Published : 04 Mar 2017 11:00 AM
Last Updated : 04 Mar 2017 11:00 AM
எல்லாப் பொருள்களிலும் நீளம், அகலம், ஆழம் என மூன்று பரிமாணங்கள் உள்ளன. ஓவியத்திலோ திரைப்படத்திலோ நீளம், அகலம் எனும் இரு பரிமாணங்கள் மட்டுமே காணப்படும். ஆனால், திரைப்படங்களில் சில பத்தாண்டுகளுக்கு முன்பே முப்பரிமாணம் வரத் தொடங்கி விட்டது. நாமும் கண்ணாடியுடன் கண்டுகளித்திருப்போம். இப்போது முப்பரிமாண அச்சாக்க முறையில் (3D printing) உணவு தயாரிக்கப்படுகிறது. அதுபோல கட்டுமானத் துறையிலும் உலகின் முதல் முப்பரிமாண அச்சாக்க முறையில் (3D printing) உலகின் முதல் வீடு நெதர்லாந்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. முப்பரிமாண அச்சாக்கம் (3D printing) என்பது பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம்.
கணினியில் நாம் தட்டச்சு செய்யும் ஆவணங்களை எப்படி அப்படியோ பிரிண்ட் எடுக்கிறோமோ அப்படியே ஒரு வீட்டின் ப்ளானை மென்பொருட்களில் வரைந்து, ஒரு வீட்டையே பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம். காகிதம், இங்கிற்குப் பதிலாக வீட்டின் மூலப் பொருட்களை இட வேண்டும்.
கட்டுமானத் தொழிலானது மிகவும் மாசு ஏற்படுத்தும் துறையாக இருந்துவருகிறது. இம்மாதிரியான வீடுகள் கட்டப்படுவது பெருகும் நிலையில் அது குறையும் வாய்ப்பு உள்ளது. முப்பரிமாண அச்சாக்க முறையில் போக்குவரத்துச் செலவுகளும் குறையும் வாய்ப்பும் உள்ளது. மேலும் எல்லாவிதமான பொருட்களையும் உருக்கிப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மறுசுழற்சியும் செய்யப்படுகிறது. இந்தப் புதிய முறை கட்டுமாணத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும். கேமர் மேக்கர் (kamer maker) என்னும் கருவியைத்தான் கட்டுமானத்திற்காகப் பயன்படுத்தி வருகிறார்கள். 75% தாவர எண்ணெய் மற்றும் மைக்ரோ ஃபைபர்கள் அடங்கிய ப்லாஸ்டிக் கலவைதான் மூலப் பொருட்கள்.
இதே துறையில் சில ஆண்டுகளாகப் பல நிறுவனங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. பிரான்ஸைச் சேர்ந்த எக்ஸ்ட்ரீ என்னும் கட்டுமான நிறுவனம் பெரிய அளவிலான 3டி பிரிண்டிங் இயந்திரத்தைக் கட்டுமானத் துறையில் பயன்படுத்துவது குறித்து 2015-ம் ஆண்டு முதல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.
சமீபத்தில் அவர்கள் அதன் முதல் வெற்றியை அடைந்திருக்கிறார்கள். தொடக்கப்பள்ளிக் கட்டிடம் ஒன்றின் இறுதி வடிவமைப்பைப் பணியை எக்ஸ்ட்ரீ ஏற்றுக்கொண்டுள்ளது. அதனடிப்படையில் 4 மீட்டர் உயரத் தூண் ஒன்றை 3டி பிரிண்டிங் முறையுல் வடிவமைக்கத் திட்டப்பட்டது. வெறும் தூண் போல் அல்லாமல் இயற்கையான மரம் போல் தூணை அமைக்கத் திட்டமிடப்பட்டது. கிளைகள்போல் வளைந்து, மரம் போல் சொரசொரப்பான மேற் தோற்றம் கொண்டதாகவும் இந்தத் தூண் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான 3டி ப்ரோக்ரமை எக்ஸ்ட்ரீ நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் உருவாகினார்கள். அதனடிப்படையில் 3 டி பிரிண்டிங் இயந்திரம் இந்த மரத் தூணை உருவாக்கியுள்ளது. பிரிண்டிங் முனையில் எழுதுகோலுக்குப் பதிலாக கான்கிரீட் உமிழ்வதுபோல் இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டிருக்கும்.
இந்த பிரிண்டிங் இயந்திரம் மூலம் 15 மணி நேரத்தில் 4 மீட்டர் உயரம் கொண்ட மரம் போன்ற தூண் உருவாக்கப்பட்டது. இதற்கு தேவைப்பட்ட தொழிலாளர்களும் மரபான தொழில் நுட்பத்தைக் காட்டிலும் குறைவு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT