Published : 29 Apr 2017 10:50 AM
Last Updated : 29 Apr 2017 10:50 AM
முடிவடைந்த 2016-ம் ஆண்டு இந்தியாவின் ரியல் எஸ்டேடுக்குச் சாதகமானதாக இருக்கவில்லை. சிமெண்ட் விலையேற்றம், மணல் தட்டுப்பாடு, திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் உள்ள காலதாமதம் உள்ளிட்ட பல பிரச்சினைகள், உலகப் பொருளாதார தேக்க நிலை ஆகியவை இதற்குப் பின்னாலுள்ள காரணங்கள் எனச் சொல்லப்படுகின்றன.
ஆனால் இந்த 2017-ன் முதல் கொஞ்சம் சாதகமான தொடக்கமாக இருப்பதாக அத்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்திய அளவில் இந்த ஆண்டு சாதகமான தொடக்கம் என்பது நம்பும்படியான கூற்று. ஆனால் தமிழ்நாட்டு அளவில் சில மாதங்களாக ரியல் எஸ்டேட் தொழிலும் கட்டுமானத் தொழிலும் மோசமான பின்னடவைச் சந்தித்துவருகின்றன. சிமெண்ட் விலையேற்றமும் தமிழ்நாட்டில் உண்டு. மணல் குவாரிகளின் முறையற்ற செயல்பாட்டினால் மணல் தட்டுப்பாடும் இருக்கிறது. இவையெல்லாம் போதாதென்று மனைகளைப் பதிவுசெய்வதில் சில புதிய கட்டுப்பாடுகளை உயர் நீதிமன்றம் விதித்துள்ளது.
பணமதிப்பு நீக்கம் சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு ஒட்டுமொத்தமாகவே இந்தியத் தொழில்துறையைப் பாதிப்பை விளைவித்தாகச் சொல்லப்பட்டது. அவற்றில் ரியல் எஸ்டேட் துறையும் ஒன்று. இந்தப் பின்னடைவு ஒரு பக்கம் இருந்தாலும் ரியல் எஸ்டேட் சட்டம் நடைமுறைக்கு வந்ததால் கட்டுமான ஒப்பந்தப் பதிவு கட்டாயமாக்கப்பட்டது. இதனால் பதிவுக்கான கட்டணம் முன்பைவிடக் கூடுதலானது. இந்தச் சுமையும் வாடிக்கையாளர்களையே சேரும் என்பதாலும் புதிய திட்டங்கள் தொடங்கப்படாமல் இருந்தன.
இவையெல்லாவற்றையும் தாண்டி, சென்னை ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில் சாதகமான தொடக்கத்தைப் பெற்றுள்ளது. ரூபி பில்டர்ஸ் கட்டுமான நிறுவனத்தின் தலைவர் ரூபி மனோகர் வீடு வாங்குவதற்கான மனநிலை இப்போது வாடிகையாளர்களிடம் கூடியுள்ளதாகக் குறிப்பிடுகிறார். அதாவது வீடு இப்போது வாங்கினால் குறைவான விலைக்குக் கிடைக்கும் என வாடிக்கையாளர்கள் நினைக்கிறார்கள். குறிப்பாக, தென் சென்னைப் பகுதியில் இதனால் வீடு விற்பனை கூடியுள்ளது. சமீபத்தில் வெளியான ப்ராபர்டி டைகர் என்னும் ரியல் எஸ்டேட் ஆய்வறிக்கையும் இதை உறுதிப்படுத்துகிறது.
சென்னையில் 2017 ஜனவரியிலிருந்து மார்ச் வரை ரியல் எஸ்டேட் 3-லிருந்து 5 சதவீதம்வரை அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை சொல்கிறது. இந்திய அளவில் 13 சதவீதம்வரை அதிகரித்துள்ளதாகச் சொல்கிறது. 51 ஆயிரத்து எழுநூறு வீடுகள் விற்பனையாகியுள்ளன. முடிவடைந்த 2016-ம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் 43 ஆயிரத்து ஐநூறு வீடுகள்தாம் விற்பனையாகியுள்ளன.
கட்டுமான ஒப்பந்தப் பதிவைக் கட்டாயமாக்கியது கட்டுமானத் தொழிலில் பின்னடவை ஏற்படுத்தியதாகச் சொல்லப்பட்டாலும் அது வாடிக்கையாளர் மத்தியில் ஒரு பாதுகாப்பு உணர்வைக் கொண்டு வந்துள்ளது. அதனால் அவர்கள் முன்பைக் காட்டிலும் துணிச்சலுடன் வீடு வாங்க முன்வருகின்றனர்.
ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகள் தென் சென்னைப் பகுதியில் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. வீடு விலை குறைந்தபாடில்லை என்றாலும் வீட்டு விலை அதிகரிக்கவில்லை. பத்திரப்பதிவு கட்டுப்பாடுகள், வழிகாட்டும் மதிப்பு போன்றவை தளர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்ற நம்பிக்கை பொதுவாக இருக்கிறது. அப்படியானால் அந்தச் சமயத்தில் வீட்டு விலை அதிகரிக்கக்கூடும். அதனால் வீடு வாங்குவதற்கு இதுதான் சரியான நேரம் என்ற மனநிலை மக்களிடம் இருப்பதால் இப்போது வீடு வாங்குவது அதிகரித்துவருகிறது.
சென்னை, மும்பை, பெங்களூரூ, அகமதாபாத், ஹைதராபாத், குர்கான், கொல்கத்தா, நொய்டா, பூனே ஆகிய ஒன்பது நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புதிய வீட்டுக் குடியிருப்புத் திட்டம் கடந்த காலாண்டுகளில் மிக அதிகமாக 19 சதவீதம் அதிகரித்துள்ளது. 51 ஆயிரத்து ஐநூறு புதிய திட்டங்கள் இந்த 2017 முதல் காலாண்டில் தொடங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே முதல் காலாண்டில் 43 ஆயிரத்து இருநூற்றி ஐம்பது திட்டங்கள்தாம் தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலமும் இந்தச் சாதகமான தொடக்கம் இந்த ஆண்டு முழுவதும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT