுதி வைக்க முடியும்.
கணவன் தன் வருமானத்தின் மூலம் வாங்கிய சொத்தை மனைவி பெயரில் பத்திரப் பதிவு செய்திருந்தாலும் அந்தச் சொத்தில் கணவருக்கு உரிமை இல்லை. அதே சமயம் சட்டப்படி அந்தச் சொத்தைப் பெற ஒரு வழி இருக்கிறது. அந்தச் சொத்து வாங்கியதற்காகச் செலுத்தப்பட்ட பணம் தன்னால் மட்டுமே அளிக்கப்பட்டது என்பதை உரிய ஆவணங்களுடன் நிரூப்பிக்கும்பட்சத்தில் இது சாத்தியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT