Published : 04 Jun 2016 01:29 PM
Last Updated : 04 Jun 2016 01:29 PM
மழை நீர் தெருவைச் சூழ்வதும், குடியிருப்பைச் சூழ்வதும் எவ்வளவு அச்சுறுத்தலான விஷயம் என்பதை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் போன்ற மாவட்ட மக்கள் கடந்த டிசம்பரில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் மூலம் உணர்ந்துகொண்டனர்.
பெரு மழை பெய்தால் வெள்ளம் சூழ்வதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் சிறு மழைக்கே குடியிருப்புப் பகுதியை வெள்ளம் சூழ்ந்தால் அந்தப் பகுதியின் நிலைமை என்னவாக இருக்கும்? அப்படியான துயரத்தைத் தொடர்ந்து சந்தித்துவருவதாகச் சொல்கிறார்கள், சித்தாலப்பாக்கம் அருகே நூகாம்பாளையம் பகுதில் அமைந்திருக்கும் தனியார் நகரியப் பகுதியில் வசித்துவருபவர்கள்.
இந்த நகரியத்தில், வில்லாக்கள், அடுக்குமாடி வீடுகள் என சுமார் 1200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகிறார்கள். மொத்தத்தில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரியவர்களும் குழந்தைகளும் வசித்துவரும் இந்த நகரியத்தில் சிறு மழை பெய்தாலே அவர்களது நிலை பெருங்கஷ்டமாகிவிடுகிறது என்கிறார்கள் அங்கே குடியிருப்பவர்கள்.
சென்னை போன்ற பெருநகரத்தில், நகரத்துக்குள்ளே நிலமெல்லாம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் சென்னையின் புறநகர்ப் பகுதியில் அநேகக் குடியிருப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இத்தகைய குடியிருப்புகளில் அடுக்குமாடி வீடுகளும், தனிப்பட்ட வில்லாக்களும் தனியார் கட்டுமான நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு விற்பனைசெய்யப்படுகின்றன.
லட்சங்களிலும் கோடிகளிலும் விலை கொண்ட வீடுகளை வாங்கி அத்தகைய வீடுகளில் குடியேறுகிறார்கள். சென்னையில் வீடென்னும் கனவை நிறைவேற்றிக்கொள்ளக் கிடைக்கும் வாய்ப்பை யாரும் தவறவிட விரும்புவதில்லை.
கட்டுமான நிறுவனங்களும் புறநகர்ப் பகுதியில் குடியிருப்புத் திட்டங்களை உருவாக்குவதில் ஆர்வத்துடன் ஈடுபட்டுவருகின்றன. சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இப்படி உருவானதுதான் இந்த நகரியம். இதில் வில்லாக்கள், அபார்ட்மெண்டுகள் ஆகியவை உள்ளன.
இந்த நகரியத்தில் குடியேறிய நாள் முதலாகவே மழை நேரத்தில் குடியிருப்பின் சில பகுதிகளை நீர் சூழ்வது வாடிக்கையாகியிருக்கிறது. வடிகால் வசதி, கழிவுநீர் செல்வதற்கான வசதி உள்ளிட்ட அடிப்படையான விஷயங்களே கட்டுமான நிறுவனத்தால் முறையாகச் செய்து தரப்படவில்லை என்று அங்கே குடியிருப்பவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆரம்பத்தில் சிறிதாக இருந்த இப்பிரச்சினை நாளாக நாளாக அதிகமாகியுள்ளது. அதுவும் கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த கடுமழையின் போது இந்தப் பகுதியினர் அனுபவித்த துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல என்கிறார்கள்.
அதன் பின்னரும்கூட மழை நீர் சூழாமல் இருப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை என்கிறார்கள் அவர்கள்.
இந்தப் பகுதியின் அருகே அமைந்திருக்கும் 40 மீட்டர் கால்வாயை இணைக்க வேண்டிய ஓடையொன்றை ஆக்கிரமித்து நகரியம் அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் மேலும் இதையொட்டிய பிற பகுதிகளிலும் கட்டுமான வேலைகள் நடைபெறுவதால் இயல்பாகவே தாழ்வான பகுதியான இந்த நகரியத்தில் எளிதாகத் தண்ணீர் புகுந்து சிக்கல்களை உருவாக்கிவிடுகின்றன என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
கடந்த மே மாதத்தின் மத்தியில் பெய்த மழையின் போதும் குடியிருப்புப் பகுதியில் முழுவதும் நீர் சூழ்ந்து பெரிய துன்பத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நகரியத்தின் வடிவமைப்பிலேயே குறைபாடுகள் உள்ளதென்றும், கழிவுநீரை வெளியே கொண்டுசெல்வதற்கான ஏற்பாடுகளோ, வடிகால் வசதிகளோ இல்லை இல்லை என்றும் கவலை தெரிவிக்கிறார்கள் இங்கே குடியிருப்பவர்கள்.
இவர்கள் நிலைமையே இப்படி இருக்கும்போது அருகிலேயே தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடைபெறுவதைக் குறித்த வருத்தத்தையும் பகிர்ந்துகொள்கிறார்கள். இந்தப் பிரச்சினையைக் களைவதற்காக அவர்களும் தொடர்ந்து போராடிவருகிறார்கள்.
ஆனால் கட்டுமான நிறுவனம் தங்களது துன்பத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை என்பது அவர்கள் எண்ணம். கட்டுமான நிறுவனம் எல்லா வகையான உள்கட்டமைப்பும் செய்து தருவதாக உத்தரவாதம் தந்திருந்தும் அதை நிறைவேற்றத் தவறிவிட்டதாக இந்த நகரியத்தினர் கூறுகிறார்கள்.
தனியார் கட்டுமான நிறுவனங்கள் மூலம் வீடுகளை வாங்கும்போது எல்லா வகையான வசதிகளும் முறையாகச் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதைக் கவனித்துப் பார்த்து வீடுகளை வாங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது இந்த விவகாரம்.
கட்டுமான நிறுவனம் என்ன சொல்கிறது? பதிலுக்குக் காத்திருப்போம்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT