Published : 20 Jun 2015 12:19 PM
Last Updated : 20 Jun 2015 12:19 PM

ஒரே நிலத்தை இருவருக்கும் பதிவுசெய்ய முடியுமா?

வாரிசு இல்லா நில உரிமையாளார் வைத்திருந்த 3 செண்ட் நிலத்தில் இருந்து 2 செண்ட் நிலத்தை வாங்கினேன். மீதி ஒரு செண்ட் நிலம் விற்கப்படாமல் அப்படியேதான் இருந்தது. ஆனால் அந்த மொத்த நிலத்தின் தாய்ப் பத்திரத்தை என்னிடம்தான் கொடுத்திருந்தார். இப்போது அவரும் அவருடைய மனைவியும் காலமாகிவிட்டார்கள். மீதி உள்ள ஒரு செண்ட் நிலத்தை நான் உரிமையாக்கிக்கொள்ள முடியுமா? அதற்கான சட்ட வழிமுறை என்ன?

- மு. சாத்தையா, கரூர்

மீதி உள்ள 1 செண்ட் நிலத்தை நீங்கள் எந்த காலத்திலும் சட்டப்படி உரிமையாக்கிக் கொள்ள முடியாது. நிலத்தின் உரிமையாளர் இந்து மதத்தை சேர்ந்தவராக இருந்தால் இந்து வாரிசுரிமை சட்டப்படி அந்த நிலம் முதலில் அவரது முதல் நிலை வாரிசுதாரர்களுக்கே உரிமையாகும்.

ஒரு வேளை அவருக்கு முதல் நிலை வாரிசுதாரர்கள் இல்லாவிடில் அந்த நிலம் அவரது இரண்டாம் நிலை வாரிசுதாரர்களுக்கு உரிமையாகும். அவ்வாறு இரண்டாம் நிலை வாரிசுதாரர்களும் இல்லாமல் போனால் அந்த நிலம் அவரது மூன்றாம் நிலை வாரிசுதாரர்களுக்கு உரிமையாகும். ஒருவேளை மூன்றாம் நிலை வாரிசுதாரர்களும் இல்லாமல் போனால், அந்த நிலம் அரசங்கத்துக்கு சொந்தமாகிவிடும்.

எங்கள் பூர்வீகச் சொத்தில் 20 செண்ட் நிலத்தை நானும் என் தம்பியும் எங்கள் இருவர் பெயரிலும் கூட்டுப் பட்டா செய்துகொண்டோம். என் பாகமான 10 செண்ட் நிலத்தை நான் என் பெயரில் உட்பிரிவுசெய்ய, என் தம்பியின் ஆட்சேபணையில்லா கடிதம் (NOC) அவசியமா?

- ஆர். ஜோதி சரோஜா, கரூர்

உங்களுக்கும் உங்கள் தம்பிக்கும் பொதுவில் பாத்தியப்பட்ட 20 செண்ட் நிலத்துக்கு உங்கள் இருவர் பெயரிலும் கூட்டுப்பட்டா தாக்கலாகி இருக்கும் பட்சத்தில், உங்கள் தம்பியின் ஆட்சேபணையில்லா கடிதத்தினை வைத்துக்கொண்டு உங்கள் பாகமான 10 செண்ட் நிலத்தை நீங்கள் உங்கள் பெயரில் உட்பிரிவு செய்து கொள்ள முடியாது.

நீங்களும் உங்கள் தம்பியும் உங்களுக்கு பொதுவில் சொந்தமான 20 செண்ட் நிலத்தினை பாகப்பிரிவினை செய்துகொண்டு பாகப்பிரிவினை பத்திரம் இயற்றிக்கொள்ள வேண்டும். அந்த பாகப்பிரிவினை பத்திரத்தில் உங்கள் பாகத்துக்கு வரும் 10 செண்ட் நிலம் நான்கு பக்க எல்லைகளோடு சொத்து விபரத்தில் விவரிக்கப்பட்டிருக்கும்.

அந்த சொத்து விபரத்தில் விவரிக்கப்பட்டுள்ள உங்கள் பாகச் சொத்துக்கு உட்பிரிவு செய்து தனிப்பட்டா வாங்க நீங்கள் வருவாய்த்துறையினரை அணுகும் பட்சத்தில், அவர்களும் உங்கள் பாக நிலத்தினை நேரில் வந்து அளந்து பார்த்து, நான்கு மூலைகளிலும் எல்லைக்கற்களைப் பதித்து, நிலத்தை உட்பிரிவு செய்து உங்கள் பெயரில் தனிப்பட்டா வழங்குவார்கள்.

காஞ்சிபுரம் அருகே ஒரு கிரவுண்ட் நிலத்தை என் அம்மாவின் பெயரில் வாங்கிப் பத்திரப் பதிவுசெய்துள்ளேன். ஆனால் அதே நிலத்தை வேறு ஒருவரும் உரிமைகொண்டாடுகிறார். அவரும் பதிவுசெய்துள்ளதாகச் சொல்கிறார். இருவரும் பதிவுசெய்துள்ளோம் என்றால் அந்த நிலம் யாருக்குச் சொந்தம்?

- சாமிநாதன், காஞ்சிபுரம்

இருவரில் யாருடைய கிரையப் பத்திரம் முதலாவதாக பதிவு செய்யப்பட்டுள்ளதோ அவருக்கே அந்த நிலம் சொந்தமாகும். ஏனென்றால் முதலில் ஒருவருக்கு கிரையப் பத்திரம் பதிவு செய்து கொடுத்தபிறகு, சொத்தின் முந்தைய உரிமையாளர் தனக்கு அந்த சொத்தில் உள்ள அனைத்து உரிமைகளையும் இழந்துவிடுகிறார். ஆகையால் அவரால் வேறொருவருக்கு இரண்டாவதாகப் பதிவு செய்யப்படும் கிரையப் பத்திரம் சட்டப்படி செல்லாததாகும்.

- எஸ்.பி.விஸ்வநாதன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்.

வீடு, மனை வாங்குவதில், விற்பதில் உள்ள சட்டம் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு/கேள்விகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.பி.விஸ்வநாதன் பதிலளிக்கிறார்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: sonthaveedu@thehindutamil.co.in

தபாலில் அனுப்ப: சொந்த வீடு, தி இந்து (தமிழ்),

கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600002

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x