Published : 02 Jan 2016 11:32 AM
Last Updated : 02 Jan 2016 11:32 AM
பாலங்கள் தொடர்பாக நம் எல்லோருக்கும் பசுமையான நினைவுகள் இருக்கும். பாலத்தில் பயணிக்கும்போது நமக்குப் புதுவிதமான அனுபவத்தை அளிக்கும். பாலம் குறித்த இம்மாதிரியான நினைவுகள் ஒரு புறம் இருக்கட்டும். இன்றைய விரைவான வாழ்க்கை பாலம் இல்லாமல் சாத்தியமா? சாலை மேம்பாலங்கள், ஆற்றுப் பாலங்கள், ரயில்வே பாலங்கள் எனப் பலவிதமான பாலங்களைப் பயன்படுத்திப் பழகிவிட்டதால் நமக்குப் பாலத்தின் முக்கியத்துவத்தைச் சட்டெனப் பிரித்தறிய முடியாது. கடந்துபோக வாய்ப்பில்லாதபோதுதான் பாலங்களின் முக்கியத்துவம் நமக்குத் தெரிய வரும். ஆனால் பாலங்கள்தான் நகரின் மிக முக்கிய மான அடையாளம். அடையாளம் மட்டுமல்ல ஆதாரமும்கூட.
உலகின் பழமையான நகரங்கள் அனைத்துமே ஆற்றங்கரைகளில் அமைந்தவை. ஆகையால் அந்த நகரங்களின் உருவாக்கத்தில் பாலங்களின் பங்கும் முக்கியமானதாக இருந்திருக்கும் என்று தனித்துச் சொல்ல வேண்டியதில்லை.
ஓடைகளின் குறுக்கே நீண்ட மரங்கள், ஆற்றுக்குக் குறுக்கே நெருக்கிக்கட்டிய தோணிகள், கயிறுகளால் கட்டி தொங்கவிடப்பட்ட மரமேடைகள் என ஆதிகாலத்திலிருந்தே பாலங்களை மனிதர்கள் பயனபடுத்திவந்திருக்கிறார்கள். ஆனால் பொறியியல் அடிப்படையில் நிலையான பாலங்களை முதலில் ரோமானியர்களே கட்டத் தொடங்கினார்கள்.
ரோம் நகரத்தின் உருவாக்கத்தில் டைபெர் நதியில் கட்டப்பட்ட பாலம் முக்கியமானது. ரோமானியர்கள், டைபெர் நதியைத் தெய்வமாக வழிபட்டவர்கள். நதியின் குறுக்கே பாலம் கட்டுவது தெய்வத்தின் கோபத்தை மூட்டிவிடக்கூடும் என அஞ்சினார்கள். எனவே அவர்கள் பாலம் கட்டுவதையும் சமயத் தொடர்புடைய செயலாகவே கருதினார்கள். பாலம் கட்டுபவர்களை முதன்மைப் புரோகிதர்களாகக் கருதி மதிப்பளித்தார்கள். மிகச் சிறப்பாகப் பாலம் கட்டுபவர் என்ற பொருளைக் குறிக்கும் பான்டிபெக்ஸ் மேக்ஸிமஸ் (Pontifex Maximus) என்ற வார்த்தையே ரோம் நகரத்தின் முதன்மைப் புரோகிதரையும் குறிக்கப் பயன்பட்டது. இன்றைக்கும் ரோம் நகரத்தில் வசிக்கும் போப் அவர்களைக் குறிக்க அந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுவருகிறது. போப் ஏதேனும் கட்டிடங்களைத் திறந்துவைக்கும்போது அவரை பான்டிபெக்ஸ் மேக்ஸிமஸ் என்று குறிப்பிடும் வழக்கமும் இருக்கிறது.
பாலங்களைக் கட்டும் தொழில்நுட்பம் எல்லாக் காலத்திலும் கட்டிடப் பொறியியலோடு இணைந்தே வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது. ரோமானியர்கள் தங்களது கட்டடங்களில் பயன்படுத்திய அதே அரைவட்ட வடிவமைப்பைப் பாலங்களிலும் பயன்படுத்தினார்கள். ஒட்டகத்தின் முதுகைப் போல வில்வடிவத்தில் இந்த பாலங்களே ஆற்றின் அழகை ரசிக்க வாய்ப்பாக இருக்கின்றன. எனவே இன்றைக்கும் பாலங்கள் கட்டும்போது அரைவட்ட வடிவ அமைப்பு தொடர்கிறது. ரோமானியப் பேரரசு வீழ்ந்த பிறகு ஐரோப்பியக் கண்டத்தில் ஆயிரம் ஆண்டு காலத்திற்குப் பாலங்கள் கட்டுவதையே மறந்திருந்தார்கள். இத்தாலியில் வெனீஸ் நகரத்தில் கால்வாய்களின் மீது பாலங்களைக் கட்ட ஆரம்பித்த பிறகு மீண்டும் ஐரோப்பாவில் பாலங்கள் கட்டும் படலம் தொடங்கியது.
லியனார்டோ டா வின்சி மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் பலனாக, ஒரு பாலத்தில் செயல்படும் பல்வேறு விசைகளைப் பற்றிய விவரங்கள் தெரிய வந்தன. இதன் பிறகு பாலங்களைக் கட்டுவது இன்னும் எளிதானது. இரும்புக் கம்பிகளால் தாங்கப்படும் பாலங்கள் பரவலாகின. வார்ப்பு இரும்பு தொழில்நுட்பத்தின் அறிமுகத்திற்குப் பிறகு இரும்பு உத்தரப் பாலங்கள் கட்டப்பட்டன. தற்போது பாலங்களைக் கட்டுவதில் கான்கிரீட் தொழில்நுட்பமே முதன்மை வகிக்கிறது.
ஒரு பாலம் எந்தப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டது, எந்த வடிவத்தில் கட்டப்பட்டது என்பதையெல்லாம்விட அது எந்த நகரத்தில், அதிலும் அந்நகரத்தின் எந்த இடத்தில் கட்டப்பட்டது என்பதாலேயே அதற்கு சிறப்பு சேர்கிறது.
சென்னை கடந்த முந்நூறு ஆண்டுகளில் தன்னுடைய அண்மைக் கிராமங்களை இணைத்துக்கொண்டு மாநகரமாக வளர்ச்சியடைந்தபோது பாலங்களின் எண்ணிக்கையும் பெருகி வந்திருக்கிறது. சென்னைக்குள் ஓடும் அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றைப் பாலங்களின் உதவியோடுதான் தினமும் கடந்துகொண்டிருக்கிறோம்.
சென்னையில் எத்தனை பாலங்கள் இருந்தாலும் நேப்பியர் பாலத்திற்குத்தான் எப்போதுமே முதல்மரியாதை. இந்தப் பாலம் லார்ட் நேப்பியர் மெட்ராஸ் ஆளுநராக இருந்தபோது 1869ம் ஆண்டு கட்டப்பட்டது. மெரினாவையும் புனித ஜார்ஜ் கோட்டையையும் இணைக்கிற வகையில 149 மீட்டர் நீளத்தில் ஆறு வளைவுகளோடு இந்தப் பாலம் கட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பாலம் மிகப் பழமையான பாலம். அதன் கூடுதல் மதிப்புக்கு மேலும் ஒரு காரணம், கோட்டைக்குச் செல்லும் வழியை இணைப்பது எனலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT