Published : 18 Mar 2017 11:11 AM
Last Updated : 18 Mar 2017 11:11 AM
தற்போது, இந்தியாவின் நகர்ப்புற மையங்களில், 1.88 கோடி வீடுகளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. இதில், 1.5 கோடி வீடுகள் குறைவான வருவாய் பிரிவில் (Low Income Group) தேவைப்படுகிறது. பெரிய அளவிலான பட்ஜெட் குடியிருப்பு திட்டங்கள் இந்த ஆகப்பெரிய பற்றாக்குறையைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். நீண்ட காலமாகக் காத்திருந்த மலிவு விலை குடியிருப்புகளுக்கான ‘உள்கட்டமைப்புத் தகுதியை’அரசு தற்போதைய பட்ஜெட்டில் வழங்கியிருக்கிறது. இதனால், நடுத்தர மற்றும் குறைவான பிரிவுகளில் வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
நேர்மறையான மாற்றங்கள்
இந்த அறிவிப்புடன் அந்நிய நேரடி முதலீட்டைத் தாராளமயப்படுத்தியிருப்பதும் கட்டுநர்களுக்குப் பல வகைகளில் குறைவான வட்டி விகிதத்தில் நிதி கிடைக்க வழிவகுத்திருக்கிறது. ஜெஎல்எல் நிறுவனம் 2016-ம் ஆண்டுக்கான உலகளாவிய ரியல் எஸ்டேட் ஆய்வொன்றை நடத்தியது. இதில் இந்தியாவின் முதன்மை நகரங்கள் தரவரிசையில் 40-வது இடத்திலிருந்து 36-வது இடத்துக்கு முன்னேறியிருக்கின்றன.
“முதலீட்டாளர் களுக்குச் சாதகமான சந்தை உருவாகும் அறிகுறிகள் தெரிகின்றன. இந்தக் காரணிகள் கட்டுநர்களை மலிவு விலை வீடுகளில் முதலீடு செய்ய ஊக்கப்படுத்தும். இதனால் 2022க்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடைவது எளிமையாகிறது. இதில் வாய்ப்புகள் அதிகமாகவிருப்பதால் நிறையப் பெருநிறுவனங்களும் சந்தையில் நுழையவிருக்கின்றன” என்கிறார் ஜெஎல்எல் தேசிய தலைவர் ஏ. சங்கர்.
ஐசிஆர்ஏ ஆய்வின்படி, கடந்த ஆண்டு மார்ச் 31, 2016 வரை, மலிவு விலை வீடுகளின் மொத்தக் கடன் 95,700 கோடியாக இருக்கிறது. இது கடந்த 2016 நிதியாண்டில் 28 சதவீத வளர்ச்சியடைந்திருப்பதைக் காட்டுகிறது. இதனால், இந்தப் பிரிவில் வாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
“இப்போது வழங்கப்பட்டிருக்கும் உள்கட்டமைப்புத் தகுதி நிதிநிலைச் சூழலை மேம்படுத்தியிருக்கிறது. இது நிதி நிறுவனங்களையும், வங்கிகளையும் குறைவான வட்டி விகிதத்தில் கடன்களை வழங்க முன்னுரிமை கொடுக்கும்படி செய்திருக்கிறது. அத்துடன், வெளிநாட்டிலிருந்தும் வணிக கடனைப் பெறமுடியும். இதனால் துறையில் நிதிப்புழக்கம் அதிகரித்து இந்தப் பிரிவில் திட்டங்களைத் தொடங்க கட்டுநர்களை ஊக்குவிக்கும்” என்கிறார் நவீன்’ஸ் நிர்வாக இயக்குநர் டாக்டர்.ஆர். குமார்.
அறிவிப்பால் நன்மைகள்
இந்த ‘உள்கட்டமைப்புத் தகுதி’ அறிவிப்பு பல நன்மைகளைத் துறைக்கு வழங்கியிருக்கிறது. கட்டுநர்களுக்கு மட்டுமல்லாமல் நுகர்வோருக்கும் இதனால் நிறைய நன்மைகள் கிடைக்கவிருக்கின்றன. “மலிவு விலை குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் சலுகைகளால் இந்தப்பிரிவில் ‘கிரேட் ஏ’ கட்டுநர்களின் அதிகமான பங்களிப்பை எதிர்பார்க்கலாம். இதனால், வீடு வாங்குபவர்களுக்குத் தரமான மலிவு விலை வீடுகள் கிடைக்கப்போகின்றன” என்கிறார் பிராப்அர்பன் நிறுவனர் மிர் ஜாபர் அலி. இதில் கட்டுநர்கள் தரப்பிலும் நன்மைகளும் இருக்கின்றன. கட்டுமான காலத்தை மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகளாகத் திருத்தம் செய்திருப்பது அதில் ஒன்று.
இதனால் கட்டுநர்கள் பணப்புழக்தைச் சீராக நிர்வகிக்கவும், இருப்பையும் விற்பனையையும் சமநிலையுடன் நிர்வகிக்கவும் முடியும். இன்னொருபுறம், வீடு வாங்குபவர்கள் தரமான கட்டுமானத்தை எதிர்பார்க்கலாம். அத்துடன், கட்டுநர்களுக்கு அரசின் சலுகைகளும் வரிச் சலுகைகளும் நிறுவன நிதியும் கிடைக்கவழிசெய்கிறது.
இடம் முக்கியம்
வரும்காலத்தில், கார்பெட் பகுதியான 30 சதுர மீட்டர் மற்றும் 60 சதுர மீட்டர் இந்தப் பிரிவின்கீழ் கொண்டுவரப்படும். “நகரசபை எல்லைகளுக்குள் வரும் நான்கு பெருநகரங்களில் 30 சதுர மீட்டர் வரம்பாகவும், நாட்டின் மற்ற பகுதிகளில் 60 சதுர மீட்டர் வரம்பாகவும் இருக்கும். இதனால் வீடுகள் 25-35 சதவீதம் பெரிதாக இருக்கும். இந்த அம்சம் நுகர்வோரை அதிக அளவில் கவரும்” என்கிறார் விஜயசாந்தி பில்டர்ஸ் திட்ட இயக்குநர் தர்ஷன் ஜெயின்.
“கடந்த ஆண்டு பட்ஜெட்டில், நான்கு மெட்ரோ நகரங்களில் 300 சதுர அடியில் கட்டப்படும் குடியிருப்புத் திட்டங்களுக்கும், மற்ற நகரங்களில் 600 சதுர அடியில் கட்டப்படும் வீடுகளுக்கும் 100 சதவீதம் லாபம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு பட்ஜெட்டில், இந்தப் பயன் கார்பெட் பகுதிக்கு மட்டும்தான் பொருந்தும் என்றும், கட்டுமான பகுதிக்குப் பொருந்தாது என்று அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது” என்கிறார் மிர் ஜாபர் அலி.
சென்னை சந்தை
சென்னையில், மலிவு விலை குடியிருப்புப் பிரிவுகள் ஒஎம்ஆர், ஜிஎஸ்டி, நகரின் மேற்கு பகுதிளான அம்பத்தூர், கொரட்டூர், குளத்தூர், கூடுவாஞ்சேரி, செம்பரம்பாக்கம் போன்ற பகுதிகளில் அமையவிருக்கிறது. “மற்ற பகுதிகளில் வாடகை வருவாய் 2.5 -5 சதவீதமாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்தப் பகுதிகளில் வருவாய் 4 சதவீதமாகக் கடந்த நான்கைந்து ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது” என்கிறார் கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் தெற்கு மற்றும் கிழக்குப் பிரிவு வர்த்தக தலைவர் ஸ்ரீராம்.
மகாபலிபுரம், சிங்கபெருமாள் கோயில், வெங்கம்பாக்கம், பெரும்பதூர், ஒரகடம், படப்பை, ஊரப்பாக்கம் போன்ற இடங்களில் 450 சதுர அடியிலிருந்து 815 சதுரஅடி வரை குடியிருப்பு பகுதிகள் வரவிருக்கின்றன. இவற்றுக்கு ரூ. 11 லட்சத்திலிருந்து 19 லட்சம் வரை விலை நிர்ணயம்செய்யப்பட்டிருக்கிறது. பிராப்அர்பன் தரவுகள்படி, ஜூலை 2016 -லிருந்து தற்போதுவரை தொடங்கப்பட்டிருக்கும் திட்டங்களில், 51 சதவீதம் நடுத்தர பிரிவு வீடுகள் (ரூ.40-80 லட்சம்), 24 சதவீதம் மலிவு விலை வீடுகள் (ரூ.40 லட்சத்துக்குள்), 21 சதவீதம் ஆடம்பர பிரிவு வீடுகளாக (ரூ. 80 லட்சம் - 1.5 கோடி வரை) இருக்கின்றன.
இந்தப் பிரிவு வீடுகளில் விநியோகம் சீராகவிருந்தாலும், உள்கட்டமைப்பு வசதிகள் சவாலானதாகவே இருக்கின்றன. “வங்கி ஒப்புக்கொள்ளக்கூடிய உள்ளக்கட்டமைப்பு, நிலத்தைக் கையகப்படுத்துவதிலுள்ள சிக்கல்கள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் போன்றவை தொடர்ந்து கட்டுநர்களுக்குச் சவாலாக இருக்கின்றன” என்கிறார் தர்ஷன் ஜெயின். இந்தத்துறையின் கொள்கை கட்டமைப்பில் ஒருங்கிணைப்பும், நியாயமான விலை நிர்ணயத்துக்கும், போட்டிக்கும் அமைப்புச்சார்ந்த செயல்படுமுறை தேவை.
சுருக்கமாகத் தமிழில்: என். கௌரி
© தி இந்து ஆங்கிலம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT