Published : 25 Oct 2014 06:27 PM
Last Updated : 25 Oct 2014 06:27 PM

வீட்டுக்கு மின் இணைப்பு பெற...

உங்கள் கனவு இல்லத்துக்கு விளக்கேற்ற மின் இணைப்பு அவசியம் இல்லையா? அது மட்டுமில்லை. இன்றைக்குப் பலவிதமான நம் அன்றாடப் பணிகளும் மின்சாதனப் பொருள்களைச் சார்ந்தே இருக்கின்றன.

மின் சக்தி இன்றி இந்த நவீன உலகம் சாத்தியமில்லை. சரி, இந்த மின் இணைப்பை எப்படிப் பெற வேண்டும் என்பதற்குச் சில வழிமுறைகள் இருக்கின்றன.

இதற்கான விண்ணப் படிவம் மின்சார வாரிய அலுவலகங்களில் கிடைக்கும். வீட்டுக்கு மின் இணைப்பு வாங்க விண்ணப்பம் படிவம்-1-ல் வாங்கிப் பூர்த்திசெய்து தர வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்திற்கு எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

# விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சில அடிப்படைத் தகவல்களுக்கு உரிய முறையில் பதிலளிக்க வேண்டும். மின் இணைப்பு தேவைப்படும் இடத்திற்கான உரிமையாளர் என்பதற்கான உரிய சான்றைக் கொடுக்க வேண்டும். அதாவது பத்திரப் பதிவுச் சான்றிதழ் போன்ற தேவையான சட்டரீதியில் செல்லத்தக்க ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

# வீட்டுக்குச் சொந்தாக்காரராக இல்லாமல் இருந்தாலும் மின் வழங்கல் கேட்க முடியும். அதற்கு விண்ணப் படிவம் ஐந்து சில விதிகளை வகுத்துள்ளது. வீட்டின் உரிமையாளர் இல்லாமல் மின் இணைப்பு கேட்கும்போது சம்பந்தப்பட்ட நபர், அதற்கான படிவமான 5-ஐ வாங்கி அதில் வீட்டின் சட்டரீதியிலான உரிமையாளரிடம் சம்மதக் கடிதம் பெற வேண்டும். சட்டரீதியிலான உரிமையாளார் சம்மதக் கடிதம் தர மறுத்துவிட்டால், சட்டப்படி அந்த இருப்பிடத்தின் பொறுப்பேற்றுள்ளதற்கான சான்றை மின் இணைப்பு கேட்கும் நபர் தரவேண்டும்.

# மின் இணைப்பு கோருவோர் மாநில அரசின் இதர சட்டங்களுக்கு உட்பட்டுப் புதிய கட்டுமானம் அல்லது சரி செய்யும் பணிகளை மேற்கொள்ளும்போது பெறப்பட வேண்டிய ஒப்புதல் அல்லது ஒப்பளிப்பு அல்லது அனுமதி அல்லது இசைவு ஆகியவற்றை உரிய அரசு அதிகாரியிடமிருந்து பெற வேண்டும். மின் இணைப்பு கோருவோர் மின்னிணைப்பு பெறுவதற்கான சிவில் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் ஆணையினைக் கடைபிடிக்க வேண்டும்,

# பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பகுதி அலுவலகத்தில் நேரடியாகவோ தபால் மூலமோ கொடுத்து உரிய ஒப்புகை பெற்றுக்கொள்ள வேண்டும்.

# விண்ணப்பித்தைப் பதிவுக்கட்டணம் செலுத்திப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

# மின் இணைப்புக்கான விண்ணப்பத்தை அளித்தவுடன், மின் இணைப்பு கோருவோருக்கு அப்பகுதி பொறியாளர்களை அணுகி எளிதாக ஆய்வுசெய்ய ஏதுவாக உள்ள தரைதளத்தில் இணைப்பு கொடுக்க வேண்டிய இடத்தை/மீட்டர் பொருத்துவதற்கான இடத்தை முடிவு செய்து கொள்ள ஒரு நோட்டீஸ் அனுப்பப்படும்.

# எல்லா அடுக்கு மாடிக் கட்டிடங்களிலும் எத்தனை தளங்கள் இருந்தாலும் தரைதளத்தில்தான் மீட்டர் பொருத்துவதற்கு இடம் கொடுக்கப்பட வேண்டும்.

# மின் இணைப்பு கோருவோர் அதற்குண்டான கட்டணங்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டி கட்டணம் செலுத்துவதற்கான சீட்டு/அறிவுப்பு/கடிதம் அனுப்பப்படும்.

# மின் இணைப்பு கொடுப்பதற்கான அனைத்துக் கட்டணங்களும் பெறப்பட்ட பிறகே மின் இணைப்பு கொடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

# மின் இணைப்பு கோருவோர், தன்னுடைய இடத்தில் இலவசமாக மின் வாரியத்திற்கு மின்கம்பங்கள் நடுவதற்கு விட வேண்டும். மற்றும் மின் இணைப்பு கோருவோரே தன்னுடைய சொந்த செலவிலேயே மின் கம்பங்கள், கம்பிகள் போன்றவற்றை அமைப்பதற்கான வழித் தடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

# தங்களுடைய கட்டிடத்தில் அனைத்து வயரிங்குகளையும் உரிய அரசு அங்கீகாரம் பெற்றவர்களால் செய்து முடிக்க வேண்டும். மின் கம்பியமைப்பு பணி முடிந்ததும், மின் இணைப்புக் கோரும் நபர், வீட்டுக்குள் மின் இணைப்புக்கான வேலை முடிந்துவிட்டதை அறிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மின்சார வாரியப் பொறியாளர் ஆய்வு மற்றும் சோதனை செய்வதற்கு ஏதுவாக உள்ளதைத் தெரிவிக்க வேண்டும்.

# மின் இணைப்பு கொடுப்பதற்கான பணிகள் நிறைவு பெற்றுஆய்வுசெய்த பின், உரிய காலத்திற்குள் இணைப்பினைப் பெற்றுக் கொள்ளுமாறு மின் இணைப்பு கோருவோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x