Published : 24 Sep 2016 12:28 PM
Last Updated : 24 Sep 2016 12:28 PM
நாங்களும் எங்கள் சித்தப்பாவும் 2011-ம் வருடம் பரம்பரைச் சொத்தைப் பிரித்துக்கொண்டோம். அதில் முதல் இடம் அவருக்குப் போய்விட்டது. பாதைக்கு என 2 செண்ட் இடத்தையும் கூடுதலாக எடுத்துக்கொண்டார். பாகப் பிரிவினை பத்திரத்தில் பாதை குறித்து எந்த விவரமும் இல்லை. இப்போது எங்களுக்குப் பாதை தர மறுக்கிறார். இதற்கு என்ன வழி?
- சங்கர்ராஜ்
பாகப் பிரிவினை பத்திரத்தில் பாதைக்காக எந்த ஒரு உரிமையும் குறிப்பிடப்படாமல் இருந்தால் உங்கள் சித்தப்பாவிடமிருந்து நீங்கள் பாதைக்கான உரிமையைக் கோரச் சட்டத்தில் இடமில்லை. உங்களுடைய பாகத்துக்கு வந்த நிலத்துக்கு நான்கு புறங்களிலும் பாதை இல்லாமல் இருந்தால், வசதியுரிமை பாத்தியப்படி [EASEMENT OF NECESSITY] உங்கள் பாக நிலத்துக்கு நான்கு புறங்களிலும் அமைந்திருக்கும் நிலங்களின் உரிமையாளர்கள் அனைவர் மீதும் நீங்கள் தகுந்த உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றம் உத்தரவிடும் நிலப்பகுதியைப் பாதையாக பயன்படுத்தும் உரிமையைப் பெறலாம்.
நான் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு என் மனைவி பெயரில் வீட்டு மனை வாங்கி வீடுகட்டி குடியிருந்துவருகிறேன். எனக்கு 5 மகள்கள். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.கடைசிப் பெண்ணுக்கு 2012, பிப்ரவரியில் திருமணம் ஆனது. என் மனைவி 2013-ம் ஆண்டில் மறைந்துவிட்டார். தற்போது என் மனைவியின் பெயரில் உள்ள வீட்டை நான் விற்பனை செய்ய என் மகள்கள் அனைவரின் கையெழுத்து அவசியமா அல்லது மனைவியின் நேர் வாரிசு என்ற முறையில் நான் மட்டும் கையெழுத்திட்டு விற்க முடியுமா?
- நடேசன்
உங்கள் மனைவி பெயரில் கிரயம் பெற்ற நிலத்துக்கான உரிமைப் பத்திரத்தில் (கிரயப் பத்திரம்) உங்கள் சுய சம்பாத்தியப் பணத்திலிருந்து உங்கள் மனைவி பெயரில் கிரயம் பெறுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் தற்போது அந்தச் சொத்தை விற்பனை செய்வதற்கு உங்கள் மகள்களின் சம்மதம் தேவையில்லை. நீங்களாகவே விற்பனை செய்துகொள்ள முடியும். அவ்வாறு குறிப்பிடப்படாமல் உங்கள் மனைவியின் சுய சம்பாத்தியப் பணத்திலிருந்து அவர் பெயரில் கிரயம் பெறுவதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தால் உங்கள் மகள்களின் சம்மதம் கண்டிப்பாகத் தேவை. அப்படி இருக்கும்பட்சத்தில் நீங்கள் உங்கள் மகள்களின் சம்மதம் இல்லாமல் அந்தச் சொத்தை விற்பனை செய்ய சட்டத்தில் இடமில்லை.
என்னுடைய அத்தையின் பேரில் (என் தகப்பனாரின் ஒரே தங்கை) 1970 வாக்கில் சில சொத்துகள் வாங்கப்பட்டன. அதில் என் தகப்பனாரின் முதலீடும் உண்டு. என் தகப்பனாருக்குக் குடிப் பழக்கம் உண்டு. எனவே சொத்து முழுவதும் என் அத்தை பேரிலேயே வாங்கப்பட்டன. என் தகப்பனார் தனியார் நிறுவன ஊழியர். என் தந்தையின் போனஸ் பணம், என் அத்தையின் பணம் மற்றும் பரம்பரைச் சொத்து கட்டு குத்தகைப் பணமும் இந்த சொத்துகள் வாங்க முதலீடாகக் கொள்ளப்பட்டன. என் அத்தை அரசு ஊழியர். நாங்களும் எங்கள் அத்தையும் கூட்டுக் குடும்பமாக அடுத்த அடுத்த வீட்டில் வசித்துவந்தோம்.
2000 வாக்கில் அவர்கள் புது வீடு கட்டித் தனியே சென்றுவிட்டார்கள். என் அத்தை 2010 வாக்கில் இறந்துவிட்டார். அத்தை உயில் எதுவும் எழுதவில்லை. அத்தைக்குப் பிறகு அவர்களின் வாரிசுகளே 2014 வாக்கில் அந்தச் சொத்துக்களைப் பிரித்துக்கொண்டார்கள். யாருக்கும் இன்னும் விற்கவில்லை. அத்தை இருக்கும்போதே சொத்து பற்றிப் பேச்சு வரும். அவர்களின் வாரிசுகளுக்கு அதைப் பற்றிய விவரங்கள் நன்கு தெரியும். பணம் கூட்டுப் பணம் என்பதற்குச் சாட்சி உண்டு. தீர்வை எல்லாமே ஆரம்பத்தில் இருந்து என் அத்தையின் பேரிலேயே போடப்பட்டது. நாங்கள் சட்ட ரீதியாக உரிமை கோர முடியுமா?
- ரமேஷ்.எம்
உங்கள் தந்தையின் போனஸ் பணத்தையும், உங்கள் தந்தை மற்றும் அத்தையின் பரம்பரைச் சொத்திலிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுக்குத்தகைப் பணத்தையும் கொண்டுதான் நீங்கள் குறிப்பிட்டுள்ள சொத்துக்கள் அனைத்தும் உங்கள் அத்தையின் பெயரில் கிரயம் பெறப்பட்டன என்பதற்கு ஆதாரங்கள் இருந்தால் நீங்கள் தகுந்த உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து சட்ட ரீதியாக உரிமை கோரலாம்.
எங்கள் தந்தையின் சகோதரிக்குச் சொந்தமாக 5 செண்ட் வீட்டு மனை உள்ளது. அம்மனைக்குச் செல்லத் தற்போது வழி இல்லை. அம்மனையின் முன்புறம் உள்ள இடம் புறம்போக்கு எனக் கூறப்பட்டதால் நாங்கள் வாங்கவில்லை. ஆனால் தற்போது அந்த இடம் வேறு ஒருவர் பெயரில் உள்ளது. அதனால் மனைக்குச் செல்ல வழி இல்லாமல் அம்மனையைப் பயன்படுத்தாத நிலையில் உள்ளோம்.
எனவே அம்மனைக்கு வழி வேண்டும் என்று கேட்கச் சட்டபூர்வமாக உரிமை உள்ளதா? அல்லது மனைக்கு முன்புறம் உள்ள இடம் புறம்போக்கு நிலமாக இருந்து வேறு ஒருவர் பெயரில் அனுபவ பாத்தியம் பெற்றதை ரத்து செய்ய வேண்டும் என்று கோர உரிமை உள்ளதா? அல்லது வேறு ஒருவர் சொந்த இடத்தில் வழி வேண்டும் என்று கேட்கச் சட்டபூர்வமான உரிமை உள்ளதா? வழி இல்லாத மனை / நிலத்துக்கு வழி வேண்டும் என்று கேட்கச் சட்டபூர்வமான உரிமை உள்ளதா?
- ர.வசந்தகுமார், செஞ்சி
உங்களுடைய தந்தையின் சகோதரிக்குச் சொந்தமான வீட்டு மனைக்கு நான்கு புறங்களிலும் பாதை இல்லாமல் இருந்தால், வசதியுரிமை பாத்தியப்படி [Easement of necessity] மேற்படி வீட்டு மனையின் நான்கு புறங்களிலும் அமைந்திருக்கும் நிலங்களின் உரிமையாளர்கள் அனைவர் மீதும் தகுந்த உரிமையியல் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றம் உத்தரவிடும் நிலப்பகுதியைப் பாதையாக உபயோகிக்கும் உரிமையைப் பெறலாம்.
என் மனைவியின் பாட்டிக்கு இரண்டு பிள்ளைகள். என் மாமியார் மற்றும் அவரது தம்பி. பாட்டி தன் சொத்துகளை யாருக்கும் பாகம் பிரித்துக் கொடுக்காமல் மரணம் அடைந்தார். அதை என் மாமியாரும் அவருடைய தம்பியும் (இடம் மற்றும் வீடு) பாகம் பிரித்துக்கொண்டனர். இப்போது என் மாமியார் சிறிது இடத்தை விற்றுப் பணத்தை என் மனைவியின் சகோதரருக்குக் கொடுத்துள்ளார். என் மனைவியிடம் எந்தக் கையெழுத்தும் பெறாமல் தாத்தா வழிச் சொத்தை விற்கவோ, தானமாகக் கொடுக்கவோ என் மாமியாருக்கு உரிமை உண்டா? இது சட்டப்படி செல்லுமா?
- ஸ்ரீ குமார்
உங்கள் மனைவியின் சம்மதம் இல்லாமல் பூர்வீக சொத்தை விற்கவோ அல்லது தானமாக கொடுக்கவோ உங்கள் மாமியாருக்குச் சட்டப்படி உரிமை இல்லை. ஆகையால் உங்கள் மனைவியின் சம்மதம் இல்லாமல் பூர்வீக சொத்தைத் தன் மகனுக்கு (அதாவது உங்கள் மனைவியின் சகோதரருக்கு) தன்னிச்சையாகச் சிறிது பாகம் பிரித்துக் கொடுத்து, பின்பு அதை விற்பனை செய்தது சட்டப்படி செல்லாது.
வீடு, மனை வாங்குவதில், விற்பதில் உள்ள சட்டம் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு/கேள்விகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.பி.விஸ்வநாதன் பதிலளிக்கிறார். அஞ்சலில் அனுப்ப: சொந்த வீடு, தி இந்து (தமிழ்), கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600002 கேள்விகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: sonthaveedu@thehindutamil.co.in |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT