Last Updated : 20 May, 2017 11:13 AM

 

Published : 20 May 2017 11:13 AM
Last Updated : 20 May 2017 11:13 AM

சீக்கிரமே வீட்டுக் கடனை அடைப்பது சிறந்த முடிவா?

வங்கியில் வீட்டுக் கடன் வாங்குகிறீர்கள். பெரும்பாலும் தொடக்கத்தில் மாதத் தவணை என்பது கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கும். ஏற்கெனவே இருக்கும் செலவுகளுடன் இதுவும் பெரிய செலவாக நம் பட்ஜெட்டில் துண்டு விழச் செய்யும். சில வருடங்களுக்குப் பிறகு, இது இயல்பாகிவிடும். மேலும் சில வருடங்களுக்குப் பிறகு நம் ஊதிய உயர்வு போன்ற காரணங்களால் குறிப்பிட்ட மாதத் தவணைகளைவிட சிறிது அதிகமாகவே கட்ட முடியும் என்கிற நிலை ஏற்படும். ஒரு கட்டத்தில் கையிருப்பைக் கொண்டு குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவே வீட்டுக் கடனை முழுவதுமாக அடைத்து விடலாம் என்று தோன்றக் கூடும்.

இந்த நிலையில் நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய, கவனம் செலுத்த வேண்டிய கோணங்கள் உண்டு. வீட்டுக் கடனுக்கான வட்டிக்கு வருமானவரி விலக்கு உண்டு. இது ஒருபுறம். மறுபுறம் முன்னதாகவே வீட்டுக் கடனை அடைப்பதால் நமக்குச் சேமிப்புத் தொகையாக மிஞ்சும் வட்டிப் பணம். இந்த இரண்டில் எது அதிகம், எது குறைவு என்று யோசித்துப் பார்த்து முடிவெடுக்க வேண்டும்.

முன்பெல்லாம் ஒப்பந்த காலக் கட்டத்துக்கு முன்பாகவே வீட்டுக்கடனை முழுவதுமாகச் செலுத்தினால் அதற்கென்று ஓர் அபராதத் தொகையை நாம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் இப்போதெல்லாம் அப்படிக் கிடையாது. விரைவாக வீட்டுக் கடனைச் செலுத்தி முடிப்பதில் வேறொரு வசதி உண்டு. மற்றொரு வீடு வாங்குவதற்கான வங்கிக் கடனை நீங்கள் பெற முடியும். (ஏற்கெனவே ஒரு வீட்டுக் கடன் இருக்கும்போது உங்களுக்கு மற்றொரு வீட்டுக் கடனை வழங்கப் பெரும்பாலான வங்கிகள் முன்வராது).

முதல் வீட்டுக் கடன் முழுவதும் அடைத்துவிட்டு அந்த வீட்டையும் வங்கிக்கு அடமானமாக அளித்தால் இரண்டாவது வீட்டுக் கடன் அதிகத் தொகைக்கு அளிக்கப்படும் வாய்ப்பு உண்டு. வீட்டுக் கடன் வாங்கி ஐந்திலிருந்து பத்து வருடங்கள் ஆகும் நிலையில் வீட்டுக் கடனை முன்னதாகவே அடைப்பது பற்றி நீங்கள் தீர்மானித்துவிட முடியும். உங்கள் சேமிப்பை வங்கியின் சேமிப்புக் கணக்கில்தான் வைத்திருக்கப் போகிறீர்கள் அல்லது வங்கி வைப்பு நிதியில் போடப் போகிறீர்கள் என்றால் அவற்றில் கிடைக்கும் வட்டி என்பது குறைவாகவே இருக்கும். ஆனால் வீட்டுக் கடனுக்கான வட்டி நிச்சயம் இதைவிட அதிகமாக இருக்கும். எனவே மாதத் தவணையைக் குறிப்பிட்டதைவிட அதிகமாகவே நீங்கள் செலுத்தத் தொடங்குவது நல்லது. இது பின்னர் வீட்டுக் கடனை முன்னதாகவே முழுமையாகச் செலுத்துவதற்கு வசதியாக இருக்கும்.

இதன் மற்றொரு கோணமும் உண்டு. உங்கள் சேமிப்பு மற்றும் வைப்பு நிதியில் போட்ட தொகையை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெற முடியும். ஆனால் வீடடுக் கடனைப் பொருத்தவரையில் வங்கியிடம் ‘தவணைத் தொகையைவிட அதிகமாகவே நான் கட்டியிருக்கிறேன். எனவே எனக்கு அந்த அதிகப்படித் தொகையைத் திருப்பிக் கொடுங்கள். இப்போது அதற்குத் தேவை வந்திருக்கிறது’ என்று நீங்கள் கேட்க முடியாது. எனவே உடனடியாகச் சில வருடங்களுக்கு எந்தப் பெரிய செலவும் இல்லை எனும் நிலையில்தான் நீங்கள் தவணைத் தொகையை அதிகரித்துக் கட்டுவதும், வீட்டுக் கடனை முன்னதாகவே முழுவதுமாகச் செலுத்துவதும் புத்திசாலித்தனம்.

இது நிலையில்லாத உலகம். எதிர்பாராத செலவுகள் வரத்தான் செய்யும். முக்கியமாக ஆரோக்கியம் என்ற கோணத்தில். எனவே அதற்கான ஒரு தொகையை ஒதுக்கி வைத்துக் கொண்டு அதற்கான காப்பீடுகளை மேற்கொண்டு அதற்குப் பிறகே வீட்டுக் கடனை முன்னதாகச் செலுத்துவதில் கவனம் செலுத்துதல் நல்லது.

நீங்கள் தொழிலதிபராகவோ, வியாபாரியாகவோ இருந்தால் ஏற்றங்களும், சரிவுகளும் மாறி மாறி இருக்க வாய்ப்பு உண்டு. தொடர்ந்து சரிவு என்றாலும் ஒரு வருடத்துக்காவது சமாளித்துக் கொள்ளும்படியான தொகையை ஒதுக்கி வைத்துக் விட்டு மீதியைக் கொண்டு அதிகத் தவணைத் தொகையைச் செலுத்துவது நல்லது. இருக்கும் வேலையை விட்டுவிட்டு சிறிது காலத்திற்குப் பிறகு இன்னொரு வேலையைத் தேடிக்கொள்ளும் பழக்கம் கொண்டவர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

வங்கிக் கடனுக்கான வட்டியைவிட அதிக வட்டியில் வேறு யாரிடமாவது கடன் வாங்கியிருந்தால் அதை முதலில் செலுத்திவிடப் பாருங்கள். வீட்டு வங்கிக் கடனை முன்னதாகவே செலுத்துவதுகூட ஒரு வகை முதலீடுதான். முன்னதாகவே வீட்டுக்கடனைச் செலுத்துவதில் வேறொரு சாதகமும் உண்டு. வீட்டின் அசல் ஆவணங்கள் உங்கள் கைக்கு முன்னதாகவே வந்து சேரும். என்றாலும் வீட்டுக் கடனை அடைத்ததும் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்களில் ஒன்று இந்த ஆவணங்களைச் சரிபார்ப்பதுதான். பத்திரங்களின் எல்லாப் பக்கங்களும் சேதமில்லாமல் இருக்கிறதா என்பதைப் பார்த்து விட்டு வங்கி அளிக்கும் படிவத்தில் கையெழுத்திடுங்கள்.

வங்கியிலிருந்து ஒரு தடையில்லாச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதாவது அந்த வீட்டை நாம் எந்தப் பரிவர்த்தனைக்கு உட்படுத்தினாலும் வங்கிக்கு இனி அதில் எந்த மறுப்பும் இல்லை என்பதற்கான சான்றிதழ் இது. கடனை அடைத்த சுமார் ஒரு மாதத்தில் வங்கி உங்களது சிபில் ஸ்கோரை மதிப்பு அதிகமாகும். இப்படிச் செய்வதன் மூலம் வருங்காலத்தில் எந்த வங்கியிலிருந்தும் வீட்டுக்கடன் பெறுவது எளிது. சார்பதிவாளர் அலுவலகத்தலிருந்து புதிதாக ஒரு ‘வில்லங்கச் சான்றிதழ்’ (உங்கள் வீட்டுக்கானது) பெற்றுக் கொள்வது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x