Published : 08 Apr 2017 10:12 AM
Last Updated : 08 Apr 2017 10:12 AM
வீட்டுக் கடன் விளம்பரம் தருகிறார்கள். ஆனால் கடன் வேண்டி விண்ணப்பிக்கும்போது பல ஆவணங்கள் கேட்டு அலையவிடுகிறார்கள் எனப் பலர் புலம்புவதைக் கேட்டிருப்பீர்கள்.
வங்கியைக் குறை சொல்வதற்கு முன்னால் வீட்டுக் கடனுக்காக வங்கிகளை அணுகும்போது, நாம் எந்த அளவுக்குத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது. இதில் தெளிவாக இருந்தால் வீட்டுக் கடன் பெறுவதில் கஷ்டம் குறையும்.
வீட்டுக் கடன் பெற வயதுத் தகுதிகளை வங்கிகள் வரையறுக்கலாம். இவ்வளவு வருமானம் இருந்தால் அதிகபட்சம் இவ்வளவு வீட்டுக் கடன்தான் அளிக்க முடியும் என்பதுபோல் வங்கிகள் எல்லைகளை வகுத்திருக்கும். வங்கிக்கு வங்கி இந்த அளவீடுகள் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, இதை முதலில் தெரிந்துகொண்டு பிறகு விண்ணப்பத்தை வாங்குங்கள்.
உங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பத்தையும், அது தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றைச் சரிபார்க்க கட்டணம் வசூலிக்கிறார்கள். ‘புராசஸஸிங் கட்டணம் (Processing Fees)’ எனப்படும் இது நீங்கள் கேட்கும் கடன் தொகையில் 0.25 சதவிகிதத்திலிருந்து 1 சதவிகிதம் வரை இருக்கும்.
ஜவுளிக் கடைகள் தள்ளுபடி அளிப்பது போல எப்போதோ ஒரு சமயம் சில வங்கிகள் குறிப்பிட்ட காலத்துக்கு இந்தக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்கின்றன. மிகச் சில வங்கிகள் வீட்டுக் கடன் ஒப்புதல் செய்யப்பட்டால் இந்தக் கட்டணத்தைத் திருப்பி அளித்துவிடுகின்றன (அதாவது தொகை அட்ஜஸ்ட் செய்யப்படும்) என்றாலும் பொதுவாக இந்தக் கட்டணம் திருப்பி அளிக்கப்படுவதில்லை. நீங்கள் கேட்கும் கடன் தொகையை வங்கி அளிக்கும் என்ற கட்டாயம் இல்லை. வேறென்னென்ன கடன் வைத்திருக்கிறீர்கள்? மாதாமாதம் நீங்கள் செலுத்தும் தவணைகள் என்ன? இந்தத் தகவல்களைத் தயாராக வைத்திருங்கள்.
தவிர, உங்கள் (சேமிப்பு) வங்கிக் கணக்கின் `சரித்திரம்' ஆராயப்படும். வங்கிக் கணக்கில் சராசரியாக எவ்வளவு பாலன்ஸ் வைத்திருக்கிரீர்கள்? நீங்கள் வழங்கிய காசோலைகள் ‘போதிய பணமில்லை’ என்று திருப்பி அனுப்பப்பட்டனவா? உங்கள் கடன் அட்டையை ஒழுங்காகப் பயன்படுத்தியிருக்கிறீர்களா? நீங்கள் வருமான வரி கட்டுபவர்களாக இருந்தால் (அப்படியில்லையென்றால் அதிகத் தொகைக்குக் கடன் தரமாட்டார்கள்) கடந்த மூன்று வருட இன்கம் டாக்ஸ் ரிட்டர்ன்களின் பிரதிகளை அளிக்க வேண்டும்.
வீடு கட்டும் நிலம், வாங்கத் தகுந்தது என்பது குறித்து (அதாவது நீங்கள் வீட்டை வாங்கும் நபருக்கு அந்த நிலத்தை விற்கும் தகுதி உண்டு என்பது குறித்து) வழக்கறிஞர் ஒருவர் உறுதி அளிக்க வேண்டும். யாரோ ஒரு வழக்கறிஞர் இல்லை, வங்கி தனக்கென வைத்திருக்கும், வழக்கறிஞர்கள் குழுவிலிருந்து ஒருவரிடமிருந்துதான் கருத்து (லீகல் ஒபினியன்) பெற்று வங்கிக்கு அளிக்க வேண்டும்.
நீங்கள் வாங்கும் நிலம் அல்லது வீட்டுக்கு முப்பது வருட வில்லங்கச் சான்றிதழைப் (Encumbrance Certificate), பதிவுத் துறைக்கு விண்ணப்பித்து வங்கிக்கு அளிக்க வேண்டும். பெரும்பாலும் ஒருவரது ஜாமீன் தேவைப்படும். அப்படி ஜாமீன் அளிப்பவரின் வருமானமும் பலவிதங்களில் சரிபார்க்கப்படும். வீடு உங்களுடையதுதான் என்றாலும் வீட்டுக்கடன் வழங்கிய வங்கி அதை இன்ஷ்யூர் செய்து அதற்கான பிரிமீயத்தை மறக்காமல் உங்களிடமிருந்து வசூலித்துக் கொள்ளும்.
வங்கிக்கென்றே மதிப்பீட்டாளர்கள் உண்டு. அவர்களில் ஒருவரது மதிப்பீட்டின் அடிப்படையில்தான் கடன் தொகையை வங்கி நிச்சயிக்கும். கணக்கில் வராத தொகையை (கறுப்புப் பணம்) நிலம் அல்லது வீட்டை விற்பவருக்கு அளிக்க வேண்டாம். அது சட்டமீறல் என்பதோடு ஆவணத்தில் தொகை குறைவாகக் குறிப்பிடுவதால் வங்கி அளிக்கும் கடன் தொகையும் குறைந்துவிடும்.
வங்கிக்கடனை மட்டுமே முழுவதுமாக நம்பி நீங்கள் வீடோ ஃப்ளாட்டோ வாங்கிவிட முடியாது. 10-லிருந்து 20 சதவிகிதம் தொகையை நீங்கள் கைலிருந்து கட்டியாக வேண்டும். சில வங்கிகளில் உங்கள் பங்கை (இதை `மார்ஜின் மணி' என்கின்றனர்) முதலில் கட்டிய பிறகுதான் கடனை விநியோகிப்போம் என்பார்கள். பல வங்கிகளில், விற்பவருக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு தவணையிலும் 10-லிருந்து 20 சதவிகிதம் தொகையை நீங்கள் கொடுக்க, பாக்கியை வங்கி அளிக்கும்.
வீட்டுக் கடனை நீங்கள் அடைக்கும் வரை ஒரிஜினல் விற்பனைப் பத்திரம் வங்கியில் இருக்கும். எனவே, தொடக்கத்திலேயே இன்னொரு சான்றிதழ் பெற்ற பத்திரத்தைப் (Certified true copy) பெற்றுக்கொள்வது நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT