Published : 18 Feb 2017 10:48 AM
Last Updated : 18 Feb 2017 10:48 AM

இடமோ குறைவு, பொருளோ அதிகம், எப்படி?

மிகச் சிறிய அடுக்குமாடிக் குடியிருப்பாயினும் சரி, மாட மாளிகையானாலும் சரி இடம் போதவில்லை என்பது அனைவரும் அங்கலாய்க்கும் ஒரு விஷயம். நம்முடைய பொருட்களைச் சிறு இடத்துக்குள் அடைப்பது என்பது சவாலான காரியம்தான். சிற்சில மாற்றங்கள் செய்து புத்திசாலித்தனமான அறைக்கலன்களைத் தேர்ந்தெடுத்து உள் அலங்காரம் செய்தால் சிறிய இடத்திலும் சிறப்பாக வாழலாம்.

முதலில் வீட்டில் தேவையற்ற பொருட்கள் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். தேவையான பொருட்களை மட்டும் வைத்துக்கொண்டு தேவையற்ற பொருட்களைத் தூர வீசிவிட்டால் இடப் பற்றாக்குறையை முக்கால்வாசி தீர்த்துவிடலாம். அனைத்து அறைக்கலன்களிலும் டிராயர்கள் இருக்குமாறு பார்த்து வாங்கலாம். எடுத்துக்காட்டாக வரவேற்பறையில் போடப்படும் டீப்பாயின் அடியில் டிராயர்கள் உள்ளன போல் வாங்கினால் அவற்றில் முக்கியமான புத்தகங்கள், பேனா, கத்திரி போன்ற பொருட்கள், அவசரத்திற்கு உதவும் கால்குலேட்டர், டார்ச் போன்றவற்றை வைத்துக்கொள்ளலாம். படுக்கையறையில் அமைக்கப்படும் கட்டில்களின் கீழ் சேமிக்கும் வசதி கொண்ட பிரிப்பான்கள் இருந்தால் அவற்றைத் துணிமணிகளை வைக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எளிய வண்ணங்கள்

எளிமையே என்றும் அழகு. ஆடம்பரமான உள்அலங்காரத்தைவிட எளிய தோற்றம் அறைகளின் அளவை விஸ்தரித்துக் காட்டும். அடர் வண்ணங்கள் அறையின் குளுமையைக் கூட்டினாலும் சற்றே இருண்ட தோற்றத்தைத் தந்து அறை சிறியதாய் இருப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தும். மெல்லிய வெளிர் வண்ணங்கள் அறைக்குப் பளீர் தோற்றத்தைத் தருவதுடன் பெரியதாக்கிக் காட்டும். ஆக அறைகள் பெரியதாக தோற்றமளிக்க வேண்டுமெனில் வெள்ளை, கிரே,பேஜ் போன்ற வண்ணங்களைப் பூசலாம். சுவர்களின் பயன்பாட்டை அதிகப்படுத்தினால் அதிக இடத்தைச் சேமிக்கலாம்.

புத்தகங்கள், ஷோபீஸ்கள், ஓவியங்கள் போன்றவற்றைச் சுவரில் அமைத்தால் அறைகளின் எழிலும் கூடும் இடமும் கூடும். பிரேம் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை சுவரில் உயரமாகப் பொருத்தினால் உயர்ந்த சீலிங் போன்ற தோற்றத்தைத் தரும். கண்ணாடிகள் ஒளியைப் பிரதிபலிப்பதால் அறையின் ஒரு பக்கமாக அவற்றை அமைத்தால் அறை பரந்து விரிந்தாற்போலத் தோற்றமளிக்கும். அறைகளினுள்ளே இயற்கையாகவே சூரிய ஒளி அதிகம் வருவது போல் ஜன்னல்கள் இருந்தால் வீடு சற்றுப் பெரிதாகத் தெரியும்.

விருந்தினரை வரவேற்பதும் மற்றும் குடும்பத்தினர், குழந்தைகள் தினமும் அலுவலகம் மற்றும் பள்ளிக்குக் கிளம்பிச் செல்லும் இடமான வீட்டின் முகப்பு, நுழையும் பாதை போன்றவற்றை விசாலமாக வைத்திருக்கவே அனைவரும் விரும்புவர். அங்கு காலணிகள், குடைகள் போன்றவற்றை வைக்கலாம் அமர்ந்து அணிய தோதாக பெஞ்ச், அதன் கீழ் காலணிகள் ஹெல்மெட் வைக்குமாறு அமைத்தால் அழகாகவும் இருக்கும், பயனுள்ளதாகவும் இருக்கும்.

தொலைக்காட்சிப் பெட்டி அமைப்பு

வரவேற்பறையில் பிரதானமாக தொலைக்காட்சிப் பெட்டியும் அதன் அருகே குறுந்தகடுகளும் இறைந்து கிடப்பது அனைவர் இடத்திலும் கண்கூடு. சுவரில் மாட்டுவது போல் இருக்கும் எல்சிடி மற்றும் வீடியோ கேம்ஸ் சிடிக்கள் ஆர்கனைசர் அமைத்தால் அறைக்கு ஒரு நவீனத் தோற்றம் கிடைக்கும். சோபா போன்ற அறைக்கலன்கள் வாங்கும் நமது டாம்பீகத்தைப் பறைசாற்றும் வண்ணம் பெரியதாய் வாங்காமல் தேவைக்கேற்ற அளவில் வாங்கலாம். சந்தையில் இப்போது படுக்கை மற்றும் சோபா என இரு விதப் பயன்பாடுகளைகளைக் கொண்ட அறைக்கலன்கள் அதிகம் உள்ளன.

குழந்தைகளுக்கு எனத் தனி அறை அமைத்திருப்போமாயின் அதனை அவர்கள் தூங்க மட்டும் பயன்படுத்தாமல் விளையாட, படிக்க, பொழுதுபோக்க (ஓவியம் வரைதல்) போன்றவற்றிற்கும் பயன்படுத்திக்கொண்டால் பல வேலைகள் ஒரே அறையில் முடிந்துவிடும் சௌகரியம் கிடைத்துவிடுகிறது. இருவருக்கெனத் தற்போது ஒன்றின் மீது இன்னொன்று அமைந்தாற்போல தற்போது படுக்கைகள் கிடைக்கின்றன. சிலர் வீட்டிலேயே தனியாக அலுவல் அறையை அமைத்திருப்பார்கள். அதிலும் தேவையற்றவையைக் கண்டறிந்து சுருக்கமாக உபயோகிக்கலாம். உதாரணமாகக் கணினிக்குப் பதில் மடிக்கணினியை உபயோகிக்கலாம். ஏராளமான டெஸ்க் ஆர்கனைசர்கள் மற்றும் ஃபைல் ஆர்கனைசர்கள் இப்போது புதுப்புது மாதிரிகளில் வந்த வண்ணம் உள்ளன. அவற்றைப்பயன்படுத்தலாம்.

சமையலறையின் சில மாயங்கள்

வீடு சிறியது என்ற யோசனை பலருக்குப் பிடித்திருந்தாலும்கூடச் சமையலறை சிறியது என்பதை அவர்களால் ஒப்புக்கொள்ள இயலாது. ஆனால் சிறிது முன் யோசனையும் திட்டமிடலும் இணைந்தால் சிறிய சமையலறையிலும் மாயங்கள் நிகழ்த்தலாம். சமையலறையின் ஒவ்வொரு சிறு பகுதியையும் பயன்படுத்த வேண்டும். கத்திகள், பாத்திரங்கள் போன்றவற்றைச் சுவரில் மாட்ட முடியுமெனில் மாட்டிவிட வேண்டும். சிங்க் இன் கீழ்ப்பகுதியில் பாத்திரம் துலக்கும் பொருட்களை சேமிக்கலாம்.

தேவைக்கேற்ப சிறிய அளவு சாமான்கள் வாங்கினால் இடத்தை அடைக்காமலிருக்கும். திட்டமிட்டு பொருட்களைச் சமையலறை மேடையின் கீழ் அடுக்கினால் தோற்றமும் அழகாய் இருக்கும். வேலை பாக்க சுலபமாகவும், வசதியாகவும் அதே நேரம் பயன்பாட்டுத்தனமை மிக்கதாகவும் பொருட்களைச் சேமித்து வீட்டிலேயே அதிகம் புழங்கப்படும் சமையலறையைப் பயன்படுத்த வேண்டும்.

காலையில் விழித்தவுடன் முதலிலும் இரவில் படுக்கும் முன் கடைசியிலும் என நாளின் தொடக்கத்தையும் முடிவையும் தரும் குளியலறையில் நாம் சேகரித்து வைக்க வேண்டிய பொருட்கள் எண்ணிலடங்கா. துண்டுகள், ரேசர், டிரையர், சோப்பு, ஷாம்பூ, இத்யாதி. டிரையர் போன்றவற்றைச் சுவரில் மாட்டலாம். டாய்லெட்டின் மேல் சிறிய அலமாரி அமைத்து சோப், ஷாம்பூ போன்றவற்றை அடுக்கலாம். துண்டுகளைக் கதவின் பின்புறம் தொங்கவிடலாம்.

படுக்கையறையின் அளவைக் கணக்கில் கொண்டு கட்டிலின் அளவைத் தேர்வு செய்ய வேண்டும். கட்டிலின் கீழே சேமிக்கவும் தலைப்பகுதியில் அழகுப் பொருட்கள் அடுக்கும் விதத்தில் அமைத்துக்கொண்டால் ஒரே இடத்தில் இரு காரியங்கள் பூர்த்தியாகிவிடும். கட்டிலின் மேலே உள்ள சுவரில் மிக அழகிய ஓவியம் அல்லது டெகார் அமைத்துவிட்டால் அறைக்கு வருவோரின் கவனத்தை ஈர்த்து அறையின் சிறிய அளவை மறைத்துவிடும்.

அறை சிறியதாய் இருந்தாலும்கூட கண்ணைக் கவரும் விதத்தில் திரைச்சீலைகள் அமைத்து அறையைக் கூடுதல் கவனம் பெற வைக்கலாம். சிறிய படுக்கையறையும் வசதியானதாய்த் திகழ்ந்து மனதைக் கவரும். சந்தையில் இப்போது சிறு சிறு கூடைகள் அழகிய வடிவில் கிடைக்கின்றன. அவற்றில் சிறு சிறு பொருட்களைச் சேமித்து வைத்தால் பார்க்கவும் அழகாக இருக்கும் இடமும் சேமிப்பாகும்.

வீடு எத்தனை சிறியதாய் இருந்தாலும் சில செடிகள் வைக்கத் தவறிவிடாதீர்கள். பச்சைத் தாவரம் கண்ணுக்கு விருந்து. நகரமயமாதலின் அசுர வளர்ச்சி, வீடுகளின் தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் வீடுகளின் அளவுகள் சுருங்கிக் கொண்டேபோகின்றன. அதனால் குறைவான இடத்தில் நிறைவான வாழ்க்கை வாழ வேண்டுமெனில் இது போல் சில மாற்றங்கள் செய்து வீடு எனும் அமைதிப் பூங்காவில் இளைப்பாறலாம். வீடு என்பது தானே நாம் நாள் முழுதும் ஓடியாடி உழைத்த பின் ஓய்வடுக்குமிடம் அதனைச் சிறப்பாகப் பேணுவதில் அனைவருக்கும் விருப்பம் அதிகம் இருக்கத்தானே செய்யும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x