Published : 24 Jun 2017 11:33 AM
Last Updated : 24 Jun 2017 11:33 AM
கடந்த இருபதாண்டுகளில் கட்டுமானத் துறை அசுர வளர்ச்சி கண்டுள்ளது. அதே அளவுக்குக் கட்டுமானப் பொருட்களுக்காக இயற்கையைச் சுரண்டுவதும் அதிகரித்திருக்கிறது. சுரண்டப்படுவதில் முக்கியமானது ஆற்று மணல். ஆற்று மணல் அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரப் பொருளல்ல. ஆனால், அதில் கிடைக்கும் அளவற்ற லாபத்தால் கணக்கு வழக்கு இல்லாமல் ஆற்று மணல் சுரண்டப்பட்டது. முறையின்றி ஆற்றில் மணல் அள்ளுவதற்கு உயர் நீதிமன்றத் தடை விதித்த பிறகு இந்த மணல் கொள்ளை முடிவுக்கு வந்தது.
அரசே மணல் குவாரிகளை ஏற்று நடத்தவும் தொடங்கியது. இதனால் மணல் பதுக்கல் ஓரளவு குறைந்து நியாயமான விலைக்கு மணல் கிடைத்துவந்தது. இதற்கிடையில் கடந்த ஏப்ரலில் எண்பது அரசு குவாரிகள் மூடப்பட்டன. இதனால் மணல் தட்டுப்பாடு மிக அதிகமாகி, மீண்டும் பழைய நிலைக்குப் போனது. மணலைத் தேக்கிவைத்து அதிகமான விலைக்கு விற்பதும், ஆற்று மணலுடன் கடற்கரை மணலைக் கலந்து விற்பதும் அதிகரித்தது. இதற்கிடையே எம்-சாண்ட் எனப்படும் செயற்கை மணல் விற்பனை அதிகமாகி, அதற்கும் தட்டுபாடும் வந்தது, அந்த மணலில் கலப்படமும் செய்யப்பட்டது.
ஆனால், இப்போது சில அரசு குவாரிகள் திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளன. ஆனாலும் மணல் தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. இந்தத் தட்டுப்பாடு தீர்வதற்கு எம்-சாண்டைப் பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். ஆனால், அரசு குவாரிகளை ஏற்று நடத்துவது, எம்-சாண்ட் பயன்பாட்டை அதிகப்படுத்துவது போன்ற பல யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.
ஆற்று மணலை அத்தியாவசியப் பொருளாக மாற்றிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. “சிமெண்டை அத்தியாவசியப் பொருளாக அறிவிக்கச் சொல்லித் தொடர்ந்து கோரி வருகிறோம். இப்போது ஆற்று மணலையும் அத்தியாவசியப் பொருளாக அறிவிக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது” என்கிறார் இந்தியக் கட்டுமானச் சங்கத்தின் தேசியக் குழு உறுப்பினரான ஐடியல் சிறில் கிறிஸ்துராஜ். பஞ்சாப் மாநில அரசும் ஆந்திரா அரசும் ஆற்று மணலை அத்தியாவசியப் பொருளாக அங்கீகரித்துள்ளன.
ஆற்று மணலை அத்தியாவசியப் பொருளாக அறிவித்தால் அதன் விலையை அரசு கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஆற்று மணல் மூலம் நடக்கும் கொள்ளைகளைத் தடுக்க முடியும் என அத்துறைசார்ந்தவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
மணல் மிக அதிகமான விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க மற்றுமொரு வழிமுறை, அதை இணையம் மூலம் விற்பது. ரூபி பில்டர்ஸ் நிறுவனர் ரூபி மனோகரன், “ஆற்று மணல் கட்டிடங்களைக் கட்டியெழுப்பத் தேவையான கட்டுமானப் பொருள். அதை வழங்குவதில் அரசு சில தீர்க்கமான முறைகளைக் கொண்டுவர வேண்டியது அவசியம். மணல் வாங்குவதற்காக அரசு குவாரிகளில் வாகனங்கள் நாட்கணக்கில் காவல் கிடக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். எந்தத் தேதியில் மணல் கிடைக்கும் என்பது தெரிந்தால் இந்தக் காத்திருப்பு மிச்சமாகும். அதனால் உண்டாகும் பொருள் செலவும் மிச்சமாகும்” என்கிறார்
ஏற்கெனவே ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஆற்று மணலை இணையம் மூலம் விற்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுச் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. தமிழகத்திலும் ஆன்லைன் மணல் விற்பனைத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என முதல்வர் மே மாதம் அறிவித்தார். ஆனால், இதுவரை அந்தத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
“கொள்ளிடத்திலிருந்து நாங்கள் மணல் எடுத்துவருகிறோம். அங்கு மணல் எடுப்பதிலும் பல சிக்கல்கள் இருக்கின்றன. ஒரு லோடு மணல் எடுக்க குறைந்தது நான்கிலிருந்து ஐந்து நாட்கள் வரை ஆகின்றன. இந்த நான்கு நாட்களுக்குண்டான லாரி வாடகை, ஓட்டுநர் சம்பளம், நடத்துநர் சம்பளம், தினப்படி எல்லாவற்றையும் இந்த மணல் விலைக்குள் சேர்க்க வேண்டியிருக்கிறது. அதனால் மணல் விலை மிக அதிகமாக இருக்கிறது. இன்றைய கணக்குப்படி பார்த்தால் ஒரு யூனிட் மணலை ரூ.11,000-க்கு விற்க வேண்டியிருக்கிறது” என்கிறார் கட்டுமானப் பொருள்கள் தயாரிப்பாளரான அசோக்குமார்.
இந்தச் சூழ்நிலையில் ஆற்று மணலைக் கையாள்வதில் புதிய கொள்கைகளை அரசு அறிவிக்க வேண்டியது இப்போது அவசியம். இணையம் மூலம் ஆற்று மணல் விற்பனையைத் தொடங்க வேண்டியது அவற்றுள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே ரியல் எஸ்டேட் துறையினரது எதிர்பார்ப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT