Published : 25 Jun 2016 02:19 PM
Last Updated : 25 Jun 2016 02:19 PM
வீட்டுக் கடன் வாங்கியவரா நீங்கள்? மாதாமாதம் தவணைத் தொகையைச் செலுத்திக்கொண்டிருக்கிறார்களா? நீங்கள் வாங்கிய வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நீங்கள் கடன் வாங்கிய வங்கியின் விளம்பரங்களை இப்போது நீங்கள் பார்க்கக்கூடும். அந்த விளம்பரங்களில், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம், நீங்கள் செலுத்தும் வட்டி விகிதத்தைவிடக் குறைவாக வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டிருப்பார்கள்.
வட்டிக் குறைப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் அல்லவா? புதிதாகக் கடன் வாங்குபவர்களுக்குக் குறைவாகவும், ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்குக் கொஞ்சம் கூடுதலாகவும் வட்டி விகிதம் இருக்க என்ன காரணம்?
வீட்டுக் கடன் வாங்கித் தவணையைச் செலுத்திக்கொண்டிருப்பவர்களுக்கு எப்போது கடன் முடியும் என்ற ஏக்கம் இருந்துகொண்டே இருக்கும். வீட்டுக் கடனுக்கான வட்டிக் குறைப்பை வங்கிகள் அறிவித்தால், தவணைத் தொகையில் சில நூறுகள் குறையும் என்று வீட்டுக் கடன் வாங்கியவர்கள் மகிழ்வார்கள். இதேபோல ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை (வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து வாங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதம்) குறைத்தால், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் குறையுமா என்று எதிர்பார்ப்பது கடன் வாங்கியவர்களின் வழக்கமான செயல்களில் ஒன்றாக மாறிவிட்டது.
பாரபட்சமா?
அண்மைக் காலமாக வங்கிகளின் விளம்பரங்களில் நாம் செலுத்திக்கொண்டிருக்கும் வட்டி விகிதத்தைவிடக் குறைவான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்கப்படுவதாக விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கியவர்கள், வங்கிகளிடம் ஏன் இந்தப் பாரபட்சம் என்று கேள்வியை எழுப்பாமல் இருக்கமாட்டார்கள்.
இதைப் பற்றி வங்கிகள் தரப்பில் விசாரித்தால், “சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொருளைக் கூடுதல் விலைக்கு வாங்கியிருப்போம். அதேபொருள் இப்போது விலை குறைவாகக் கிடைக்கும். அதுபோலத்தான் இதுவும்” என்று சொல்கிறார்கள்.
வட்டிக் குறைப்புக்குக் காரணம்
பொருளுக்கு வேண்டுமானால் இது சாத்தியமாகலாம்; வட்டி விகிதத்தில் இது எப்படிச் சாத்தியமாகும் என்று நீங்கள் கேட்கலாம். இதற்கு ‘மார்ஜினல் காஸ்ட் லெண்டிங் ரேட்’ (மார்ஜினல் செலவினக் கடன்களுக்கான வட்டி விகிதம்)’ காரணம் எனக் கைகாட்டுகிறார்கள் வங்கியாளர்கள். அப்படியென்றால் என்ன?
“ஒரு காலத்தில் பிரைம் லெண்டிங் ரேட் (அதாவது, பிரமாணக் கடன்களுக்கான வட்டி விகிதம்) மூலம் வீட்டுக் கடன், வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. அதன்பிறகு ‘பேஸ் ரேட்’ (அடிப்படைகடன் வட்டி விகிதம்) அடிப்படையில் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது.
தற்போது ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி மார்ஜினல் காஸ்ட் (செலவு), லெண்டிங் ரேட் என்கிற கடன் வட்டி விகிதத்தை (எம்.சி.எல்.ஆர்.) அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வங்கிகளுக்கு டெபாசிட் முதலிய நிதி திரட்டுவதற்கு ஆகும் செலவினங்களைக் கணக்கிடும்போது சி.ஆர்.ஆர். எனப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டது.
இந்தப் புதிய நடைமுறையினால் வேறு வழியே இல்லாமல் புதிதாக வீட்டுக் கடன், வாகனக் கடன் வாங்குபவர்களுக்கு வட்டி விகிதம் சிறிதளவு குறைந்துள்ளது” என்கிறார் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன்.
எம்.சி.எல்.ஆர். ஏன் ?
- கோபாலகிருஷ்ணன்
எம்.சி.எல்.ஆர். கொண்டு வருவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ரெப்போ ரேட்டை ரிசர்வ் வங்கி குறைக்கும்போதெல்லாம் வீட்டுக் கடன், வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி எதிர்பார்த்தது. ஆனால், பல வங்கிகள் அப்படிக் குறைப்பதில்லை.
வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைப்பதில்லையே என்ற குறை ரிசர்வ் வங்கிக்கு இருந்துவந்தது. அதன்படியே எம்.சி.எல்.ஆரை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. இதன் காரணமாகவே ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பை எம்.சி.எல்.ஆரில் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி நடைமுறையை மாற்றிவிட்டது.
இதன் காரணமாகத்தான் புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு வட்டி விகிதம் குறைந்துள்ளது. ஆனால், எம்.சி.எல்.ஆர். கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்போது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் எல்லோருக்கும் நிச்சயமாகக் குறையும் என்று சொல்கிறார்கள் வங்கியாளர்கள்.
பழைய கடன்தாரர்களும் மாறலாம்
இந்தப் புதிய நடைமுறையினால் குறைந்த வட்டி விகிதத்துக்கு, ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கியவர்களும் மாறிக்கொள்ள முடியும். அதற்கும் பல வங்கிகளில் வசதிகள் உள்ளன. அதை ‘பேலன்ஸ் டிரான்ஸ்பர்’என்று சொல்வார்கள். எஞ்சிய தொகைக்குப் புதிய வட்டி விகிதத்தில் மாறிக்கொள்வதாகும்.
இதற்கு சில விஷயங்களை வங்கிகள் பின்பற்றும். வீட்டின் மதிப்பீட்டைப் புதிதாகக் கேட்கவும் வாய்ப்புண்டு; அதற்கு ஏற்பப் புதிய வட்டி விகிதத்தை நிர்ணயிக்கவும் கூடும். மேலும் புதிய வட்டி விகிதத்துக்கு மாறிக்கொள்ள ‘கன்வெர்ஷன் ஃபீஸ்’ என்ற கட்டணத்தையும் வங்கிகள் வசூலிக்கும். ஏற்கெனவே உள்ள வட்டி விகிதத்திலிருந்து குறைவாக உள்ள வட்டி விகிதத்துக்கு மாறுவது நல்லதா?
“புதிய வட்டி விகிதத்தில் மாறுவதால் அதிகப் பலன் கிடைக்கும் என்றால் மாறிக்கொள்ளலாம். வட்டி விகிதம் மாறினாலும், செலுத்தும் தவணைத் தொகை ஏற்கெனவே செலுத்தப்படும் தொகைக்குச் சமமாகவோ அல்லது சிறிது குறைந்திருந்தாலோ மாறாமல் இருப்பதே நல்லது. ஏனென்றால், புதிய வட்டி விகிதத்துக்கு மாறக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் அதையெல்லாம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்” என்கிறார் எஸ்.கோபாலகிருஷ்ணன்.
எந்த வட்டிக் குறைப்பு தேவை? முடிவு உங்கள் கையில்!
இந்தப் புதிய நடைமுறையினால் குறைந்த வட்டி விகிதத்துக்கு, ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கியவர்களும் மாறிக்கொள்ள முடியும். அதற்கும் பல வங்கிகளில் வசதிகள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT