Published : 27 May 2017 11:51 AM
Last Updated : 27 May 2017 11:51 AM
தொங்கு விளக்குகளின் (Pendant Lights) சிறப்பம்சம் என்னவென்றால் அவை வீட்டுக்கு வெளிச்சத்தை அளிப்பதுடன் வீட்டின் அலங்கார அம்சமாகவும் மாறிவிடுகின்றன. இந்த விளக்குகள் நேர்த்தியான, நுட்பமான, கூர்மையான, தனித்துவமான வடிவமைப்புகளில் தற்போது கிடைக்கின்றன. வீட்டின் வடிவமைப்போடு இந்த விளக்குகளைப் பொருத்துவதும் எளிமையானது. இந்த விளக்குகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சில ஆலோசனைகள்...
ஆடம்பரமும் நேர்த்தியும்
சாப்பாட்டு மேசைப் பகுதியை அலங்கரிப்பதற்கு இந்தத் தொங்கும் விளக்குகளைப் பயன்படுத்துவது ஏற்றதாக இருக்கும். வீட்டுக்கு நவீனத் தோற்றத்தைக் கொடுக்க விரும்புபவர்கள் இந்த வகையான விளக்குகளைத் தயக்கமின்றித் தேர்ந்தெடுக்கலாம். ஆடம்பரமும் நேர்த்தியும் கலந்த வடிவமைப்புகளில் தொங்கும் விளக்குகள் சாப்பாட்டு மேசைக்கும் வரவேற்பறைக்கும் பொருத்தமானதாக இருக்கும். இந்த விளக்குகளை வட்ட வடிவில் தேர்ந்தெடுக்கும்போது, அது சதுர, செவ்வக வடிவங்களாலான அறைக்கலன்கள் நிரம்பியிருக்கும் அறைக்குப் புதுப் பரிமாணத்தைக் கொடுக்கும்.
வரிசை விளக்குகள்
இந்தத் தொங்கும் விளக்குகளைப் பொதுவாக வரிசையாக வடிவமைப்பது எளிமையானது. அப்படி வரிசையாக விளக்குகளை அமைக்கும் முறையைத் தேர்ந்தெடுக்கும்போது அவற்றைப் பொருத்தும் இடத்தைச் சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். சமையல் மேசை, சாப்பாட்டு மேசை போன்ற இடங்களில் இந்தத் தொங்கும் விளக்குகளை அமைப்பது சரியானதாக இருக்கும். இவற்றை ஒரே வண்ணத்தில் தேர்ந்தெடுப்பதைவிடப் பல வண்ணங்களில் தேர்ந்தெடுப்பது நல்லது.
கூட்டுக்குள் விளக்குகள்
வித்தியாசமான வடிவமைப்புகளில் தேர்ந்தெடுக்க நினைப்பவர்கள் வித விதமான உலோக வடிவங்களில் கிடைக்கும் தொங்கும் விளக்குகளைத் தேர்வு செய்யலாம். கூரை உயரமாக இருக்கும் அறைகளுக்கு இந்த வகையான தொங்கும் விளக்குகள் பொருந்தும். இப்போது கூடு போன்று வடிவமைக்கப்படும் தொங்கும் விளக்குகள் பிரபலமாக இருக்கின்றன.
அடுக்கு விளக்குகள்
இந்த விளக்குகளை எப்படிப் பொருத்துகிறோம் என்பதில்தான் அவற்றின் அழகு அடங்கியிருக்கிறது. அத்துடன் வண்ணங்களையும் வடிவமைப்புகளையும் அறைக்குத் தகுந்த படி தேர்ந்தெடுத்துவிட்டால் அது அறையின் தன்மையை எளிதாக மாற்றி விடும். பல வண்ணங்களால் வீட்டை அலங்கரிக்க நினைப்பவர்கள் இந்தத் தொங்கும் விளக்குகளை அடுக்காகப் பொருத்தலாம். படிக்கட்டுகள் இருக்கும் பகுதியில் இப்படி அடுக்குகளாக இந்த விளக்குகளை அமைப்பது சிறந்தது.
வண்ணங்களின் மாயாஜாலம்
சாப்பாட்டு அறையில் இந்த விளக்குகளை அமைக்கும்போது, சாப்பாட்டு மேசையின் தன்மைக்கும் வண்ணத்துக்கும் ஏற்றபடி அமைப்பது அவசியம். உங்களுடைய சாப்பாட்டு மேசை உலோகத்தாலானது என்றால் உலோகத்தாலான தொங்கும் விளக்குகளைத் தேர்ந்தெடுப்பதுதான் சரியானதாக இருக்கும். அப்படியில்லாவிட்டால், சுவரில் இருக்கும் ஓவியங்கள், சாப்பாட்டு மேசை நாற்காலிகள் என ஏதாவது ஒன்றின் வண்ணத்துடன் இந்தத் தொங்கும் விளக்குகளின் வண்ணம் பொருந்தும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
படுக்கையறை விளக்குகள்
சாப்பாட்டு மேசை, சமையல் மேசை, வரவேற்பறை போன்ற இடங்களில் அமைப்பதைப் போலப் படுக்கையறையில் அமைப்பதற்கும் இந்தத் தொங்கும் விளக்குகள் ஏற்றவை. படுக்கையின் இரண்டு புறங்களிலும் இந்த விளக்குகளை அமைக்கலாம்.
மூலை விளக்குகள்
ஒரே ஒரு தொங்கும் விளக்கைப் பொருத்திக்கூட ஓர் அறையின் தோற்றத்தைத் தலைகீழாக மாற்றிவிடலாம். அந்த வகையில், அறையின் மூலையில் இந்த விளக்கை அமைப்பது பொருத்தமாக இருக்கும். அறைச் சுவரின் நேரெதிரான வண்ணத்தில் விளக்கு இருந்தால் கூடுதல் சிறப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT