Published : 04 Jun 2016 01:19 PM
Last Updated : 04 Jun 2016 01:19 PM
பத்திரப்பதிவு செய்யும்போது பலரும், பத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள தகவல்களைச் சரிவர படிக்கமாட்டார்கள்.வீட்டில் இருப்பவர்களிடம் கொடுத்தும் முழுமையாகப் படிக்காமல் விட்டுவிடுவார்கள். பத்திரப்பதிவு அலுவலம் சென்று, ஆவணத்தைப் பதிவு செய்து வந்த பிறகு, அதில் பிழை இருப்பதைக் கண்டுபிடிப்பார்கள். ஆவணங்களில் பிழை இருந்தால், பத்திரப்பதிவுக்குப் பிறகு சரி செய்ய முடியுமா?
பத்திரப்பதிவு என்பது வீடோ, மனையோ நமக்குச் சொந்தம் என்பதைக் காட்டும் ஆவணம். அந்த ஆவணத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் எந்தப் பிழையும் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம்.
தட்டச்சு செய்யும்போதோ பிழை ஏற்படுவது சகஜமே. இப்படிப் பத்திரப்பதிவு ஆவணத்தில் பிழை இருந்து, அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் பின்னாளில் பெரும் பிரச்சினையாகிவிடும். பெயர், தந்தை பெயர், விலாசம், மனையின் விவரங்கள், தொகை போன்ற ஏதாவது விவரம் தவறாக இருந்தால்., பிற்காலத்தில் சொத்தை விற்கும்போதோ, பெயர் மாற்றம் செய்யும்போதோ பெரும் சிக்கலாகிவிடும். சிறு பிழையைக் காரணம் காட்டி சொத்து நமக்கு உரியது அல்ல என்று பேசும் அளவுக்கு நிலைமையை மோசமாக்கிவிடும்.
எனவே பத்திரப்பதிவுக்காக ஆவணங்களைத் தயார் செய்யும்போது வார்த்தைக்கு வார்த்தை கண்ணில் எண்ணெண்யை விட்டுப் படிக்க வேண்டும். சிறியதாக ஒரு தவறும் இல்லையென்றால் மட்டுமே சரியான ஆவணமாக இருக்கும். ஒரு வேளை பதிவு செய்த பிறகு ஆவணங்களில் தவறு இருந்தால் என்ன செய்வது? அதற்காக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. எந்தப் பிழையாக இருந்தாலும் அதைச் சரி செய்துவிட முடியும்.
பிழை திருத்தும் ஆவணம் மூலமே பிழைகளைச் சரி செய்ய முடியும். அப்படிப் பிழைகளைத் திருத்தும் ஆவணத்தையும் பதிவு செய்ய வேண்டும். பெயர், விலாசம் போன்றவற்றில் கவனக் குறைவால் ஏற்படும் பிழைகளைத் திருத்தி பதிவு செய்யும்போது அதற்காகக் கட்டணங்கள் வசூலிக்கமாட்டார்கள்.
சிலர் தாய் பத்திரத்தில் உள்ள சர்வே எண்ணை தவறாகக் குறிப்பிட்டுவிடுவார்கள். சர்வே எண்ணை தவறாக குறிப்பிட்டிருந்தாலும் பிரச்சினையில்லை. மனையின் நான்கு எல்லைகள், பரப்பளவு, அமைவிடம் போன்ற தகவல்கள் தாய்ப் பத்திரத்தில் இருப்பதுபோலவே இருந்தால், பிழை திருத்த ரூ. 300 வரை செலவாகக்கூடும்.
எல்லாம் சரி, மனைக்கான அரசு வழிகாட்டி மதிப்பைத் தவறாகக் குறிப்பிட்டால் பிழையைத் திருத்த முடியுமா? இந்தப் பிழை சில ஆண்டுகள் கழித்து தெரிய வந்தால் அலைய நேரிடும். இடைப்பட்ட ஆண்டுகளுக்குள் அரசு வழிகாட்டி மதிப்பு மாறியிருக்கும்.
அந்தப் பிழையைத் திருத்தும்பட்சத்தில் வித்தியாசத் தொகைக்கு முத்திரைத் தீர்வைக் கட்டணம், பதிவுக் கட்டணம் ஆகியவற்றை செலுத்த சொல்லக்கூடும். கூடுதல் முத்திரைக் கட்டணத்தைச் செலுத்தாமல் இருக்க மேலதிகாரிகள் வரை முறையீடு செய்ய வேண்டியிருக்கும். எனவே தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.
இப்படிச் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, பத்திரப்பதிவு ஆவணங்களைப் பதிவு செய்வதற்கு முன்பே, எழுத்துக்கு எழுத்து, வார்த்தைக்கு வார்த்தை முழுமையாகப் படித்துவிடுவது நல்லது. வழக்கறிஞர் மூலமும் ஒருமுறை படித்துக்கொள்வதும் எதிர்காலத்தில் சிக்கலைத் தவிர்க்க உதவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT